செயற்கை விவேகம் (AI): சிந்திக்கும் இயந்திரம்
ஒரு விளக்கம்
சிவதாசன்
செயற்கை விவேகம் ஆரம்ப வருடங்களில் ஏற்படுத்திய பரபப்பு இப்போது கொஞ்சம் அடக்கிய வாசிப்புக்குள்ளாகி வருவதாக ஒரு சந்தேகம். எண்பதுகளில் எனது பல்கலைக்கழகப் படிப்பில் Microprocessors in Logic Desin என்றொரு பாடத்தை விசேட பாடமாகத் தேர்ந்து கற்றேன். றோபோக்களை இயக்கும் stepper motor களை விரும்பியபடி இயக்குவதற்கு Motorola, Intel போன்ற microprocessor களை புரோகிராம் செய்வது பற்றியது இக்கல்வி. இதனால் பின்னால் வந்த Artificial Intelligence ஏற்படுத்திவரும் சலசலப்பு என்னை அதிகம் உசுப்பேத்தவில்லை. ஆனாலும் இந்த மாற்றங்களைப் பற்றி அறியவேண்டுமென்ற ஆவல் மட்டும் இருந்தது. அதைப்பற்றி அறிந்த தகவல்களை இங்கு பகிர்கிறேன்.
Artificial Intelligence என்ற ஆங்கிலப் பதத்திற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன என்பது பற்றி வலைத்தளங்களில் பலவிதமான பதிவுகள் தென்படுகின்றன. சிலர் ‘நுண் விவேகம்’ என்றும் சிலர் ‘செயற்கை அறிவு’ என்றும் சிலர் ‘செய்யறிவு’ என்றும் வரையறை செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ‘செயற்கை விவேகமே” இவற்றுள் சரியானதென்பேன். ஒரு உதாரணத்தின் மூலம் என் கருத்தை இப்படி முன்வைப்பேன். ‘அறிவு’ என்பது கற்றலின் மூலம் முதன்முதலாக அவரது மூளையிற் பதிவாகும் விடயம். ஒரு வகை pattern recognition. இதை ‘அவதானம்’ (observation) என நாம் விழிக்கலாம். ஒரு மேலோட்டமான உருவப் பதிவு அல்லது சத்தப்பதிவு என வைத்துக்கொள்வோம். ‘விவேகம்’என்பது பதியப்பட்ட இவ்வறிவைப் பகுத்து பல தளங்களில் ஆய்ந்து அதன் மீதான ஒரு கருத்தை நிறுவதில் இருக்ககூடிய ஒருவருடைய திறமை என வரைவு செய்யலாம். இதை ‘அனுமானம்’ (inference) என நாம் விழிக்கலாம். இது மனிதருக்கு மட்டுமல்ல சகல உயிரினங்களுக்குமுண்டு. இச்செயல்முறைகளை உயிரினம் தவிர்ந்த வேறொரு கருவி செய்யுமானால் அதை ‘செயற்கை அறிவு’ என்றோ அல்லது ‘செயற்கை விவேகம்’ என்றோ அழைக்கலாம் என்பது என் கருத்து.
தோற்றம்
பலரும் சொல்வதைப்போல AI ஒரு புதிய விடயமல்ல. 1950 களிலிருந்தே மானிடம் இந்த AI வசப்பட்டுவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகளான ] ஜோன் மக்காதி , அலன் ரூறிங் ஆகியோர் 1950 இல் கேட்ட கேள்வி “இயந்திரங்களால் சிந்திக்க முடியுமா?” , “இயந்திரங்களும் மனிதர்களைப் போல் கற்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்?” என்பன. இக்கேள்விகளுடன் உலகுக்கு அறிமுகமானது AI.

ஒரு குழந்தை தனது மழலையில் பேச ஆரம்பிக்கும்போது அதற்கு நாம் இலக்கணத்தைக் கற்பிப்பதில்லை. அது, தான் கேட்ட சப்தங்களை மீள ஒப்புவிக்க முயல்கிறது. அதன் மொழி எமக்குப் புரியாத ஒன்றாகவும், அதில் இலக்கணம் அறவே இல்லாமலும் இருக்கலாம். ஒவ்வொரு தடவையும் பெற்றோர் அதன் மொழியைத் திருத்த முற்படும்போது சிறிது சிறிதாக குழந்தை அதற்கேற்ப தன்னைத் திருத்திக்கொள்கிறது. இதைச் சாதிக்க அதற்குப் பலநாட்கள், மாதங்கள் கூட தேவைப்படலாம். இறுதியில் அது சரியான வசனத்தை ஒப்புவிக்க பழகிக்கொள்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வகையில் பெறுபேறு கிடைக்கும் வரைக்கும் மனிதக் குழந்தையின் இந்த ‘கற்றல்’ – ‘கேட்டல்’ – ‘திருத்தல்’ – ‘ஒப்புவித்தல்’ சுழற்சி முறையில் நடைபெறும். இன்னுமொரு உதாரணம் சொல்லப்போனால், விழாக்களில் ஒலி சாதனங்களை வழங்குபவர் மக்களுக்கு இதமான ஒலி கிடைக்கும்வரை (அல்லது மேடைக்கலைஞர்கள் திருதிப்படும் வரை) தனது கருவியை முறுக்குவார். இதையே நாம் இயந்திரங்களுக்கும் பிரயோகிப்போமானால் அதுதான் செயற்கை விவேகத்தின் முதற்படி எனலாம். பொறியியலில் இதை feedback control / servo system என அழைப்பார்கள்.
இப்போது, இந்த ஒலி வழங்குபவர் கையால் முறுக்குவதற்குப் பதிலாக கணனி மூலம் தானியங்கியாக சத்தத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?. அப்படியானால் அக்கணியின் மென்பொருள் (software) எப்படி எழுதப்பட வேண்டும்? உதாரணத்திற்கு:
***
மண்டபத்தின் மத்தியில் கேட்கும் சத்தத்தை ஒலிவாங்கி மூலம் பெற்றுக்கொள்
சத்தம் எதிர்பார்த்ததை விட அதிகமா?
1 ஆமென்றால் சத்தத்தை குறை
2 இல்லை என்றால் சத்தத்தை அதிகரி
3 இதமாக இருந்தால் அப்படியே விடு
4 மீண்டும் 1 இற்குப் போ
எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கும்வரை கணனி இந்நடைமுறையைப் பின்பற்றும். சுழற்சி முறையில் இது நடைபெறுவதால் ஆங்கிலத்தில் இதை loop என அழைப்பர். இதையே இன்னுமொரு வழியில் , கணனி மூலம் குறிக்கப்பட்ட அளவு சத்தத்தை மட்டுமே வெளியிடவேண்டுமெனவும் அதற்கு மேலானால் தானியங்கியாக அதைக்குறைத்து விரும்பப்பட்ட அளவுக்கு கொண்டுவரும்படியும் செய்ய முடியும். இதை கணனியின் மென்பொருள் மூலம் சாதிக்கலாம். இங்கு எது விரும்பப்படும் அளவு (dB=சத்தததின் அலகு) என்பதை முற்கூட்டியே நீங்கள் கணனிக்குள் பதிந்து வைத்திருக்க வேண்டும். இப்படி விதம் விதமான தேவைகளை அல்லது தரவுகளை ஏற்கெனெவே கணனியின் memory இல் பதிந்து வைப்பதை ஒரு வகையில் training எனக்கூறலாம். அதாவது இயந்திரம் மனிதனைப்போலத் தானாகக்கற்க முடியாதபோது நாமாக அதன் ‘மூளையில்’ பதிந்து விடுவது. கணனியை புரோகிராம் செய்யும்போது நாம் அதற்கு கட்டளை வடிவில் (instructions) தகவல்களை வழங்குவோம். மனிதர்கள் இயல்பாக பேசும்போது வெளிப்படும் சத்தத்தின் அளவு 60-65dB. இந்த இலக்கத்தைக் கணனியில் முற்கூட்டியே பதிந்து வைத்தால் ஒலிவாங்கி மூலம் உள்வாங்கும் சத்தத்தை கணனி இந்த இலக்கத்துடன் ஒப்பிட்டு தனது திருத்தத்தை செய்துகொள்ளும். இதே போல “சிறந்த தமிழ் நடிகர்” யார் என்றொரு கேள்வியைக் கணனியிடம் கேட்டால் அது நாம் பதிந்து வைத்த பெயரை மட்டுமே சொல்லும். இந்த வகையில் தான் எமது வழமையான computer programming இருந்து வந்தது. அதாவது நாம் கொடுத்த தகவல்களை (data) வைத்துக்கொண்டு நாம் கேட்கும் கேள்விகளுக்கு அது பதிலளித்து வந்தது. இங்கிருந்து பிரிந்து இன்னுமொரு பாதையில் மிக வேகமாகப் பயணிப்பதே செயற்கை விவேகம். கூகிள் தேடலில் உங்களுக்குக் கிடைக்கும் பதில்கள் அதனால் உருவாக்கப்பட்ட தகவல் கோவையிலிருந்து பெறப்படுபவை. கூகிள் மற்றும் இதர தளங்கள், மனிதர் மேற்கொள்ளும் தேடல்களிலிருந்து சொற்களை உருவி எடுத்து தமது தரவுச் சேமிப்பில் சேர்த்துக்கொள்கின்றன. AI மொழியில் இச்செய்ற்பாட்டை training என்கிறார்கள்.
***
Machine Learning
செயற்கை விவேகம் எப்படித் தொழிற்படுகிறது என்பதை அறிவதற்கு முதல் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கியமான சில சொற்பதங்களில் முதலாவது Machine Learning.
ஒரு குழந்தைக்கு முதன் முதலாக ஒரு உருவத்தைக் காட்டி இது நாய் என்றால் விருத்தியடையும் அக்குழந்தையின் மூளையில் நாயின் உருவமும் (content), அந்த உருவத்திற்கான அடையாளமான ‘நாய்’ ம் (label) நிரந்தரமாகப் பதியப்பட்டுவிடும். பின்னர் நாய் போன்ற எந்தவொரு உருவத்தைக் கண்டாலும் அக்குழந்தை அது ‘நாய்’ என்று சொல்லிவிடும். இதையே ஒரு கணனிக்குச் சொல்லிக்கொடுப்பீர்களானால் அச்செயன்முறையை Instructions என்பார்கள். ஒவ்வொரு தடவையும் நாம் கொடுக்கும் கட்டளையின் பிரகாரம் அக்கணனி கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துவிட்டு பேசாமல் இருந்துவிடும். இதை நாம் 1950 களில் Computer Programming என அழைத்தோம்.
இப்போது அதே கணனியிடம் நாம் கட்டளைகளுக்குப் பதிலாக பல மிருகங்களை ஒன்றாக விட்டு “நீயே அவற்றைப் படம் பிடித்து நீயே அவற்றின் விவரணங்களையும் தொகுத்துத் தா” என நாம் கேட்டால் அது என்ன செய்யும்? இந்த இடத்தில் கணனிக்கு நாம் சில உதவிகளைச் செய்யலாம். கூரிய காதுகள் பூனைக்குண்டு. மடிந்து தொங்கும் காதுகள் நாய்க்குண்டு. பூனைக்கு மீசை இருக்கும் நாய்க்கு இருக்காது … இப்படிப் பல தரவுகளை நாம் அக்கணனியிடம் கொடுத்து வைப்போம் (இவை கட்டளைகள் அல்ல தரவுகள் (data)). இப்போது அக்கணனி நாய்களையும், பூனைகளையும் வெவ்வேறாகப் பிரித்து தரும். Pattern Recognition எனப்படும் உருவத் தேர்வு முறயில் சில நாய்களின் காதுகள் கூரியதாக இருந்தாலும் அவற்றுக்கு மீசை இல்லாமையால் உருவ ஒப்பீட்டு முறையில் இக்கணனி தன் வேலையை ஓரளவு திருத்திகரமாகச் செய்யும். இப்படியாக, மனிதர்களின் தலையீடு இல்லாது தானியங்கியாக தரவுகளை வைத்து முடிவுகளை எட்டும் முறையை நாம் Machine Learning எனக்கூறலாம். 1959 இல் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்தர் சாமுவேல் வழக்கிற்கு அறிமுகப்படுத்திய சொல்லே இந்த Machine Learning.
Large Language Model LLM)
உங்களில் பலரும், அறியாத பல விடயங்கள் பற்றி ChatGPT இடம் கேட்டறிந்திருப்பீர்கள். அதன் பதில் ஒரு text சார்ந்ததாக இருக்கும். இதை உங்களுக்குத் தர ChatGPT தன்னிடம் இருக்கும் சகல text, image தகவல்களயும் ஒருங்கே கொண்டுவந்து machine learning மூலம் அவற்றை ஆரய்ந்து தொகுத்து, பகுத்தாய்ந்து தனது மறுமொழியை text இல் தருகிறது. AI சொல்லாடலில் இந் நடைமுறை LLM (Large Language Model) எனப்படுகிறது. இந்நடைமுறையின் போது தரவுகள் பல தளங்களில் வைத்து ஏககாலத்தில் அலசப்படும் நடைமுறையும் (deep-learning) பயன்படுத்தப்படுகிறது. அது பற்றிப் பின்னால் வரும்.
Artificial Neural Network (ANN)

விஞ்ஞானம் கற்ற சிலருக்கு தெரிந்த உதாரணத்தின் மூலம் இதை நான் விளக்கலாம். மனித மூளையும் நரம்புத் தொகுதியும் கொண்டிருக்கும் முக்கியமான அடிப்படை அலகுகளை ‘நரம்புக் கலங்கள்’ (Neurons) என அழைப்பர். இக்கலங்கள் ஒவ்வொன்றையும், தேவைகளைப் பொறுத்து, தேவையான வேளைகளில் இணைப்பதற்கும் துண்டிப்பதற்குமான செயல்முறையையும் இயற்கை இக்கலங்களுக்குக் கொடுத்திருக்கிறது. இத் தேவை கருதிய இணைப்பை synapses என அழைப்பர். வரிசையில் இருக்கும் பல நரம்புக்கலங்கள் தமக்கிடையே இணைப்பை ஏற்படுத்தும்போது ‘தகவல்’ ஒரு கலத்திலிருந்து மற்றய கலத்திற்கு மாற்றப்படுகிறது. முதலாவது கலம் தனக்கு கிடைத்த தகவலை (input) சரிபார்த்து அடுத்த கலத்துக்கு வெளியேற்றுகிறது (output). இந்த output அடுத்த கலத்தின் input ஆக மாறுகிறது. இறுதியான output ஐத் தரும் நரம்புக்கலமே நீங்கள் எதிர்பார்த்த தகவலைத் தரும். செயற்கை விவேகப் பொறிமுறையில் (கணனியில்) இந்நரம்புக் கலங்களுக்குப் பதிலாக செயற்கையான கணுக்கள் (nodes) வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இக்கணுக்களிடையே தகவற் பரிமாற்றம் நடைபெறும். இதையே நாம் செயற்கை ‘நரம்பு வலையமைப்பு ‘ (Artificial Neural Network (ANN) என்கிறோம்.
Deep Learning
மேலே கூறப்பட்ட வலையமைப்பு (ANN) ஒன்றின் கீழ் ஒன்றாகவும் பின்பாகவும் முப்பரிமாண தளங்களில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். இக் கணுக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தரவுகளையும் கொண்டிருக்கும். அத்தோடு இவ்வலையமைப்பிலுள்ள ஒவ்வொரு கணுக்களும் அதிலுள்ள இதர கணுக்களோடு தொடர்புபட்டிருக்கும். இவ்வலையமைப்பிற்கு முன்னால் ஒரு கேள்வி முன்வைக்கப்படும்போது அதில் கணுக்களிலுள்ள தரவுகளும் ஏககாலத்தில் அலசப்பட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு சாதகமான விடையை output ஆக தருகிறது. இப்பல்தள கணு வரிசைகளில் தரவுகள் சேமிக்கப்படும் செயற்பாட்டை deep learning என்கிறார்கள்.

Data & Training
இப்படி deep learning மூலம் சேகரிக்கப்பட்ட பில்லியன்கள் தொகையான தகவல்களையே நாம் Data என அழைக்கிறோம். இத்தரவுகளைச் சேகரிக்கும் முறையை Training என அழைக்கிறோம். செயற்கை விவேகம் பற்றிய உரையாடல்களில் நீங்கள் கேள்விப்படும் Training என்பதற்கும் ஒருவரைப் புதிய வேலைக்குப் பயிற்சியளிப்பதற்கும் சொல்லாடலில் வித்தியாசமுண்டு.
Computer Programming காலத்தில் நாம் கொடுத்த கட்டளைகளின் பிரகாரம் கணனி முடிவைத் தந்துவிட்டு பேசாமல் தூங்கிவிடும். ஆனால் இந்த deep learning செயன்முறையின்போது அனைத்துக் கணுக்களிடையேயும் (notes) நிரலில் அல்லாது தமக்குள்ளேயே குறுக்கும் மறுக்குமாகத் தொடர்பாடும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு முடிவை எட்டவேண்டுமானால் ஒரு கணு தனக்குத் தகவலைத் தரும் கணுவையும் தாண்டி இன்னுமொன்றுடன் தொடர்பை ஏற்படுத்தி தனது முடிவை இலகுவில் எட்டிவிடும். சரியான முடிவை முதல் தடவை எட்ட முடியாவிட்டாலும் இக்கணுக்கள் தமக்குள் கூடி ஆராய்ந்து, கிடைத்த தரவுகளுக்கேற்ப ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவை எட்டிவிடும்.
Parameters
செயற்கை விவேகம் பற்றிய தீவிரமான உரையாடல்களில் நீங்கள் கேள்விப்படக்கூடிய இன்னுமொரு பதம் Parameters. இதை விளங்கப்படுத்த முற்கூறிய ஒலி வழங்குனரின் உதாரணத்திற்கு மீண்டும் வருகிறேன். சபையோருக்கு இதமான ஒலி கிடைக்கும் வரை வழங்குனர் ஒரு பொத்தானைத் திருகுவார் என்றேன். இப்படி பல மில்லியன் பொத்தான்களைக் கொண்ட (மென்பொருளால் சிருஷ்டிக்கப்பட்ட பொத்தான்கள்) ஒரு கணனி இருந்தால் பல adjustment களை ஏககாலத்தில் செய்துவிட முடியுமல்லவா? உதாரணத்திற்கு ஒரு கணனியில் 80 பில்லியன் திருகு பொத்தான்கள் இருப்பின் அதை நாம் 80 பில்லியன் Parameters என அழைப்போம். எனவே ஒரு model எத்தனை அதிகமான parameters ஐக் கொண்டுள்ளதோ அந்தளவுக்கு அது சிறப்பானதும் வேகமானதுமான machine ஆகும்.
காலப் பின்னடைவு
1950 களிலிருந்தே ஒரு வகையான AI எம்மிடம் பாவனையிலிருந்து வருகிறது என ஆரம்பத்தில் கூறியிருந்தேன். உங்களது மின்னஞ்சலில் வரும் குப்பை அஞ்சல்களைக் கண்டுபிடித்து spam folder இல் போட்டுவிடும் நடைமுறையும் ஏறத்தாள, ஒரு AI தான். பின்னர் வந்த Alexa, Siri போன்ற ஏவற் பிறவிகளும் சிறிய ரக AI தான். இப்படிப் பல சிறு சிறு தானியக்க செயற்பாடுகள் கணனிகளில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றை AI என அழைக்கும் துணிச்சல் அப்போது எவருக்கும் இருக்கவில்லை. இப்படியிருக்க ஏன் அதை sophisticated ஆன இயந்திரமாக்க 70 வருடம் பிடித்தது என நீங்கள் கேட்கலாம்.
Hardware & Software
இந்த 70 வருட கால தமாதத்திற்கு காரணம் மென்பொருள்களை எழுதுபவர்களின் குறைபாடல்ல. மாறாக அவர்களது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான வேகமான hardware அப்போது இருந்திருக்கவில்லை. Motorola, Intel போன்ற நிறுவனங்கள் தயாரித்த processor களால் (CPU) இன்றைய வேகத் தேவைகளையும் அதனுடன் இணைந்துவரும் சக்தித் தேவைகளையும் சமாளிக்க முடியவில்லை. ஓரளவு வேகத்துடன் பணியாற்ற வல்ல processor களை gaming எனப்படும் பொழுதுபோக்கு துறைக்கான கணனிகளிலேயே பாவித்தார்கள் (GPU’s) . இப்போது NVIDIA போன்ற நிறுவனங்கள் அதிவேக GPU களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் 2017 இல் நடைபெற்ற ஒரு பாரிய மாற்றம் AI சகாப்தத்தில் புதியதொரு பாதையைத் திறந்துவிட்டது.
Attention
2017 இல், தற்போதுள்ள விக்கிபீடியாவை ஆரம்பித்த Google AI Lab ஒரு விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அப்போது இது பலரது கவனத்தையும் ஈர்க்காமல் எதுவித சல சலப்புமின்றி உலா வந்தது. இதுவே தான் , ChatGPT உட்பட இன்றைய அனைத்து AI நிறுவனங்களுக்கும் அத்திவாரமிட்டது. இக்கட்டுரையில் அதன் ஆசிரியர்கள் முன்வைத்த கருத்து – ஏற்கெனவே புழக்கத்தில் இருந்துவரும் ஒரு நடைமுறைக்கு இணக்கமாக மனித மொழிகளை உள்வாங்கித் தொழிற்படவல்ல Neural Network ஒன்றை உருவாக்குவது. அதாவது ஒரு வசனத்தில் இருக்கும் பல விதமான சொற்களுக்கிடையே இருக்கக்கூடிய தொடர்புகளை ‘உணர்ந்து’ இணைப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு கணித சமன்பாட்டை உருவாக்குவது. இதை அவர்கள் ATTENTION என அழைத்தார்கள்.
உதாரணத்திற்கு ஒரு வசனத்தைப் பார்ப்போம்:
“நரி – தெருவைக் கடக்கவில்லை -ஏனெனில் – அது மிகவும் – களைத்துப்போயிருந்தது”
இங்கு நரியே முன்னணியில் இருக்கிறது, தெருவல்ல. இப்போது மேற்கண்ட வசனத்தை சற்று மாற்றியமைப்போம்.
“நரி-தெருவைக் கடக்கவில்லை-ஏனெனில்-தெரு-மிகவும் அகலமானதாகவிருந்தது”
இங்கு நரிக்குப் பதிலாக தெருவே முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் தெருவைக் கடத்தல் என்பதுதான் அடிப்படை செயன்முறை.
ஏற்கெனவே சேமிப்பில் இருக்கும் தரவுகளில் இருந்து பாவனையாளரின் input தகவல்களுடன் அதிபொருத்தமுள்ள தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயற்பாட்டையே ATTENTION என்றார்கள். மேற்கண்ட உதாரணத்தில் முக்கியத்துவம் பெறும் இரு சொற்கள் ‘நரி’, ‘தெரு’ ஆதியன.
Transformers
ஆரம்ப நாட்களில் எழுதப்பட்ட மென்பொருளில், ஒரு வசனம், அது எழுதப்பட்ட வரிசையில், ஒவ்வொரு சொல்லாக , எழுதப்பட்ட கட்டளைக்கு ஏற்ப (instruction) செயற்படுத்தப்படும். இச்செயன்முறையைத் தவிர்த்து, ஒரு pawthiyaaka எழுதப்பட்ட கட்டுரை அனைத்தையும் (சொற்கள் அனைத்தையும்) ஏக காலத்தில் வாசிக்கும் நடைமுறையை Google AI Lab கட்டுரையாளர்கள் முன்வைத்தார்கள். இதற்கு அவர்களிட்ட பெயர்தான் Transformers. இங்கு ஒவ்வொரு சொற்களும் தத்தமக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கும்.
இங்கு பந்திக்குப் பதிலாக ஒரு படம் (image) கொடுக்கப்பட்டால் கணனி அதைச் சீரான பல துண்டுகளாக (patches) வெட்டி Transformer இல் போட்டுக்கொண்டு ஒவ்வொரு துண்டிற்கும் இடையில் நேரடி இணைப்புகளையும் ஏற்படுத்தி வைக்கும். இங்கும் ஒவ்வொரு துண்டிற்கும் உரிய Attention வழங்கப்படும்.
செயற்கை விவேகத்தை முற்று முழுதாக புரட்டிப்போட்டது இந்த Transformers தான். அதன் நினைவாகத்தான் Chat GPT இல் வரும் கடைசி எழுத்தான T தக்கவைக்கப்பட்டிருக்கிறது. GPT = Generative Pre-Trained Transformer). இந்த Transformer ஐ உள்ளடக்கிய architecture ஐக் கொண்டு உருவாக்கப்பட்ட hardware, 2017 இல் வெளிவரும் வரைக்கும் AI முளைய நிலையில் உறங்கிக்கொண்டிருந்தது எனவே சொல்லலாம்.
AI Agent vs Chatbot
செயற்கை விவேகம் குறித்த சொல்லாடல்களில் நீங்கள் சந்திக்கும் இன்னுமிரண்டு சொற்கள் Agent & Chatbot. இவை இரண்டுக்கும் பாரிய வேறுபாடுகளுண்டு. Chatbot எனப்படுவது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு நின்றுவிடும். ஆனால் AI Agent எனப்படுவது நீங்கள் கேட்ட கேள்வி அல்லது முன்வைத்த தரவுகளிலிருந்து சில முக்கியமான விடயங்களை எடுத்துக்கொண்டு மேலதிகமாக பொதுத்தளங்களில் தேடுகை செய்து நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு தொடர்பான விடயங்களையும் எடுத்து அவற்றை அலசி ஆராய்ந்து எட்டும் முடிவைத் தரும்.
AI இன் எதிர்காலம்
செயற்கை விவேகத்தை முன்தள்ளும் நிறுவனங்களாக எமக்குத் தெரிபவை Open AI, Anthropic, Google Deepmind, Elon Musk’s Groak போன்றவை. இவற்றில் Open AI ஆரம்பத்தில் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக ஆரம்பித்தபோதும் இத்தொழில்நுட்பத்தினால் பல கோடி பண வசூல்களைச் செய்யலாம் என்றறிந்தவுடன் அதன் அதிபர் சாம் ஆல்ட்மன் இந்நிறுவனத்தை ஒரு இலாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாற்றினார். இந்த ஆரம்ப நிறுவனத்தில் இலான் மஸ்க் மற்றும் ஆந்த்ரோப்பிக் நிறுவன அதிபர் டாரியோ ஆகியோர் பெரும் பங்காற்றியபின் தமது சுய தேவைகள் கருதி பிரிந்து போய் தமது நிறுவனங்களை ஆரம்பித்தனர்.
இக்காலத்தில் செயற்கை விவேகத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனித குலத்திற்கே பாரிய தீங்கை விளைவிக்கப் போகிறது என்ற எச்சரிக்கைகளை இந்நிறுவனங்களில் பணிபுரிவோர் சிலர் பகிரங்கப்படுத்த ஆரம்பித்தனர். இருப்பினும் வியாபாரப் போட்டிகள் காரணமாக எந்தவொரு நிறுவனமும் இந்த எச்சரிகைகளைச் சட்டை செய்யவில்லை. இந்நிறுவனங்களின் முதன்மைப் பணியாளர்கள் அனைவரது நோக்கமும் அடுத்ததாகக் கருக்கொண்டுவரும் Artificial General Integgince ஐக் கையகப்படுத்தும் போட்டியில் யார் வெற்றிகொள்வது என்பது பற்றியே. இதே வேளை செயற்கை விஞ்ஞானத்தினால் மனித குலமே அழிவுக்குள்ளாகப் போகிறது என்ற அச்சமும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இச்சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் AI உருவாக்கத்தில் சம்பந்தப்பட்ட சில பணியாளர்கள் தாமாகவே வெளி வந்து இந்த AI ஐ கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் 10 வருடங்களில் அது மனித குலத்தையே அழித்துவிடப்போகிறது என எச்சரிக்கிறார்கள். இதிலுள்ள் உண்மை /பொய் விடயங்கள் ஆராய்வுக்குரியன என்றாலும் செயற்கை விவேகம் சமூகத்தில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் பற்றி பல கல்விச் சமூகங்கள் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றன். ஏற்கெனவே Chatbot ஐப் பாவித்த 9 பேர் அதன் ஆலோசனைக்கிணங்க தற்கொலை செய்துள்ளனர் என்பது இன்னுமொரு விடயம்.
Data Centres
விடயம் இப்படியிருக்கையில் இந்த செயற்கை விவேலக தொழில்நுட்பம் சூழலுக்கு விளைவிக்கப்போகும் தாக்கங்கள் குறித்து உலகளாவிய போராட்டங்கள் ஏற்கெனவே வெடித்துக்கிளம்பி விட்டன. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் ஒரு AI agent தனது செயற்பாட்டை வெற்றிகரமாகச் செய்வதற்கு அத்தியாவசியமானது அதிவேகத்தில் இயங்கக்கூடிய GPU எனப்படும் கணனியின் முக்கிய Processor (GPU). பல பில்லியன் தரவுகளைச் சேகரித்து அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எட்டுவதற்கு முக்கியமான தேவையாக இருப்பது ஒரு தகவற் சேமிப்பு நிலையம். இதையே செயற்கை விவேக சமூகம் Data Centres என அழைக்கிறது. AI குடிகொண்டிருக்கும் கணனிகளுக்கு இவை தான் தகவல் வழங்கல்களைச் செய்கின்றன. பல பில்லியன் தரவுகளைத் தாங்கி வைத்திருப்பதுமல்லாது அவற்றுடன் தொடர்பாடும் கணனிகளுக்கு மின்னல் வேகத்தில் தரவுகளை வழங்கவும் வேண்டும். இந்த செயற்பாட்டுக்கு அவசியமானது சக்தி (Power) . இத்தகவல் மையங்கள் தமது செயற்பாட்டுக்காக விரயமாக்கும் சக்தி பல பெரும் நகரங்களின் சக்தித் தேவையை விட அதிகமானது என்கிறார்கள். அது மட்டுமல்லாது இப்படி விரயமாகும் சக்தியின் இறுதி வெளிப்பாடு வெப்பம். இவ்வெப்பத்தைத் தணிப்பதற்கு தண்ணீரே தேவைப்படுகிறது. இதனால் பல தகவல் மையங்கள் இருக்கும் நகரங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை தீவிரமடைந்து வருகிறது. இயற்கை வளங்களுள்ள பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அரசிய்லவாதிகளை ஏமாற்றி கூகிள், மெற்றா போன்ற நிறுவனங்கள் பாரிய தகவல் மையங்களை அமைத்தனர். இதன் நேரடி விளைவாக மின்சாரப் பாவனையும், தண்ணீர்ப் பாவனையும் அதிகரித்தன. பல தென்னமெரிக்க நாடுகளைல் இதனால் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. அதாவது செயற்கை விவேகத்தால் மனிதருக்கு ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் தோன்றவாரம்பித்தது. இன்று இப்போராட்டம் உலகம் தழுவிய போராட்டமாக வடிவெடுத்துள்ளது.
எதிர்காலம்
செய்ற்கை விவேகம் மனித குலத்தை அழித்துவிடப்போகிறது என்பது இத்துறையில் கற்றுத் துறைபோந்த பலரினால் முன்வைக்கப்படுகிறது. அதே வேளை இதன் நன்மை தீமைகள் பற்றிய விவாதமும் தொடர்ந்துகொண்டே வருகின்றது. ஆனாலும் இதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்ற தரப்பு பலம் பெற்று வருவதுபோல் தெரிகிறது.
போர்களினால் ஏற்பட்ட மனித அழிவுகளின் காரணமாக இழந்துபோன மனிதத் தேவைகளை நிவர்த்திக்க இயந்திரமயமாக்கல் / தொழில்நுட்பம் அத்தியாவசியமானது. இப்போது முதலீட்டாளர்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி, தொழில்நுட்பம் மனிதகுல மேம்பாட்டிற்கு அத்தியாவசியமானது என்ற கருத்தாடலை அரசியல்வாதிகள் திணிக்க முற்படுகின்றனர். இந்த அரசியல்வாதிகள் – தொழிநுட்ப முதலாளிகளின் கூட்டு தமது இலாபத்தை மட்டுமே முன்னிறுத்தி இயந்திரமயமாக்கலையும் அதன் உச்சவடிவமான செயற்கை விவேகத்தையும் முடுக்கிவிட முயற்சிக்கின்றனர். ஆனாலும் செயற்கை விவேகம் மனித விவேகத்தை மீறிப்போய் மனித குலத்தை அழித்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது ஏற்படுத்தப்படும் பாரிய தீங்குகளை சமாளிக்கும் வகையில் (mitigating) இதர உயிரினங்களும் அவற்றுக்குத் துணையாக இயற்கையும் செயற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
[இக்கட்டுரை பற்றிய கருத்துக்களையோ அல்லது மேலதிக விளக்கம் தேவைப்பட்டாலோ அவற்றைப் பிற்பதிவில் தந்தால் உதவியாகவிருக்கும்] Photo by Igor Omilaev on Unsplash
