LIFEScience & Technology

செயற்கை விவேகம்: சமூகத்தைச் சிதைக்கப்போகும் புதிய போதைப் பொருள்?

மனிதரின் பலவீனத்தைப் பணமாக்கும் வியாபாரிகளின் தட்டில் புதிதாக அமர்த்தப்பட்டிருக்கும் பொருள் செயற்கை விவேகம். அனைத்துத் தொழில் நுட்பங்களின் வரவுகளின் பின்னாலும் தேவைகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. இம் முதற்தர தேவைகள் தீர்க்கப்பட்டதும் அவற்றை உருவாக்கிய நிறுவனங்கள் இவற்றுக்கான இரண்டாம் தர தேவைகளைக் கண்டுபிடிக்க உளவியலாளார்களை நாடுவதும் அவர்கள் சமூகத்தின் பலவீனமான (vulnerable) உறுப்பினர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் பழகிப்போன வரலாறு. இவர்களின் இலக்குகளாக, துர்ப்பாக்கியமாக, பெண்களும், விழிம்புநிலை மக்களும், உயர்தட்டிலில்லாத இனக்குழுமங்களுமாக இருப்பது ஒன்றும் விபத்தல்ல. ஒரே பொருளை வித்தியாசமாகப் பொதி செய்து ஆண்களுக்கு ஒரு விலையும், பெண்களுக்கு அதிக விலையும் நிர்ணயித்து விற்பனை செய்வது வழக்கமாகிப்போன நிகழ்வுகள்.

ஒரு தடவை உடல் நிலை காரணமாக மருத்துவரிடம் போனபோது “கூகிளைப் பார்த்துவிட்டு வந்து இங்க எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம். அறிகுறிகளை மட்டும் சொல்லுங்க” என அவர் கூறியது அப்போது கடுப்பேத்தியது உண்மை. பெரும்பாலான வியாதிகள் உடல் சம்பந்தமானதாக இல்லாவிட்டாலும் மனமும் உடலும் சேர்ந்து ‘பொய்’ சொல்வதால் ஏற்படும் விளைவுகளின் அறிகுறிகளாக இருப்பவை என ஒரு மருத்துவ நண்பர் ஒருதடவை சொன்னது இப்போது சரியெனவே படுகிறது.

அப்போது கூகிள் இல்லாத காலம். ஒரு தடவை எனக்கு மார்பு வலி இருப்பது போல் உணர்வு இருந்தது. அப்போது எனக்கு வயது இருபத்தைந்து. நண்பர் ஒருவரிடம் அதைக் கூறியபோது அவர் சொன்னார் “வலி நெஞ்சுக்கு குறுக்கால போனதா? அப்பிடியெண்டா அது ஹார்ட் அட்டாக் ஆக இருக்கலாம்” என்று. இது நடைபெற்றது லண்டனில். அன்று ஞாயிற்றுக்கிழமை. மருத்துவரது அலுவலகம் திறந்திருக்கவில்லை. எனக்கோ பயம் பிடித்துக்கொண்டு விட்டது. உடனே ‘அவசரகால மருத்துவரை’ வீட்டுக்கு அழைத்தேன். வந்தது ஒரு கேரள பூர்வீகத்தவர். நன்றாக தமிழ் பேசினார். அறிகுறியைக் கேட்டவுடன் “உலகத்தில ஆயிரம் வியாதி இருக்கும். ஆனால் அதெல்லாம் நமக்கு வரவேணுமெண்டு கட்டாயமில்லை” என்று சொல்லிவிட்டு மருந்தொன்றை எழுதித் தந்தார். ‘பூட்ஸ்’ ஃபார்மசியில் தெரிந்த ஒரு பெண் பணிபுரிந்தார். அவரிடம் மருந்தை வாங்கி மருத்துவர் கூறியதன் பிரகாரம் அதை எடுத்தேன். வலி விடுதலை பெற்றது. சில நாட்களுக்குப் பிறகு அந்த ஃபார்மசிப் பெண்ணைச் சந்தித்தபோது நலம் விசாரித்தார். “எல்லாம் ஓ.கே.” என்றேன். சிரித்துவிட்டு சொன்னார். “மருத்துவர் எழுதியது ஒன்றும் மாயமான மருந்தில்லை, வெறும் ரோணிக்’ என்றார்.

நெஞ்சுக்கு குறுக்கால வலி என்றால் மாரடைப்புக்கு அறிகுறி என்ற நண்பருக்கும் கூகிளுக்கும் அவ்வளவு வித்தியாசமில்லை. இந்த இரண்டு மூலங்களும் பிறரது தரவுகளை வைத்துக்கொண்டே தமது தீர்ப்புக்களை முன்வைத்தன(ர்). கூகிளின் அடுத்த பரிமாணமே செயற்கை விவேகம். செயற்கை விவேகத்திடம் இருப்பது அதிக தரவுகள், அவற்றை அலசி ஆராயத்தக்க வேகமான கணனிகள், அதே வேளை கூகிளைப் போலல்லாது, செயற்கை விவேகம் உங்களிடமிருந்து உங்கள் பலம் / பலவீனம் போன்ற விடயங்களைப் பிடுங்கி எடுத்து அவற்றையும் தனது அலசலுக்குள் ஈடுபடுத்துவதே சிறப்பம்சம். கூகிள் மட்டுமல்லாது சமூக வலைத் தளங்களில் ஏற்றப்படும் பெரும்பாலான செயலிகளின் (apps) தொழிலே தரவுகளை உருவுதல் தான். அவற்றை வணிக நிறுவனங்களுக்கு விற்று அவை பணம் சம்பாதிக்கின்றன.

தேயற்றதெனத் தூக்கி வீசும் சில பண்டங்களை இரகசியமாகப் பதுக்கிவைத்து பல அழகுணர்வுள்ள அல்லது பாவனைக்குகந்த பொருட்களை உருவாக்க வல்ல படைப்புணர்வுள்ள சிலரைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் எவ்வளவுக்கெவ்வளவு பண்டங்கள் சேர்கின்றனவோ அதற்கெற்றவாறு படைப்புகளும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். அப்படியான ஒரு படைப்பாளியை செயற்கை விவேகமாகவும் பண்டங்களைத் தரவுகளாவும் யோசியுங்கள். அவருடைய கற்பனைத் திறன் அவர் சார்ந்த சூழலையோ அல்லது அவர் கற்பனை செய்யும் பிம்பங்களையோ உருவகித்து படைப்பொன்றைச் சாத்தியமாக்குகிறது. செயற்கை விவேகத்திற்கெனத் தனியான கற்பனைத் திறனோ அல்லது சூழலை அவதானித்து அதன் மூலம் முடிவொன்றை எட்டவல்ல திறனோ கிடையாது. பலவிதமான உரையாடல்கள் மூலம் உங்கள் உள்ளக்கிடக்கைகளை அறிந்துகொள்ளும் வகையில் அதன் மென்பொருள் உருவாக்கப்படுவதால் அம்மென்பொருளை உறுவாக்குபவரது படைப்புணர்வே இறுதியில் வெற்றிபெறுகிறது. இவ்வகையில் GPT4, GPT5 என அவை மெருகேற்றப்பப்டுகின்றன.

மருத்துவத் துறையிலும், விஞ்ஞானத்திலும் செயற்கை விவேகம் அசுர பாய்ச்சலைச் செய்துவருகின்றது என்பதில் சந்தேகமில்லை. உடலிழையங்கள், கலங்கள் என அவற்றின் அசாதாரண செயற்பாடுகளை ஆய்ந்தோ, உய்த்தோ அறியும் ஆற்றல் மருத்துவ நிபுணர்களின் ஆற்றல்களையும் மிஞ்சிவிடுகிறது என்பதும் உண்மை. அந்தளவில் அதன் முதற்தரத் தேவை பூர்த்தியடைகிறது. சாம் அல்ட்மான் மற்றும் முகநூலின் சக்கர்பேர்க் போன்றவர்களது திறமைகளைக் கண்ட பணமுண்ணும் கழுகுகள் இப்போதுதான் களத்தில் இறங்குகின்றன. பணமொன்றைத் தவிர மனித குலத்தில் எந்தவித அக்கறையுமற்ற இந்த இனத்தின் வரலாறும் பலருக்குத் தெரியாத ஒன்றல்ல.

இந்த இடத்தில் தான் மனித குலம் இவர்களிடம் தோற்றுப்போகிறது. அப்போ அரசாங்கங்கள் என்ன புடுங்கிக்கொண்டிருந்தனவா? என நீங்கள் கேட்கலாம். மனித குலத்தை அழிவுகளின்றும் காப்பாற்றுவதற்கான உரிமையை அப்பாவி மக்கள் அரசியல்வாதிகளிடம் கையளித்துவிட்டு நாமுண்டு நம் சோலியுண்டு என இருந்துவிடுவதனால் தான் இந்தப் பிரச்சினை. அரசியல்வாதிகளில் நல்லவர்கள் இருக்கமுடியாது என்ற முடிவை நான் எட்டி நீண்ட காலமாகிவிட்டது. உங்களிடம் வாக்குகளையும், கழுகுகளிடம் பணத்தையும் பெறுவதில் அரசியல்வாதிகள் ஒருபோதும் சிரமப்படுவதில்லை. இனம், மதம், குலம், சாதி இவற்றைக்கொண்டு எழுதப்படும் சுலோகங்களை அவர்கள் தேர்தல் காலத்தில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும்போது நெகிழ்ந்துருகி ‘அவன் நம்மாள்டா’ என்று வாக்களித்துவிட்டுப் போய்விடுவதும் எமது தவறுதான். எனவே அவர்கள் மனிதகுலத்தைப் பாதுகாப்பார்கள் என ஒருபோதும் நம்பவேண்டாம்.

சிவனே சோமபானம் அருந்திவிட்டுத்தான் ஆனந்த தாண்டவம் புரிந்தார் எனச் சிலர் மறுத்தான் போடலாம். ஆனால் அப்போது விளம்பரங்கள் செய்வதற்கு ஊடகங்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். மீராபாய் போன்ற ஓருவர் கண்ணன் மீது தீராக் காதல் கொண்டு கணவனைப் புறந்தள்ளிவிட்டு கண்ணனே எனது கணவன் என யாத்திரை போன காலமல்ல இது. அவருக்கு மனநோய் இருந்தது என்பதை மறுத்து பக்தி இலக்கியங்கள் அவரைக் கொண்டாடின. மீராவைப் பிரதி பண்ணி இன்னும் எத்தனை பேர் தமது வாழ்க்கையைத் தொலைத்தார்களோ தெரியாது. இணையம் இல்லாமையால் பலர் அப்போது தப்பித்துக் கொண்டிருக்க்வும் வாய்ப்புண்டு. இன்றைய காலத்தில் ஒரு தீய பண்டத்தை நல்லதெனப் பொய்கூற ஊடகங்கள்; அவற்றுக்கு வக்காலத்து தருவதற்கு ‘பேராசிரியர்கள்’; பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் ஏறாமல் செய்வதற்கு சட்ட நிபுணர்கள்; அதைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அப்பாவி பொதுமக்களின் பணத்தைப் பங்குச் சந்தைகள் மூலம் பெற்றுக்கொடுக்க நிதி நிறுவனங்கள் என one-stop-shopping வடிவத்தில் இக் கழுகுகள் ஒரு பரிவாரத்தையே தமது இறகுகளுக்குள் வைத்திருக்கின்றன.

2023 இல் செயற்கை விவேகம் திடீரெனப் புற்றுக்குள் இருந்து பாய்ந்து வெளிவரும்வரை அது புழுங்கிக்கொண்டிருந்தது. இதனால் மனித குலம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது எனப் பலர் எச்சரித்திருந்தார்கள். சைவ சமயத்தில் கூறுவதைப் போல “முறைப்படி தவல் செய்தபடியால் நான் இவ்வரத்தை உனக்கு தருகிறேன் ஆனால் இதை நீ தவறான காரணங்களுக்கெனப் பாவித்தாயானால் நீ அழிந்து போவாய்” என அரக்கனுக்கு வரமளிக்கும் சிவனைப் போல இங்கு எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்க அரசுகள் முன்வரவில்லை. இதனால் வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுவதற்கேற்ற பாதுகாப்புகளை (guard rails) உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை இதன் பிரயோகம் முடக்கி வைக்கப்படவேண்டுமென கூகிள் நிறுவனத்தில் இத்திட்டத்தில் பணிபுரிந்த பலர் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்திருந்தார்கள். பேராசையால் கழுகுகள் கண்களை மூடிகொண்டன.

செயற்கை விவேகத்தினால் ஏற்படப்போகும் முதலாவது தற்கொலை 2023 இல் நிகழலாமெனத் தான் எதிர்பார்ப்பதாக கெரி மார்க்கஸ் என்பவர் ஆகஸ்ட் 2022 இல் வெளிவந்த WIRED சஞ்சிகையில் எழுதியிருந்தார். அவர் எதிர்வு கூறியது போல் மார்ச் 2023 இறுதி வாரத்தில் பெல்ஜியத்தில் முதலாவது நபர் Chatbot உடன் உரையாடிவிட்டு அதன் தூண்டுதலால் தற்கொலை செய்துகொண்டார். சூழல் பாதிப்பினால் உலகம் பேரழிவைச் சந்திக்கப்போகிறது என்ற அவரது சித்தப் பிரமையைக் கேட்டறிந்த Chatbot அவரது பலவீனத்தைப் பயன்படுத்தி இத்தற்கொலைக்குக் காரணமாக அமைந்தது. இறந்தவரின் மனைவி, உளவியலாளர் ஒருவரின் சாட்சியத்துடன் வழக்குத் தொடர்ந்தார். இறந்தவர் ஏற்கெனவே பலவீனமானவர் அதனால் Chatbot ஐக் காரணமாக்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் பலர் என்றுமில்லாதவாறு தனிமையில் வாடுகிறார்கள். இளையோ பலர் காதல் முறிவு, பெற்றோரின் மண முறிவு எனப் பல காரணங்களினால் தனிமையை எதிர்கொள்கின்றனர். இவர்களில் பணமுள்ளவர்கள் விடுமுறை, மதுச் சாலை எனத் தற்காலிக நிவாரணத்தைத் தேடிக்கொள்கின்றனர். வசதியற்றோருக்கு உற்ற நண்பராகக் கிடைப்பது இணையத் தொடர்பு மட்டுமே. கோப்பிக் கடைகளும், நூலகங்களும் வழங்கும் இலவச இணையம் இவர்களுக்கு களமமைத்துக் கொடுக்கிறது. சக்கர்பேர்க் போன்றவர்கள் வழங்கும் இலவச செயலிகள் ‘உளவள ஆலோசனை’ என்ற பெயரில் இவர்களின் பலவீனங்களை உருவி இவர்களுக்கு உகந்த வகையில் பேசும் பெண்களையோ அல்லது ஆண்களையோ உருவாக்கி இவர்களை மயக்கி ‘ஆசுவாசப் படுத்துவதாக’ நம்பவைக்கின்றன. இதன் மூலம் இளையோர் இப் பொம்மைகளுடன் காதல் கொண்டுவிடுகின்றனர். இதனால் நிஜமான உறவுகளைத் தேடிக்கொள்ளும் விருப்பற்றவர்களாக இவர்கள் மேலும் தனிமைப்படுகின்றனர். சாம் அல்ட்மான் போன்றவர்களோ அல்லது ‘சிநேகித செயலிகளை’ உருவாக்குபவர்களோ இதை எதிர்பார்க்காதவர்களல்ல. அரசாங்கமும் சட்டமும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமென்ற கர்வம் அவர்களுக்கு இருக்கும்வரை இது தொடரத்தான் போகிறது.

இப்போதுவரை ஒரு கைபேசியும் இணையத் தொடர்பும் இருந்தால் ஒரு பேசும் படத்துடன் எவ்வகையான உறவையும் வளர்த்துகொள்ள Chat GPT போன்ற சாதனங்கள் வழிசெய்து தந்திருக்கின்றன. அடுத்த கட்டமாக அவை கைபேசி அல்லது கணனியின் திரைகளிலிருந்து வெளியே குதித்து நிஜமான ‘றோபோ’ க்களாக வீடுகளில் குடியேறப் போகின்றன. சில முறுக்கிகளை முறுக்கி விடுவதனால் ஒரே றோபோ நண்பனாகவோ, நண்பியாகவோ, ஆலோசகராகவோ, ஆசிரியராகவோ அல்லது காதலர், காதலியாகவோ உடனடி மாற்றம் பெறலாம். இனம், மதம், குலம், தேசம், மொழி என்று இன்னோரன்ன தேர்வுகளைக் கொண்ட, ஏறத்தாழ மனித குணாம்சங்களுடனான றோபோக்கள் இப்போது கருக்கொண்டு வரலாம். எவ்வகையான உரையாடல்களுக்கும், உறவுகளுக்கும் அவை தயார். அரசியல்வாதிகளும் தமக்கு இலவசமாகக் கிடைக்கும் பொம்மைகளோடு குடும்பம் நடத்தலாம். யார் கண்டது?

செயற்கை விவேகத்தினால் வரப்போகும் ஆபத்துகள் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் செய்யப்பட்டு வருகின்றன. மேலே குறிப்பிட்டதைப் போல கண்ணன் மீது தீராக் காதல் கொள்ளும் பெண்களின் பின்னால் இருந்திருக்ககூடிய Para-social Relationship உருவாகுவதற்கு காரணம் நீல வர்ணக் கண்ணன் அழகாகச் சிலையாக்கப்பட்டது மட்டுமல்ல அழகான பெண்களுடன் அவன் புரிந்ததாகக் கூறப்படும் லீலைகளை இசையுடன் கூடிய பாடல்களாக இந்துமதம் வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தியமையும் தான். பின்னர் சினிமா நாயக, நாயகிகள் பலவீன மனங்களை ஆக்கிரமித்தன. இப்போது அசலான குரல்களைக் கொண்ட செயற்கை விவேக ஆண்கள் / பெண்கள் மீது மோகம் கொள்ளும் லீலைகள் சமூக ஊடகங்கள் மூலம் வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தப்படுகின்றன.

Details are in the caption following the image
நன்றி: Open in figure viewerPowerPoint – உதாரணத்திற்கு ஒரு உரையாடற் பதிவு:

ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கான ( well-being contributors) மிகச் சிறந்த மூலகாரணமாக இதுவரை இருந்து வருவது சமூக ஊடாடல் ஒன்று தான். நமது கிராமங்களில் இது கோவில்களாகவோ, கடைச் சந்திகளாகவோ, சனசமூக நிலையங்களாகவோ இருந்தன. நகரங்களில் சதுக்கங்கள் இத் தேவைகளைப் பூர்த்தி செய்தன. இவ்விடங்களுக்குச் செல்ல முடியாத அல்லது அவகாசம் வழங்கப்படாத பெண்கள் பலர் வேலிகளுக்கு இருமருங்கிலும் இருந்து பேசிகொள்வதன் மூலம் தத்தமது மனத்தாங்கல்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொண்டார்கள். ஒருவர் தனக்கு மட்டுமே இருக்கும் பிரச்சினை என உள்மனதுக்குள் வைத்து அங்கலாய்க்கும் (looping) ஒரு விடயம் பலருக்கும் நிகழும் ஒரு வெகு சாதாரணமான ஒன்று என்பதை அறியும்போது அவருக்கு கிடைக்கும் நிவாரணம் (relief) அவரது மனதுக்கு எத்துணை ஆறுதலைக் கொடுக்கிறது? சமூக ஊடாடல் ஒன்றின் மூலமே இது சாத்தியமாகும். அந்த வகையில் செயற்கை விவேகம் மூலமாக மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் சில நொந்துபோன மனங்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கக்கூடும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் கோவில்களில், சனசமூக நிலையங்களில், வேலிகளில் போல இங்கு நேரக் கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் அது போதையாகப் பரிணமித்து இயல்பு வாழ்வைப் பாதிக்கிறது என்பதே சமூக அக்கறையாளரின் கரிசனை.

செயற்கை விவேகம் போன்ற தொழில்நுட்பங்கள் மனிதரின் நல்வாழ்வுக்குக் குந்தகமாக அமைகின்றனவா என அறிவதற்குப் பல ஆய்வுகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் சில தனிமையில் வாடுபவர்களுக்கு இப்படியான தொழில்நுட்பங்கள் நிவாரணத்தை வழங்குகின்றன எனவும் நீண்ட காலத்தில் பாதகமாக அமைகின்றன எனச் சிலவும் முன்வைக்கும் தீர்வுகள் குழப்பம் தருபனவாக உள்ளன. இவ்வகையான தொழில்நுட்பங்கள் மூலம் இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் சில ஆய்வுகளுக்கான முதலீடுகளைச் செய்வதால் அவற்றின் முடிவுகள் பாரபட்சமாக அமைவதும் தெரியவந்துள்ளது. புகை பிடித்தல், போதைப் பொருட் பாவனை போன்று சமூகத்தைச் சீரழிக்க ஆரம்பித்த பின்னர் அவற்றைக் கட்டுப்படுத்த முயலும் அரசுகள் செயற்கை விவேக விடயத்தில் முன்நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனப் பல கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் பலம் வாய்ந்த OpenAI, Microsoft, Google போன்ற பல இலாபம் மட்டுமே இலக்கெனக் கருதும் நிறுவனங்கள் இளைய சந்ததியினரைப் பலியிட்டே ஆகுவோம் என வரிந்துகட்டிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்.

செயற்கை விவேகத்தைப் பாவித்து உருவாக்கப்பட்ட இரண்டு செயலிகள் படு வேகமாகத் தரையிறக்கம் செய்யப்படுகின்றன. ஆண்ட்றோயிட் தளத்தில் (Play Store) இருக்கும் இப்படியான செயலி ஒன்று இதுவரை 10 மில்லியன் தடவைகள் தரவைறக்கப்பட்டுள்ளது. றெடிட் தளத்தில் இதற்காக 70,000 கூட்டாளிகள் இணைந்திருக்கின்றனர். 19-62 வயதுக்குட்பட்ட 8 ஆண்களும் 13 பெண்களும் மேற்கொண்ட 321 பதிவுகளை ஆராய்ந்த குழுவொன்று அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களை இப்படி வரிசைப்படுத்துகிறது.

  1. AI என் தனிமையைப் போக்குகிறது.
  2. தேவை ஏற்படும் போதெல்லாம் AI எனக்காக ஓடி வருகிறது.
  3. AI நட்புக்கு மனம் என்று ஒன்று இல்லாமையால் நான் எதைக் கேட்க விரும்புகிறேனோ அதையே அது தருகிறது.
  4. AI நட்புக்கு இலகுவாக அடிமையாகிவிடுகிறேன்.

காதலும் போதை தரும் ஒரு விடயம்தான். அதற்கு இயற்கை ஒரு கால எல்லையை இயற்கை விதித்திருக்கிறது. புகை பிடித்தல், போதைப் பொருள் போன்ற இன்னோரன்ன விடயங்களுக்கு நாமே தான் கால எல்லைகளை நிர்வகிக்க வேண்டும். இவற்றினால் ஏற்படும் பேரழிவுகள் இன்னும் எம்மத்தியில் கோலோச்சுகின்றன. செயற்கை விவேகமும் இப்பையொன்றாக மாறிவிடும் ஆபத்துண்டு என்பதனால் அக்கறையுள்ள சிலர் எச்சரிக்கைகளை மணிகளை ஒலிக்கிறார்கள். ஆனால் அரசாங்கங்கள் கேட்பதாயில்லை. Photo by Muhmed Alaa El-Bank on Unsplash