Science & TechnologyWorld

செவ்வாய்க் கிரகத்தை அடைந்தது ‘பெசீவியரன்ஸ்’ – தரையிறக்கக் கட்டுப்பாட்டின் பின்னணியில் டாக்டர் சுவாதி மோகன்


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் விண்கலமான ‘பெர்சீவியரன்ஸ்’ இன்று (வியாழன் 18) செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்தது. ஏழு மாதங்களுக்கு முன்னர் ஃபுளோறிடாவிலிருந்து ஏவப்பட்ட மனிதரில்லா விண்கலம் எந்தவித தடங்கலுமின்றி எதிர்பார்க்கப்பட்ட ஜெசேறோ பள்ளத்தாக்கில் பாதுகாப்பாகத் தரையிறங்கித் தான் போய்ச் சேர்ந்துவிட்டதாகப் பூமிக்குத் தகவலையும் அனுப்பிவிட்டது.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இக் கலம் செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது பற்றிய செய்தியை மகிழ்ச்சியோடு அறிவித்த அக் குரல் இந்திய அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் சுவாதி மோகனுடையது. இக் கலத்தின் தரையிறக்கக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக அவர் செயற்பட்டிருந்தார்.

வேறு கிரகங்களுக்கு ஏவப்படும் பெரும்பாலான விண்கலங்கள் தரையிறங்கும்போதுதான் ஆபத்தில் சிக்குகின்றன. அக் கிரகங்களின் ஈர்ப்பு விசை, வாயு அடர்த்தி, உராய்வு, வெப்பநிலை, அமுக்கம் போன்ற பல காரணிகளைக் கணக்கிலெடுத்துத்தான் சேய்க்கலத்தின் உந்துவிசையை விஞ்ஞானிகள் தீர்மானிக்கிறார்கள். இக்காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்றபடி உந்துவிசை மாற்றங்களைச் செய்து வேகக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இது தானியக்க முறைகளில் நடைபெற்றாலும் தரைக் கட்டுப்பாடும் மிக மிக அவசியம். டாக்டர் சுவாதி மோகன் இந்த கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பான குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தார். விண்கலத்தை மெதுவாகத் தரையிறக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. மேலேயுள்ள காணொளியில் கேட்கும் “தரையிறக்கம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ‘பெர்சீவியரன்ஸ்’ இப்போது செவ்வாய்க் கிரகத்தின் தரையில் பாதுகாப்பாக இருக்கிறது. செவ்வாயில் உயிரினம் இருந்துள்ளனவா என்பதை ஆராய்வதற்கு அது தயார்” என அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும் கூறும் குரலில் அவரது வெற்றிக்களிப்பு தெரிகிறது. கலிபோர்ணியாவில் இருக்கும் கட்டுப்பாட்டுத் தளத்தில் மோகனது குரலைக் கேட்டதும் இதர விஞ்ஞானிகள் ஆரவாரித்து மகிழ்கின்றனர்.

இந்தியா சந்திரனுக்கு அனுப்பிய விண்கலம் இப்படியான கட்டுப்பாட்டுக் குழப்பம் காரணமாகவே வீழ்ந்து நொருங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இவ் விண்கலத்தின் தரையிறக்கக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை சுவாதி மோகனே வடிவமைத்திருந்தார்.

கோர்ணெல் பலகலைக்கழகப் பட்டதாரியான மோகன், இவ் விண்கலத்தின் செவ்வாய்ப் பயணத் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே பங்குபற்றி வருகிறார். இதைவிட, வேறு விண்வெளிப் பயணத் திட்டங்களிலும் அவர் கலந்துகொண்டிருக்கிறார், குறிப்பாக சனிக் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘கசீனி’ பயணத்திலும் இவர் பங்குபற்றியிருந்தார்.

சுவாதி மோகன் ஒரு வயதாகவிருக்கும்போது அவரது பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். பிரபல அமெரிக்க விண் பயணப் பொழுதுபோக்குத் திரை நிகழ்ச்சியான ‘ஸ்டார் ட்றெக்’ (Star Trek) நிகழ்ச்சியின் விசிறியான அவர் இயல்பாக விண்வெளி விஞ்ஞானத்திலேயே நாட்டமும் கொண்டு அதில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றிருந்தார்.

‘பெர்சீவியரன்ஸ்’, 7 மாதங்களாக 472 மில்லியன் கி.மீ. தூரப் பயணத்தை மேற்கொண்டு செவ்வாய்க் கிரகத்தை அடைந்திருக்கிறது. செவ்வாயில் தரையிறங்கும்போது அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 12,000 மைல்கள் (19,000 கி.மீ / மணி). இந்த வேகத்தில் சென்ற விண்கலத்தைத் தரையில் மோதாது இறக்கியமைக்காக சுவாதி மோகனைப் பாராட்டத்தான் வேண்டும்.