ArticlesColumnsசிவதாசன்

சேதத்தின் குரல்

சிவதாசன்

தெற்கிலிருந்தொரு சேதத்தின் குரல் ஒலிக்கவாரம்பித்திருக்கிறது- ரணிலின் தொண்டையிலிருந்து!

‘ஒற்றையாட்சியை’ மஹிந்தவின் கைகளிலிருந்து பிடுங்கியெடுத்து ஊரெல்லாம் கொண்டோடப் போகிறார். ‘கண்டி யாத்திரை’ போய் பண்டா- செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியக் காரணமாகவிருந்த ஜே.ஆரின் மருமகனிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட வேண்டியதே.

தமிழர்களின் வாழ்வையும் வளத்தையும் சேதப்படுத்தியே அரசியல் நடத்திவரும் இப்படியான குரல்கள் தென்னிலங்கையில் பல தடவைகள் ஒலித்திருக்கின்றன. தமிழர்கள் இதற்குப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்கள் அதையேதான் விரும்புகிறார்கள். அதுதான் ஜனநாயக மரபு , அதுவேதான் மக்கள் விருப்பு. போர் என்றால் போர், சமாதானமென்றாலும் போர் என்னும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

பதில்? தமிழ் மக்களும் விரைவில் தென்னிலங்கையின் சேதத்துக்காகக் குரல் கொடுக்கப் போகிறார்கள். அழிவு நிச்சயம். அம் மக்களின் ஜனநாயக விருப்பை மீறுவது அழகல்ல.

84 வீதமான தென்னிலங்கை மக்கள் புலிகளைத் தோற்கடித்தபின்னர்தான் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். 70 வீதமான மக்கள் ‘புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் அவர்களோடு பேசலாம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

மக்கள் முட்டாள்களா? அல்லது கருத்துக் கணிப்புக் கேள்விகளைத் தயாரித்தவர்கள் முட்டாள்களா? என்ற விவாதத்தில் இறங்கி நாமும் முட்டாள்களாகத் காட்டிக் கொள்ள வேண்டாம். இதுவரை உருப்படியான தீர்வுப் பொதியொன்றை முன்வைக்கத் தகுதியற்ற அரசியல்வாதிகளும் அவர்களை உருவேற்றும் மக்களும் ஒரே ரகத்தினரே.

பஞ்சம் பட்டினியை நாடு எதிர்கொள்ளப் போகிறது, விலைவாசி, வரி உயர்வு என்று பல அச்சுறுத்தல்கள். இதற்கெல்லாம் காரணம் போர்தான் என்றெல்லாம் உணர்ந்து கொள்ளாது ‘புலிகளைத் தோற்கடிப்பதே’ மிக முக்கிய விடயமெனக் கருதும்போது போரினால் வரும் இரத்தக் களரிகளையும் ஏற்க அவர்கள் தயாராகவேயிருக்க வேண்டும்.

ஆட்சியைக் கைப்பற்ற அரசியல்வாதிகள் எதையுமே செய்வார்கள். ரணிலும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் நிறுத்த உடன்படிக்கை செய்துகொண்டதிலிருந்து சமஷ்டி ஆட்சியை ஏற்றுக்கொண்டு தமிழர்களிடம் சோரம் போய்விட்டதற்காக சிங்கள தேசத்தின் எதிரியாக்கப்பட்ட ரணில் இப்பொழுது (குப்பை)அரசியலில் இறங்கியிருக்கிறார். ஜே.வி.பி. என்ற வைரஸ் சுதந்திரக் கடசியோடு சேர்ந்து இனவொழிப்பைத் தீவிரமாக்கியது. இப்போது அமிழப்போகும் கப்பலைக் கைவிட்டுவிட்டு இன்னொன்றுக்குத் தாவியிருக்கிறது அது. தனித்து ஆட்சியமைக்க முடியாது ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் இக்கட்சி இருக்கும் வரை நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் விமோசனம் இல்லை.புலிகளை முற்றாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று கோதபாய ராஜபக்ஷ பேசியிருக்கிறார். அது நாடு முழுவதுக்குமான பிரகடனம். அப்போது அருகிலிருந்த ‘சர்வ வல்லமை பொருந்திய’ கனம் ஜனாதிபதி அவர்கள் மறுப்புத் தெரிவிக்காமையால் அவரும் அப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே கருத வேண்டும். அதே வேளை போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்குக் காரணமான ஐ.தே.கட்சியும் தாம் ஆட்சிக்கு வந்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்வோமென்று அறிவித்திருக்கிறது. இதன் பின்னர் தமிழர் தரப்பு மட்டும் ஏன் இவ்வொப்பந்தத்தைக் கட்டிக்கொண்டழ வேண்டும்?

கோதபாயவின் போர்ப்பிரகடனம் புலிகளுக்கு ஒரு வகையில் கிடைத்த அதிர்ஷ்டமென்றே கருத வேண்டும். சர்வதேசங்களின் வேண்டுகோளுக்கிணங்க புலிகள் பேசப் போனார்கள். ஒப்பந்தத்திற் கையெழுத்திட்டார்கள். அப்பொழுது அவர்களிடம் பலமிருந்தது. ஆனால் அதற்கு சர்வதேசங்களும் தென்னிலங்கை மக்களும் கொடுத்த வெகுமதி ஏமாற்றமே. தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து இறங்கி சமஷடி ஆட்சியை ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருந்த புலிகளை வஞ்சித்ததில் தென்னிலங்கை மக்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. புலிகளை ஜனநாயகத்துக்குக் கொண்டுவர போர்தான் வழியென்று அவர்கள் நினைத்து அதன் விளைவாக தமிழினப்படுகொலைதான் எஞ்சுமானால் தமிழர்களின் துன்பங்களை அவர்கள் சுமக்கும் காலம் வந்துவிட்டதென்றே கருத வேண்டும். இதனால் தமிழர்களும் போரின்பநாதர்களாக மாறவேண்டுமானால் …ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

முடிவொன்றிற்காக மக்கள் தம்மைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள். நாடு இரத்தக்களரி ஒன்றிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சமாதானத்திற்காகக் குரல்கொடுக்க வேண்டிய மக்களிடமிருந்து உயிர்ச் சேதத்திற்கான குரல்களே உயர்ந்தெழுகின்றன.

உலகில் பல நெடுநாட் போராட்டங்கள் நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டன. வட அயர்லாந்துப் போராட்டம், பாஸ்க் போராட்டம், பிலிப்பைன்ஸ் மின்டனோ தீவுப் போராட்டம், இந்தோனேசிய ஆச்சே மாகாணப் போராட்டம், நேபாள மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம் என்று பல மீசையையும் மண்ணையும் பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாது இரகசியமாக அலுவல்களை முடித்துக்கொண்டுவிட்டன. தரகர்கள் யார்? அவர்களுக்கு என்ன ஊதியம் கிடைத்தது? கையூட்டு (?) வாங்கியது யார்? கொடுத்தது யார்? யார் யார் எந்தெந்த ஓட்டல்களில் சந்தித்தார்கள்? என்ற எந்த விடயங்களிலும் மக்கள் அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். நீண்டநாளையக் களைப்பைப் கழைவதே அவர்களின் முதல் தேவை. ஆனால் நமது நாட்டிலோ அரைநூற்றாண்டுப் போராட்டம் இன்னும் பள்ளி கொள்ள மறுக்கிறது. அவமானம்!
இதுவரை காலமும் சிங்களத் தலைவர்களாலேயே ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. இனி வரப்போவது தமிழரிடமிருந்து வரட்டும்! போர் நிறுத்த ஒப்பந்தத்தை… எழுமின்! கிழிமின்!தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பத்தைப் பிறந்தநாளாகக் கொள்ளின் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு இப்போது 35 வயது. ‘விடியல்’, ‘வைகறை’ என்றெல்லாம் கவிதை மொழிகளில் விடுதலைக்குப் பூபாளம் பாடியவர்களே இன்று அவரோகண ‘மோட்’ டில் போய்க்கொண்டிருக்கிறார்கள். பத்து விரல்களும் சுட்டு விரல்களாக மாறி பல்திசைகளையும் காட்டிக்கொண்டிருக்கின்றன. குற்றவாளிகள் எல்லோருமேதான்.

ஐக்கிய தேசீயக் கட்சி பாதையை மாற்றியிருக்கிறது. ஜே.வி.பி என்ற வைரஸ் சுதந்திரக் கட்சியிலிருந்து ஐ.தே. கட்சிக்கு ‘கட்சி’ தாவினால்; இதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கலாம். தெற்கில் ஆட்சியைப் பிடிக்க ரணிலுக்கு வேறு வழியில்லை. தென்னிலங்கை மக்கள் போரை விரும்புகிறார்கள். தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான சாத்தியங்கள் அண்மிக்கும் போதெல்லாம் அவற்றைத் தகர்த்தெறியவென தென்னிலங்கையில் பல கிருமிகள் பல தருணங்களிலும் தோன்றியிருக்கின்றன. ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன. பண்டா செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய ஜே.ஆர். என்னொரு கிருமி தோன்றியது. அவ்வப்போது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் –
காற்று வீசும் போது தூற்றவில்லை. தூற்றத் தயாராகும்போது காற்றில்லை.
காலனித்துவ காரணிகளால் பரப்பப்பட்ட ‘தாழ்வுச் சிக்கல்’ வைரஸ் கிருமிகள் நமது மக்களின் மரபணுக்களை விகாரமடையச் செய்துவிட்டன.

ஒக்டோபர் 2007 தாய் வீடு பத்திரிகையில் பிரசுரமானது