செயற்கை விவேகம் (AI): அடுத்த 5 வருடங்களில் 50 வீதமான அலுவலகப் பணிகள் ஒழிக்கப்படும்!
AI நிபுணர் எச்சரிக்கை!
அதி வேகமாகப் பரவி வரும் செயற்கை விவேகப் பாவனையால் அடுத்த 5 வருடங்களில் உலகின் ஆரம்ப நிலை அலுவலகப் பணியாளர்களில் 50% த்துக்கு மேலானோர் பதவிகளை இழக்கும் நிலை ஏற்படுமென முன்னாள் OpenAI நிர்வாகியும் AI ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்றோப்பிக்கின் முதன்மை நிர்வாகியுமான டாறியோ அமொடாய் எச்சரித்திருக்கிறார். துரிதமாக அபிவிருத்தியடந்து வரும் செயற்கை விவேகத் துறையால் அமெரிக்காவில் மட்டும் அடுத்த வருடம் ஆரம்பித்து ஐந்து வருடங்களில் 10-20% பேர் வேலைகளை இழப்பர் எனவு அவர் எதிர்வு கூறியுள்ளார். தொழில்நுட்பம், நிதி, சட்டம், ஆலோசனை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என அவர் கூறுகிறார்.
பொதுமக்களும் அரசியல்வாதிகளும் வரவிருக்கும் இப்பாரிய மாற்றத்தைப் பற்றி இன்னும் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள்; அடுத்த இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளப்போகும் இப்பாரிய பிரச்சினை பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையில்லாது இத்துறை சார்ந்த நிறுவனங்களும், அதிகாரிகளும் புழுகித் தள்ளுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
இம்மாத ஆரம்பத்தில் மெற்றா நிறுவனத்தினால் ஏவப்பட்டு லினக்ஸ் அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாடுகளின் பொருளாதாரத்தின் வினைத்திறன், புதுமை, சேமிப்பு, வருமான அதிகரிப்பு ஆகியவற்றில் செயற்கை விவேகம் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது என அறியப்படுகிறது. ஆனாலும் இம்முன்னேற்றங்களின் நேரடி விளைவாக தம்மில் பெரும்பாலானோர் வேலைகளை இழக்கப்போகிறோம் என்பதை இவர்கள் உணரமுடியாதவர்களாக இருக்கிறார்கள். சீனாவின் தொழில்நுட்பப் பாய்ச்சலுடன் ஒப்பிடும்போது தாம் பிந்தங்கிவிடலாமென்ற அச்சத்தில் அமெரிக்க அரசாங்கம் இவ்விடயத்தில் வாய் பேசாதிருக்கிறது என அமொடாய் எச்சரிக்கிறார்.
“AI தொழில்நுட்பத்தினால் தமது நிகர இலாபம் பெருகுவதைக் கண்டு வியாபாரிகள் விரைவில், ஏறத்தாழ ஒரு இரவில், மனிதர்கள் பெருந்தொகையாகத் தூக்கியெறியப்படுவார்கள்; புதிய பதவிகளோ, வெற்றிடங்களோ அறிவிக்கப்பட மாட்டா; வெற்றிடமான பதவிகள் நிரப்பப்படமாட்டா. இதற்குப் பதிலாக தானியக்க தொழில்நுட்பம் மாற்று உபாயங்களை வழங்கும்” என்கிறார் அமொடாய்.
செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் தீங்குகளைக் குறைக்க அவர் அரசுகளுக்கும் தொழில்துறைத் தலைவர்களுக்கும் பின்வரும் ஆலோசநைகளை அவர் வழங்குகிறார். 1). செயற்கை விவேகத்தால் இழக்கப்போகும் வேலைகள் பற்றிய தரவுச் சேகரிப்பு ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். 2). அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 3) செயற்கை விவேகத் தொழிநுட்பத்தினால் தேட்டமாகும் வருமானத்திற்கு மேலதிக வரி விதிக்கப்பட்டு அது பாதிக்கப்படும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
செயற்கை விவேகத்தின் வருகையை உத்தேசித்து பல பெரிய நிறுவனங்கள் இப்போதே பெருந்தொகையான பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டன. எதிர்பார்த்ததை விடச் சிறப்பான வருமானத்தையும் இலாபத்தையும் ஈட்டியிருந்த போதும், இந்த மாத ஆரம்பத்தில் மைக்கிரோசொஃப்ட் நிறுவனம், பெரும்பாலான பொறியியலாளர் உட்பட 6,000 பேரைப் பணிநீக்கம் செய்திருந்தது. நிர்வாகத்தை இலகுவாக்குவதாகக் கூறி வால்மார்ட் நிறுவனம் 1,500 பேரைப் பணிநீக்கம் செய்திருக்கிறது. இவற்றை முன்னுதாரணமாகக் காட்டி அமொடாய் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளார். Photo by Gerard Siderius on Unsplash
