செவ்வாய்ப் பயணம் | பெர்சீவியரன்ஸின் பயணக் கதை….

செவ்வாய்ப் பயணம் | பெர்சீவியரன்ஸின் பயணக் கதை….

சிவதாசன்

பெர்சீவியரன்ஸ்‘ வாகனம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்குமென்று தான் ஏற்கெனவே கணித்துக் கூறியிருந்தேன் என்று சொல்லிக்கொண்டு வந்தார் சாத்திரியார். “வியாழன் வக்கிரமடையாததால் அதன் சுபப் பார்வை ‘பெர்சீவியரன்ஸுக்குக்’ கிடைத்திருக்கிறது. பாருங்கோ வியாழக்கிழமைதான் அது அங்க இறங்கியிருக்கு. சுவாதி மோஹனின் பலன் அந்த மாதிரி. அவர் தொடுகுகிறதெல்லாம் இனிப் பொன் தான்” என்றார். பொதுவாக சாத்திரியாரின் கணிப்பு பிழைப்பதில்லை. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில பி.பி.சி. க்கு ஒரு இண்டெர்வியூ இருக்குது” ஒருமுறை சுற்றிப் பார்த்து சால்வையால் விசிறிக்கொண்டார்.

Incredible new images shared by Perseverance rover after Mars landing
பெர்சீவியர்ன்ஸ் றோவர் (தரை வாகனம்)

சுவாதி மோகனுக்கு அதிர்ஷ்டம்தான். அவரது கைகளில் என்ன இருந்தன என்பது பற்றி நம்மாட்கள் அறிவதற்கு முதல் நெற்றியில் இருந்தது பற்றிப் புல்லரித்துப் போனார்கள். சுய இன்பமடைவதற்கான பருவகாலம் போலிருக்கிறது. நல்லகாலம் பிள்ளை தன்னுடைய குடும்பப் படங்களை முகநூலில் போடவில்லை. பலருக்கு ஏக்கம், தூக்கமில்லை.

‘பெர்சீவியரன்ஸ்’ ஒரு ரொயோட்டா கொறோலா இல்லை. மணித்தியாலத்துக்கு 12,000 மைல்கள் வேகத்தில் இறங்கியது. கரடு முரடான ஓடுபாதையில், இந்திய விண்கலம் போலல்லாது, அதை இலாவகமாக உடையாமல் கொள்ளாமல் இறக்கிவிட்டுப் பிள்ளை ஆர்ப்பாட்டமெதுவில்லாமல் அமைதியாகச் சொல்லிப்போட்டு இருக்கிறது; அற்புதமே தான்.

அது மட்டுமல்ல ‘பெர்சீவியரன்ஸ்’ தூரப்பயணத்தின் தனிமையைப் போக்கத் தன்னோடு ஒரு பயணத் தோழரையும் அழைத்துச் சென்றிருக்கிறது. Ingenuity என அழைக்கப்படும் ஒரு ஹெலிகொப்டர் அது. அது எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் தொழிற்படுகிறது என்பதும் உறுதியாகிவிட்டது. சுவாதி தொட்டதெல்லாம் பொன் தான். சாத்திரி சொன்னதும் சரி.வேறொரு கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகொப்டர் இந்த ‘இன்ஜெனியூயிட்டி’ – என்ற விருதும் அதற்குக் கிடைத்திருக்கிறது. றைட் சகோதரர்கள் பெருமைப்பட்டிருப்பார்கள்.

ஜூலை 30, 2020 அன்று ஃபுளோறிடாவில் வைத்துப் ‘பெர்சீவியரன்ஸைப்’ பயணம் அனுப்பி வைத்திருந்தது நாசா. அது இறங்கி முதலில் அனுப்பிய காணொளியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். “ஆடியில நல்ல காரியம் செய்யக்கூடாது என்று சொன்னாலும் கால் வைக்கிற , இறங்கிற, நாளைத்தான் பார்க்கோணும்” என்று சாத்திரி இடைமறித்தார்.

The face of the Perseverance landing was an Indian American woman
தரையிறக்கக் கட்டுப்பாட்டு விஞ்ஞானி சுவாதி மோகன்

இன்ஜெனியூயிட்டி ஹெலிகொப்டர் மடித்து வைக்கப்பட்டு பெர்சீவியரன்ஸ் வாகனத்தின் வயிற்றுப்பகுதியில் கட்டப்பட்டிருந்தது. பெர்சீவியரன்ஸ் வாகனம் ஒரு SUV யின் சைஸ் இல் இருக்கும். ஹெலிகொப்டர் வெறும் 4 இறாத்தல்கள் தான் என நாசா கூறுகிறது.

இதே வேளை செவ்வாயை ‘ரெக்கி’ பார்க்கவென 2006 இல் அனுப்பிய புலனாய்வுக் கலமொன்று (Mars Reconnaissance Orbiter) செவ்வாய்க் கிரகத்தின் ‘வெளி வீதி’ யில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது தரையிறக்கப்பட்ட இரண்டு சேய்களும் இக் இக்கலத்தின் மூலம் தான் செய்திகளைப் பூமிக்கு அனுப்பலாம். முதலில் ‘பெர்சீவியன்ஸும்’ பின்னர் ‘இன்ஜெனியூயிட்டி’ யும் தாம் சுகமே இருப்பதாகச் செய்தியனுப்பியிருந்தன.இன்ஜெனியூயிட்டி இன்னும் இரண்டு மாதங்களுக்கு தன் நண்பருடன் பணியாற்றும். அதன் முதல் வேலை ஒரு பரிசோதனைப் பறப்பு ஒன்றைச் செய்து காட்டவேண்டும். தற்போது அதற்காகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அது தற்போது தனது மின்கலங்களை solar panels மூலம் சார்ஜ்ம்செய்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

செவ்வாய்க் கிரகத்தில் வெப்பநிலை பூமியின் தரை வெப்பத்தைவிட மிகவும் குறைவு. இவ்வாகனங்களின் எலெக்ட்றோணிக்ஸ் சீராக இயங்க அவை சரரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படவேண்டும். அதற்கான சூடாக்கிகள் இயக்க நிலையில் இருக்கவேண்டும். இவையெல்லாவற்றுக்கான சக்தியையும் சூரிய ஒளியிலிருந்துதான் பெறவேண்டும். சனியன்று (21) இன்ஜெனியூயிட்டி தன்னைச் சார்க் செய்ய ஆரம்பிக்கும். இரவில் செவ்வாயில் குளிர் அதிகமாக இருக்குமென்பதால் (-130 பாகை F, (-90 பாகை C) பகலில் முழுமையாக சார்ஜ் செய்ததன்பின்னர், பெர்சீவியரன்ஸ் அதைக் கழற்றிவிட்டுவிடும். அதன் பின்னர் ஹெலிகொப்டர் தனியாகவே தனது பணிகளைச் செய்ய ஆரம்பிக்கும்.ஹெலிகொப்டர் முழுமையாகச் சார்ஜ் ஆகியதும் பெர்சீவியரன்ஸ் றோவர் உகந்த சம தரையொன்றைத் தேடிக் கண்டுபிடித்து அதில் ஹெலிகொப்டரைத் தரையிறக்கிவிடும். இதன் பின்னர் அடுத்த 31 நாட்களில் அது 5 பயிற்சிப் பறப்புகளைச் செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்ஜெனியூயிட்டியின் மின்கலங்கள் இரண்டு முறைகளில் சார்ஜ் ஆகின்றன. ஒன்று, றோவரில் இணைக்கப்பட்டிருக்கும்போது , மற்றது, தனியே பறக்கும்போது சூரிய ஒளியால் solar panels மூலம்.

Photos from Perseverance's mission to Mars
செவ்வாயின் தரை

இன்ஜெனியூயிட்டியின் முதல் பறப்பு குறுகிய 20 செக்கண்டுகளுக்கு மட்டுமே. மேலெழுந்து பறந்துவிட்டுப் பாதுகாப்பாக இறங்குவது. எப்படி செவ்வாய்க் கிரகத்தின் முதலாவது தரை வாகனமான Sojourner என்ற றோவர், ஜூலை 4, 19917 இல், பயிற்சிக்காக அனுப்பப்பட்டதோ அதே போல இன்ஜெனியூயிட்டி யும் ஒரு பரிசோதனைக் கருவியாகவே இந்தத் தடவை அனுப்பப்பட்டிருக்கிறது. செவ்வாயின் சூழலில் அதன் இயக்கம், எலெக்ட்றோணிக்ஸ் எல்லாம் சீராக இயங்குகின்றன என்பதை உறுதி செய்தவுடன் இதைவிடப் பெரியதும் அதிக தொழிற்பாடுகளைக் கொண்டதுமான ஹெலிகொப்டர் அனுப்பப்படும். இந்த முதலாவது பயிற்சிப் பறப்பு வெற்றிகரமாக முடியுமானால் இந்த செவ்வாய்ப் பயணத்தின் 90% மான பணிகளைச் செய்து முடித்துவிடலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

காமெரா

இன்ஜெனியூயிட்டியில் இரண்டு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வானிலிருந்து ‘பறவைப் பார்வையில்’ படங்களை எடுக்க்கும். அதன் காமெராக்களுக்கு உரிய பயிற்சிகளை பெர்சீவியரன்ஸ் வழங்கும். ஒலி, ஒளி போன்ற சகலவற்றையும் இக் காமெராக்க்கள் பதிவுசெய்ய வல்லன. அடுத்துவரும் நாட்களில் இக் காமெராக்கள் மேலும் பல துல்லியமான படங்களை அனுப்புமென எதிர்பார்க்கலாம்.

“சுவாதி ராகு ஆதிக்கத்தில பிறந்தவ. அதுக்குத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகமாயிருக்கும்” என்று கூறியபடி சாத்திரியார் எழுந்து சால்வையை உதறிப் போட்டுக்கொண்டு புறப்பட்டார். அவர் எதிர்பார்த்த் கோப்பி கிடைக்கவில்லை என்பது நடையின் அவசரத்தில் தெரிந்தது.

தொடரும்…

நாசாவின் உத்தியோகபூர்வ காணொளி

Print Friendly, PDF & Email