சைனோஃபார்ம் ஊசிகளைப் போட்ட, மத்திய கிழக்கு செல்லும் இலங்கைப் பணியாளர்கள் ஃபைசர் ஊக்கி ஊசியையும் போட்டுக்கொள்ளவேண்டும்
இரண்டு சைனோஃபார்ம் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் கட்டார் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பணி நிமித்தம் செல்வதாகவிருந்தால், அவர்கள் ஃபைசர் ஊக்கி (booster) ஊசியையும் போட்டுக்கொள்வது அவசியம் என அந் நாடுகள் அறிவித்துள்ளன.
சைனோஃபார்ம் தடுப்பூசியின் செயற்திறன் போதாமை பற்றி ஏற்கெனவே பல நாடுகள் அச்சம் கொண்டுள்ளதோடு அவ்வூசியைப் போட்டுக்கொண்டு வரும் பயணிகள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக பெருந்தொகையானவர்கள் அங்கு செல்வதற்கு விண்ணப்பித்துள்ளனர். இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய அங்கமாக வெளிநாட்டுப் பணியாளர் இருக்கின்றனர். இறுதியாகக் கிடைத்த புள்ளிவிபரப்படி இப்படியான பணிகளுக்குச் செல்வதற்காக 20,000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களில் 8,000 பேர் மட்டுமே ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றவர்களாவர்.
இதன் காரணமாக, வெளிநாடுகளுக்குப் பணி நிமித்தம் செல்லும் அனைவருக்கும் உடனடியாக ஊக்கி ஊசியைப் போட்டு உதவுமாறு வேலை வாய்ப்புப் பணியக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.