Environmentசிவதாசன்

சேதுசமுத்திரத் திட்டம் | இலங்கைத் தமிழரை வெகுவாகப் பாதிக்கும்

சிவதாசன்

இந்திய மத்திய அரசினால் முன்னெடுக்கப்படவிருக்கும் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக நேற்று (ஜனவரி 12) தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே ஆழ்நீர்க் கப்பற் போக்குவரத்துக்கான பாதை ஒன்றை அமைக்கும் திட்டம் 1860 முதல் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவர் சி.என்.அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கனவுத் திட்டமான இது பிரதமர் நேருவின் நான்காவது ஐந்தாண்டுத் திட்டங்களில் ஒன்றாக அப்போதைய அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இராமர் அணை போன்ற புராணகாலக் கதைகளை நம்பும் மத தீவிரவாதிகளினதும், சூழலியலாளர்களினதும் எதிர்ப்பினால் இத் திட்டம் நிறைவேற முடியாமல் இருந்தது..நேற்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க.வினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பா.ஜ.க. உட்பட பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித்து வாக்களித்ததனால் பிரேரண நிறைவேற்றப்பட்டது.

இத் திட்டத்துக்காக 2004 ஆம் ஆண்டில் 2427 கோடி ரூபாக்களை அப்போதைய மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. ஏறத்தாழ 50 வீதமான வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில் பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு இட்ட தடங்கல்களை அடுத்து வேலைகள் முடக்கப்பட்டிருந்தன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இத் திட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவளித்திருந்தாலும் பின்னர் மனதை மாற்றிக்கொண்டார்.

இத்திட்டத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலமைபுக்களில் ஒன்றான ‘பூவுலகின் நண்பர்கள்’ இத் திட்டத்தினால் சூழலும்முப் பாதிப்பு ஏற்படும் எனவும் இக்கடற்பரப்பில் வாழும் உயிரினங்களினது வாழ்க்கைச் சமநிலை சிதைக்கப்படுவதால் சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுமெனவும் கூறி இத் திட்டத்தைக் கைவிடும்படி மத்திய அரசைக் கேட்டிருக்கிறது. குறிப்பாக மன்னார் வளைகுடாவில் திளைக்கும் பவளப்பாறைகளையும் அதை அண்டிவாழும் கடலுயிரினங்களையும் இது வெகுவாகப் பாதிக்கும் என ‘பூவுலகின் நண்பர்கள்’ தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இத் திட்டம் தமிழ்நாட்டின் பொருண்மிய மேம்பாட்டிற்கு அவசியம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்துசமுத்திரத்தின் பெரும்பாலானா வர்த்தகக் கப்பல்கள் ஆழமற்ற பாக்குநீரிணையைத் தவிர்த்து இலஙகையைச் சுற்றியே போகவேண்டியுள்ளது. இதனால் சீனாவின் கைவசமுள்ள அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பிலுள்ள ஆழ்கடல் துறைமுகங்களையே சர்வதேச கப்பல்கள் பாவிக்கின்றன. இங்கிருந்து இந்தியாவுக்குச் செல்லவேண்டிய 75% மான பண்டங்கள் சிறிய கப்பல்கள் மூலம் (transhipping) கொண்டுசெல்லப்படுகிறது. சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஏற்கெனவே தயாராகவுள்ளை கேரள, தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் சர்வதேச கப்பற் போக்குவரத்துக்கெனப் பாவிக்கப்படலாம். இதன் மூலம் சீனாவின் இலங்கைக் கனவை முறியடித்துவிடலாம் என இந்திய கொள்கைவகுப்பாளர் நம்புகிறார்கள் என அனுமானிக்க முடிகிறது.

இதற்கு இலங்கையும் இந்தியாவும் கொடுக்கப்போகும் சூழல் பரிசு மிகவும் அபரிமிதமாக இருக்கப்போகிறது. குறிப்பாக கடல்வளத்தை நம்பி வாழும் வடமாகாண மக்களுக்கு இது பேராபத்தை உண்டாக்கும். பவளப்பாறைகள் கடல் சிற்றுயிரினங்களின் வளர்ச்சிக்கு பாதுகாப்புக் கொடுத்து வருகின்றன. இச்சூழலின் அமில /காரத் தன்மையை (pH) கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடலட்டை போன்றவை சீன மக்களின் உணவுத் தேவைக்காக அசுர வேகத்தில் அறுவடை செய்யப்படுவதனால் இப்பவளப் பாறைகள் ஏற்கெனவே ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் சேதுசமுத்திரத் திட்டம் வட இலங்கைக்கு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதைவிடவும் பாக்குநீரிணைப் பிரதேசத்தில் தமிழரின் தொன்மையான கலாச்சாரச் சிதைவுகள் மற்றும் இடிபாடுகள் இருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு. இவற்றுக்கான ஆரம்ப கற்கை ஆய்வுகளை இந்திய அகழ்வாய்வுகள் செய்துள்ளனவா என்பதும் தெரியாது.

இத் திட்டத்தின் மூலம் இலங்கை-இந்திய வர்த்தகம் முன்னேற்றம் காணும் என இந்திய தரப்பு சொல்வதை நம்புவது சிரமமாக இருக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு முறிந்துபோவதற்கான சாத்தியங்களே அதிகம். தெற்கிற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களைப் பாதிக்கவிருக்கும் இத் திட்டத்தினால் இலங்கை நிச்சயம் சீனாவின் பக்கம் சரிவதைத் தடுக்க முடியாது. இதனால் தமிழர் தரப்புக்கும் எந்தவித பிரயோசனமுமில்லை. இலங்கைத் தமிழர்களின் அழிவில் இத் திட்டம் இந்தியாவுக்கு பூகோள அதிகார அனுகூலங்களையும் தமிழ்நாட்டுக்கு பொருளாதார அனுகூலங்களையும் பெற்றுக்கொடுக்கும் என்பதே உண்மை. மொத்தத்தில் அரசியல், பண்பாட்டு, சூழல் ரீதியாக இத் திட்டம் தமிழினத்தின் சீரழிவுக்கே வித்திடப் போகிறது.

இலங்கையில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ராஜபக்ச தரப்பு மீளெளுச்சி பெறுவதறகான பிரச்சாரத்தில் இவ்விடயம் முக்கிய அங்கம் வகிப்பதற்கான சாத்தியங்களுமுண்டு. ஏற்கெனவே கனடிய மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட ராஜபக்சக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீதான இலக்குவைக்கப்பட்ட தடைகளை ராஜபக்சக்கள் பிரச்சாரத்துக்கு எடுத்துக்கொண்டுவிட்ட நிலையில் சேது சமுத்திரத் திட்டம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இன்னுமொரு ஆயுதம். அது மட்டுமல்லாது வழமைபோல தமிழருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீற சிங்களத் தலைவர்களுக்கு எப்போதுமே காரணங்கள் காத்திருக்கும். துர்ப்பாக்கியமான தமிழர்கள்.