சைனோஃபார்ம் தடுப்பு மருந்தின் எதிர்ப்பு சக்தி மிகவிரைவாக வீழ்ச்சியடைகிறது – ஆய்வு

கொறோனா தொற்றை முறியடிக்கவென உடலில் ஏற்றப்படும் தடுப்பு மருந்துகளின் செயற்திறன் சில மாதங்களின் பின்னர் குறைந்துவிடுவது வழக்கம். இம் மருந்துகளினால் உடலில் உருவாக்கப்படும் எதிர்ப்பொருள்களின் (antibodies) எண்ணிக்கை காலம் போகப்போக அருகிவிடுவதே இதற்குக் காரணம். அந்த வகையில் இதுவரை பாவனையில் இருக்கும் தடுப்பு மருந்துகளின் பலத்தை ஒப்பிட்டுப் பார்த்தபோது சைனோஃபார்ம் மூன்று மாதங்களிலேயே கணிசமான அளவுக்கு அதன் பலத்தை இழந்துவிடுகின்றது என ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இலங்கையின் சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் செய்த இந்த ஆய்வின்படி மொடேர்ணா தடுப்பு மருந்தே அதிகபட்ச எதிர்ப்புசக்தியை நீண்ட நாட்களுக்குத் தக்கவைக்கிறது என்றும், அதற்கடுத்தபடியாக ஸ்புட்னிக் V, அஸ்ட்றாசெனிக்கா, ஸ்புட்னிக் V லைட் (ஒரு டோஸ் மட்டும்), இறுதியாக சைனோஃபார்ம் எனவும் இவற்றின் பலவரிசை காணப்படுகிறது.



இலங்கையில் மிகவும் பரவலாகப் பாவிக்கப்பட்ட தடுப்பு மருந்து சைனோஃபார்ம் ஆகும். நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், அவர்களுக்கு ஏற்படும் மரணத்தையும் வெகுவாகக் குறைப்பதற்கு இம் மருந்து உதவியிருந்தது எனினும் அதனால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு சக்தி மிக விரைவாகவே அருகிப் போகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால் எல்லா தடுப்பு மருந்துகளை எடுத்தவர்களும் மூன்றாவது ஊக்கி மருந்தாக (booster dose) ஃபைசர் மருந்தை எடுக்கும்படி அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

தடுப்பு மருந்தை எடுத்து மூன்று மாதங்களின் பின்னர் நோயாளிகளின் உடலில் காணப்பட்ட எதிர்ப்பொருள் செயற்திறனை ஆராய்ந்தபோது மொடேர்ணா 99.5%, அஸ்ட்றாசெனிக்கா 94%, ஸ்புட்னிக் V 72-76%, சைனோஃபார்ம் 38.1 – 68.3% என்ற வீதத்தில் இருந்தது என இவ்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதுவரை தொற்றிய வைரஸ் திரிபுகளில் அல்ஃபா (B.1.1.7), பேற்றா (B.1.351.1) ஆகியவற்றுக்கு எதிரான எதிர்பார்க்கப்பட்ட அளவு முழுமையான பாதுகாப்பையும், டெல்ற்றா (B.1.617.2) திரிபிற்கு எதிராக 80% பாதுகாப்பையும் மொடேர்ணா தடுப்பு மருந்து தருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வரிசையில் அடுத்ததாக ஸ்புட்னிக் V, அஸ்ட்றாசெனிக்கா ஆகியனவும் இறுதியாகவே சைனோஃபார்ம் இருப்பதாகவும் இவ்வாய்வு மேலும் தெரிவிக்கிறது.