செயற்கை விவேகம்: IBM நிறுவனம் 8,000 பணியாளர்களை மாற்றீடு செய்கிறது
செயற்கை விவேகத்தின் வருகை காரணமாக அடுத்துவரும் சில வருடங்களில் 8,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான IBM இன் முதன்மை நிர்வாகி அர்விந்த் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் 300 மில்லியன் பணியாளர்கள் வேலைகளை இழக்கவும், அமெரிக்க, ஐரோப்பிய பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இதற்காகத் தயாராகவிருக்கவேண்டும் – கோல்ட்மன் சாக்ஸ்
இன்று (செவாய்) புளூம்பேர்க் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது “பணியாளர்களைச் சேர்த்தல் சம்பளம் கொடுப்பது முதல் அவர்களது தேவைகளை நிர்வகித்தல் போன்ற நிறுவனத்தின் பின்னரங்கப் பணிகளைச் செய்பவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்பணிகளுக்கு ஆட்களைச் சேர்ப்பது தாமதிக்கப்படவோ அல்லது முற்றாக நிறுத்தப்படவோ கூடும்” என கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுவரை இந்நிறுவனத்தில் இப்பணிகளைச் செய்துவருபவர்கள் சுமார் 28,000 பேராகும். இவர்களில் குறைந்தது 7,800 பேரையாவது (30%) செயற்கை விவேகம் மாற்றீடு செய்யாக்கூடுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது பணியிலிருப்பவர்களைப் பணிநீக்க நாம் முயற்சிக்கப் போவதில்லை எனவும் புதிதாக எவரையும் பணியில் சேர்க்காமலும், ஓய்வு பெறுபவர்களை மாற்றீடு செயாமலும் தாம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான கோல்ட்மன் சாக்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் ChatGPT போன்ற செயற்கை விவேகத்தின் தொழில்நுப்பப் பாய்ச்சல் மனித குலத்தின் பணியாளர் சந்தையில் பாரதூரமான குழப்பங்களைக் கொண்டுவரப் போகிறது என எச்சரித்திருந்தது. செயற்கை விவேகத்தின் வருகையால் உலகம் முழுவதிலும் 300 மில்லியன் பணியாளர்கள் வேலைகளை இழக்ககூடுமெனவும் அமெரிக்க, ஐரோப்பிய பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இதற்காகத் தயாராகவிருக்கவேண்டுமெனவும் அது எச்சரித்திருந்தது.
தற்போது பாவனையிலிருக்கும் உருச்சேர்க்கும் செயற்கை விவேகம் (generative AI) மனிதரது படைப்புக்களை எந்தவித வித்தியாசமுமின்றி மீள உருவாக்கும் திறமையைக் கொண்டவை. ஒருவருடைய குரல், நடையுடை பாவனை, தோற்றம் அனைத்தையும் அசலாக மீள உருவாக்கும் வல்லமை வாய்ந்த இந்த செயற்கை விவேகம் மனித-இயந்திரத் தொடர்பாடல்களில் இதுவரை இருந்துவரும் தடங்கல்களை உடைத்தெறியப் போகின்றது எனவும் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பிரச்சினை பிரமாண்டமானதாக இருக்கபோகிறது எனவும் கோல்ட்மன் சக்ஸ் எச்சரித்திருக்கிறது.
ரெஸ்லா முதன்மை நிர்வாகி இலான் மஸ்க், அப்பிள் இணை நிறுவனர் ஸ்டீஃபன் வொஸ்னியாக் உடபட 1,100 செயற்கை விவேக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து எழுதிய திறந்த கடிதத்தில் செயற்கை விவேக ஆராய்ச்சியை 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்குமாறு உலக வல்லுனர்களைக் கேட்டிருந்தார்கள். ஆனாலும் மைக்கிரோசொஃப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் உட்பட இக்கோரிக்கையை உதாசீனம் செய்து செயற்கை விவேக ஆராய்ச்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். (Photo by Andrew Neel on Unsplash)