செயற்கை விவேகம்: கெடு குடி சொற்கேளாது!
சிவதாசன்
இன்று கனடிய சீ.பீ.சீ. வானொலியில் ஒரு செய்தி வந்தது. நியூஃபவுண்லாந்தில் ஒரு தாய்க்கு அவரது மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் மகன் ஒரு விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாகச் சிகிச்சைக்குப் பெருமளவில் பணம் தேவைப்படுகிறதெனவும் தாயார் தெரிவித்தார். ஆனால் அது உண்மையல்ல; செயற்கை விவேகத்தின் முதற் கோரப்பற்கள் எனப் பின்னர் கண்டுபிடித்ததால் அவர் தப்பிக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
கனடாவில் இதுவரை ஏறத்தாழ 200,000 டாலர்களைப் பெற்றோர்கள் இழந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரு தொழில் முகவர் 250,000 டாலர்களை இழப்பதிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார். செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தைப் பாவித்து பிள்ளைகளின் குரல்களைப் பிரதிசெய்து வரும் தொலைபேசி அழைப்புக்களின் மூலம் ஏமாற்றுக்காரர் பெற்றோரிடம் பெருந்தொகையான பணத்தைக் கறந்து வருகிறார்கள். கடந்த மாதத்தில் கனடாவில் நடைபெற்ற நான்காவது சம்பவம் இது. இந்தத் தடவை கள்ளன் பிடிபட்டுவிட்டார்.
செயற்கை விவேகம் தலைகாட்டுவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே ‘தலை மாத்தி’ வெளிநாடு வந்த தமிழர்கள் நாங்கள் என்றுவிட்டு உஷார் ஆடையைக் களைந்து வைத்துவிட வேண்டாம். ‘ஃபோட்டோஷொப் தொழில்நுட்பமும் பலருக்கு நல்ல உதவிகளைச் செய்து வந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி எங்கேயோ போய்விட்டது செயற்கை விவேகம் (செ.வி.).
பூர்வீகம்
செ.வி. உலகில் தலைகாட்டி 2,700 வருடங்கள் ஆகின்றன என ஒரு புராணக் கதை வல்லுனரும் விஞ்ஞான வரலாற்றாசிரியருமான ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புலமையாளர் ஏட்றியென் மேயர் கூறுகிறார். செயற்கையாக உயிர்களை உருவாக்குவது பற்றியும், தானாக இயங்கும் இயந்திரங்கள், ரோபோக்கள் பற்றியும் புராணக் கதைகளில் குறிப்புகள் உள்ளதாக அவர் கூறுகிறார்.
இந்து புராணங்களில் உள்ளதுபோல புராதன கிரேக்கர்களும் ஒவ்வொரு தேவைக்குமெனப் பல கடவுள்களைப் படைத்திருந்தார்கள். புதிய கண்டுபிடிப்புக்களுக்கும், இரும்பு வேலைகளுக்குமென அவர்கள் உருவாக்கிய கடவுளுக்குப் பெயர் ஹெஃபேஸ்டஸ் (Hephaestus). ஹெஃபேஸ்டஸ் உருவாக்கிய பூதாகர வெண்கல மனிதனுக்குப் பெயர் ரலோஸ் (Talos). அதற்கு வேறு பல கடவுளர்கள் சேர்ந்து கொடுத்த உயிருக்குப் பெயர் ஐக்கோர் (Ichor). இதே போல பண்டோரா (Pandora) என்னும் பெண்ணையும் அவரது பெட்டியையும் படைத்து பிரச்சினைகளை உருவாக்கியவரும் இந்த ஹெஃபேஸ்டஸ் தான். ஆனால் அவரது சிருஷ்டியில் முக்கியமானது தங்கத்தினால் செய்யப்பட்டு செயற்கை உயிர் கொடுக்கப்பட்ட வேலைக்காரர்கள். இந்து மதத்திலும் இப்படிப் பல புராணக் கதைகள் உண்டு. அரக்கர்களைப் படைத்து பல சாகசங்களைப் புரிந்தவர்கள் நமது கடவுள்கள். ஆனால் எமது புராணங்களில் மட்டுமல்ல கிரேக்க புராணங்களிலும் முடிவு ஒன்றுதான். அதாவது இப் படைப்புகளினால் எப்போதுமே மனித குலத்துக்கு அழிவுதான் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் மேயர்.
நவீன செயற்கை விவேகம்
தற்போதைய செயற்கை விவேகத்தின் மூலவர் எனப்படுபவர் அலன் ரூறிங் (Alan Turing). இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளின் சங்கேத பரிபாஷையை (enigma) உடைக்கக்கூடிய ‘சிந்திக்ககூடிய’ கணனி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் அப்போது ஈடுபட்டிருந்தார் என்கிறது வரலாறு.
ஆனாலும் ‘செயற்கை விவேகம்’ (Artificial Intelligence) என்ற சொல்லை முதலில் அறிமுகம் செய்தவர் ஜோன் மாக்கார்த்தி என்பவரே. “விஞ்ஞானமும் பொறியியலும் இணைந்து விவேகமூள்ள இயந்திரங்களை உருவாக்கவேண்டும்” என முதலில் வரைவு செய்தவர் இவர். இவர் முதலில் உருவாக்கிய கணனி மென்பொருளுக்குப் பெயர் லிஸ்ப் (LISP). ரஸ்ய சதுரங்க ஆட்டக்காரரை முறியடித்த கணனியைச் செயற்படுத்தியது இந்த மென்பொருள்தான். இன்றைய செ.வி. மென்பொருளில் LISP இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. 1997 இல் IBM இனால் உருவாக்கப்பட்ட ‘டீப் புளூ’ (Deep Blue) என்ற செ.வி. கணனி உலகின் சதுரங்க நாயகன் கரி கஸ்பரோவை வீழ்த்திச் சாதனை புரிந்தது. இதன் பிறகு பல விண்ணர்களும் செ.வி. யைச் செழுமைப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும் இவையெல்லாம் பெரும்பாலான மேற்குலக நாடுகளின் இராணுவ புலனாய்வுத் தேவைகளுக்குள் முடக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தெரியாமல் சிறு சிறு பணிகளைச் செய்துவந்தன.
செ.வி. போன்ற மென்பொருள்களை எழுதுவதற்குப் பலர் தயாராக இருந்தாலும் தற்போதைய ChatGPT அளவுக்கு ஒன்றை உருவாக்குவதற்குப் பல தடைகள் இருந்தன. ஒன்று அதிவேகத்தில் இயங்கும் கணனிகள். மற்றது தகவல் திரட்டும் திறமை. தனி மனிதர்களின் பிரத்தியேகங்கள் பாதுகாக்கப்படவேண்டுமென அமெரிக்க மக்கள் போர்க்கொடி தூக்கிவந்தமை இத் தகவல் திரட்டுக்குக் குந்தகமாக இருந்தது. 2001 இல் நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் இத் தடைகள் உடைத்து நொருக்கப்பட்டன. ‘நாட்டின் தேசியப் பாதுகாப்புக்காக’ தனிமனித பிரத்தியேகங்களை இழக்கலாம் என அரசு முடிவெடுத்தது. கூகிள், மைக்கிரோசொஃப்ட் போன்ற நிறுவனங்களின் கை விலங்குகள் நிபந்தனைகளின் பேரில் கழற்றப்பட்டன. அவை உருவாக்கப்போகும் செ.வி. அமெரிக்க இராணுவப் பயன்பாட்டையே முதன்மைப் படுத்த வேண்டும்.
மைக்கிரோசொஃட் நிறுவனத்துக்கும் கூகிள் நிறுவனத்துக்கும் இதில் போட்டி. கூகிள் ஏற்கெனவே ஏகப்பட்ட தகவல்களைத் திரட்டி வைத்திருந்ததும் மிகுந்த பணபலப் பின்னணியைக் கொண்டிருந்ததும் அதற்குச் சாதகமாகப் போய்விட்டது. பல நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள் செ.வி. உருவாக்கத்தில் ஈடுபட்டனர். ஆனால் செ.வி. த்தை அமெரிக்க இராணுவம் கையகப்படுத்த எடுத்த முயற்சி அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஏறத்தாழ 100 பொறியியலாளர்கள் கையெழுத்திட்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கூகிளின் முதன்மைப் பொறுப்பாளரும் அவர்களது கோரிக்கைக்கு இணங்கினார். இறுதியில் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அங்கம் தனது வழமையான பாணியில் செயற்பட்டது. கூகிளின் சில முக்கிய பொறியியலாளர்களை அது ‘வாங்கிக்’ கொண்டது. இதே வேளை மைக்கிரோசொஃப்ட் நிறுவனமும் செ.வி. உருவாக்க முயற்சிகளில் இரகசியமாக ஈடுபட்டு வந்தது. பணம் பண்ணும் முயற்சிகளுக்காக அது தனது இரகசியத்தை வெளியிடவில்லை.
கூகிளில் இருந்து உருவிய பொறியியலாளர்களின் உதவியுடன் அமெரிக்க பாதுகாப்பு அங்கம், மைக்கிரோசொஃப்ட் மற்றும் OpenAI போன்ற நிறுவனங்கள் இணைந்து தற்போதைய ChatGPT என்னும் செ.வி. யை வெளியிட்டிருக்கிறார்கள். இதை இலவசமாக மக்கள் பாவனைக்குத் திறந்துவிட்டிருக்கிறதெனப் பலரும் புல்லரிக்கிறார்கள். ரெஸ்லா நிறுவனம் பொறுக்கப்பட்ட சில வாகன உரிமையாளர்களுக்கு இலவச வாகனம் மற்றும் சலுகைகளைச் செய்வதன் மூலம் எப்படித் தனது வாகனங்களைப் பற்றிப் பிரலாபம் செய்து தன் மீதான களங்கங்களையும் குறைபாடுகளையும் வென்று வருகிறதோ அதே போல இலவச ChatGPT இப்போது பேற்றா ரெஸ்ட் (Beta test) என்னும் வகையில் பரீட்சார்த்த வலம் வருகிறது. அவ்வளவுதான். குறைகள் களையப்பட்டவுடன் அது பணம் கறக்கும் இயந்திரமாகிவிடும்.
சில வருடங்களுக்கு முன்னர் ‘கூகிள் ஏர்த்’ என்றொரு மென்பொருளை கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரு தீப்பெட்டியின் லேபலை வாசிக்குமளவுக்குத் துல்லியமானது இச் சேவை. ஆனால் ‘பிரத்தியேகம்’ கருதி பொதுமக்களுக்கென விநியோகிக்கப்பட்ட (civilian use) மென்பொருள் அவ்வளவு துல்லியமாக இருக்கவில்லை. இரணுவத் தேவைகளுக்கென மெருகூட்டப்பட்ட இன்னுமொரு அம்சம் அமெரிக்கர்களை மட்டுமல்ல உலகின் அனைத்துக் குடிமக்களையும் வேவுபார்க்க பாவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட ChatGPT யிலும் இப்படியான இரண்டு வடிவங்கள் இருக்கமாட்டாது எனக்கூற முடியாது. கூகிள் தன்னுடைய அறத்தைப் பேண முயற்சித்ததால் மைக்கிரோசொஃப்ட் முந்திக்கொண்டுவிட்டது என்கிறார்கள். உண்மை தெரியாது.
சமூகத்திற்கு அனுகூலமானதா?
நன்மைகள்:
மனித வாழ்வை இலகுவாக்கும், பிணிகளைப் போக்கும்; போக்குவரத்தில் ஏற்படும் தடங்கல்களை முற்கூட்டியே அறிந்து மாற்றுப் பாதைகளைப் பரிந்துரைக்கும்; வாகனத் தரிப்பிடத்தில் உங்கள் வாகனங்களை இலகுவாகக் கண்டுபிடிக்க உதவி செய்யும்; உங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தித் தரும்; வீட்டில் குழந்தைகள் அழும்போது அமசோன் எக்கோ போன்ற ‘பணியாளர்கள்’ அவற்றின் பொழுதுபோக்காக இருப்பார்கள்; மாற்றுத் திறனாளிகளுக்கு பல அனுகூலங்களைத் தரும்; மாணவர்களுக்கும் முதியவர்களுக்கும் கட்டுரைகளையும் கேள்விகளுக்குப் பதில்களையும் எழுதித்தரும்; பரீட்சைகளை எழுதும்; வீடுகளைப் பராமரிக்க உதவும்; வேலைத்தலங்களில் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும்; கோவிட் போன்ற பெருந்தொற்றுக்காரரை அடையாளம் கண்டு எச்சரிக்கும்; பணியாளர்களின் கணனிகளுக்குள் புகுந்து அவர்கள் பாலியல் தளஙகளிலோ அல்லது பயங்கரவாத அமைப்புகளுடனோ உறவாடுகிறார்களா என்பதைக் காட்டிக் கொடுத்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் என்று பல…
தீமைகள்
பெருந்தொகையான பேரது வேலைகளைப் பறிக்கும்; ரோபோக்களை வேலைக்கு அமர்த்துவதால் ‘தொழிலாளர் வேலை நிறுத்தம்’ இருக்கமாட்டாது; சாப்பாடு தேனீர் அன்று இடைவேளைகள் தரப்படத் தேவையில்லை; சுகவீனம் என்று வீட்டில் நிற்கத் தேவையில்லை; வேலைகள் பறிக்கப்பட்டு கணவனும் மனைவியும் வீட்டில் நிற்கும்போது குழந்தைகளின் கூச்சலினால் சண்டை வந்து கொலைகளில் முடியலாம்; 2019 இல் பல கடைகளில் தானியங்கி (Self Checkouts) காஷியர்கள் வந்தது முதல் 11,000 வேலைகள் பறிக்கப்பட்டன. இனிமேல் கடைகளில் மனிதரையே காண்பது அரிதாகிவிடும்; முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஏற்கெனவே நடைமுறையிலுள்ளது. செ.வி. இதை மேலும் செழுமைப்படுத்தும். இதனால் நிற ரீதியாக சில இனக்குழுமங்கள் பாதிக்கப்படும்; பல இனக்குழுமங்களின் நடமாட்டம் வெகுவாகக் கண்காணிக்கப்படும்; வீடுகளில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கருவிகள் சேகரிக்கும் தகவல்களை பொலிசார் உடனேயே பெறும் வகையில் செ.வி. உதவிசெய்யும்; இதனால் தனி மனித பிரத்தியேகம் இழக்கப்படும்; குழந்தகளைக் கடத்தாமலேயே பணம் பறிக்கும் உத்திகளை செ.வி. ஏற்கெனவே தந்துவிட்டது.; எவரது குரல்களையும் அச்சொட்டாகப் பிரதிசெய்யும் திறமை செ.வி. த்துக்கு இருக்கிறது எனத் தீமைகள் பல. ஆனால் மனித அவிவேகம் இனிமேல்தான் அவற்றைக் கண்டுபிடித்து ‘அய்யோ’ என்று தலையில் கைகளை வைக்கும்.
இவை எல்லாவற்றையும்விட செ.வி. முதலில் அழிக்கப்போவது சமூக ஊடகங்களை. ஏற்கெனவே பல சமூக ஊடகங்களில் நம்பமுடியாத அளவுக்கு உருமாற்றம் செய்யப்பட்ட காணொளிகளும் படங்களும் வந்து குழப்ப ஆரம்பித்துவிட்டன. இதனால் எந்தவொரு சமூக ஊடகத்தையும் மக்கள் நம்புவதற்கு மறுக்கும் காலம் விரைவில் உருவாகும் (பத்திரிகை சாதனங்களுக்கு இது பெரு மகிழ்ச்சியைத் தரலாம்). இன்னுமொரு 5 வருடங்களில் பல சமூக ஊடகங்கள் காணாமற் போய்விடலாம்.
முடிவாக நமது புராணங்களில் கூறியது போல செ.வி. மனித குலத்தின் அழிவிற்குக் காரணமாக அமைவதற்கான சாத்தியங்களே அதிகம். இதனால் தான் செ.வி. கத்தை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்துங்கள் என ரெஸ்லா அதிபர் இலான் மஸ்க் கேட்டிருக்கிறார். மனித மூளையையே இயந்திரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஆராய்ச்சியில் இறங்கியவரிடமிருந்து இப்படியொரு அபாய எச்சரிக்கை வருவது கவனிக்கப்பட வேண்டியது.
கலி காலம். கெடு குடி சொற்கேளாது.
(Photo by Andrea De Santis on Unsplash)