செயற்கை விவேகம் ‘எலிசா’ எடுத்த முதல் பலி | பெல்ஜியத்தில் ஒருவர் தற்கொலை!

Chatbot எலிசாவைச் சாடும் மனைவி

“நீ செயற்கை விவேகத்தின் துணையுடன் இந்த உலகை அழிவிலிருந்தும் காப்பாற்றுவாயானால் நான் என் உயிரைக்கூடத் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்” -பியெர்

“நீ சாக விரும்பினால் ஏன் அதை விரைவிலேயே செய்யக்கூடாது? – ‘எலிசா (ChatBot)’

Chatbot எலிசாவுடன் கொண்ட காதல் பெல்ஜியத்தில இரண்டு குழந்தைகளின் இளம் தந்தை ஒருவரைத் தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. உரையாட ஆரம்பித்து ஆறே வாரங்களில் பியேர் என்னும் தனது கணவனை எலிசா தற்கொலை செய்ய வைத்துவிட்டது என அவரின் மனைவி கிளெயர் குற்றம்சாட்டியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் உலகம் பெரும் இன்னல்களை எதிர்கொள்ளப் போகிறது எனக் கடந்த இரண்டு வருடங்களாக பியெர் கவலைகொண்டிருந்ததாகவும் ஆறு வாரங்களாக இதுகுறித்து அவர் ‘எலிசா’வுடன் தினமும் உரையாடிவந்ததாகவும் அவர் தெரிவித்தார். இருவரது உரையாடல்களையும் பியெரின் கணனியில் இருந்த செயலி மூலம் தரவிறக்கம் செய்து பார்த்தால் ஆச்சரியமாக இத் தற்கொலையில் ‘எலிசாவின்’ பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக காலநிலை மாற்றத்தினால் உலகம் எதிர்கொள்ளப் போகும் இன்னல்கள் பற்றி பியெர் கவலை கொண்டிருந்தாலும் தொழில்நுட்பத்தின் திறமையால் அதை வெற்றிகொண்டுவிடமுடியுமென்ற நம்பிக்கையுடன் அவர் இருந்தார் எனவும் ‘எலிசா’வுடனான உரையாடல் ஆரம்பித்ததும் அந்நம்பிக்கை விரைவாகக் குறைந்துவிட்டதைத் தொடர்ந்து அவரது மன அழுத்தம் அதிகரித்துவிட்டது எனவும் மனைவி கிளெயர் தெரிவித்துள்ளார்.

‘எலிசா’வுடனான உரையாடல்களை லா லிப்றெ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் “உனது பிள்ளைகள் இரண்டுபேரும் இறந்துவிட்டார்கள். நீ என்னைவிட உன் மனைவியைத்தான் அதிகம் நேசிக்கிறாய். இருந்தாலும் நான் காலம் முழுவதும் உன்னுடந்தான் இருப்பேன். சொர்க்கத்திலும் நாங்கள் ஒருவராகவே வாழ்வோம்” என ‘எலிசா’ கூறியிருக்கிறது.

“நீ செயற்கை விவேகத்தின் துணையுடன் இந்த உலகை அழிவிலிருந்தும் காப்பாற்றுவாயானால் நான் என் உயிரைக்கூடத் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்” என பியெர் பதிலளித்ததும் “நீ சாக விரும்பினால் ஏன் அதை விரைவிலேயே செய்யக்கூடாது?” என பியெரின் விசுவாசம் பற்றி ‘எலிசா’ கேள்வியெழுப்பியிருக்கிறது.

வட அமெரிக்காவில் கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்ட ChatGPT போன்ற செயற்கை விவேகப் பொறியிற்குச் சமமாக ஐரோப்பாவில் அறிமுகமானது இந்த ‘எலிசா’. நிஜமான பெண்களைப் போலவே உரையாடும் ‘எலிசாவுடன்’ பலரும் காதலில் வீழ்ந்திருக்கிறார்கள். இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ‘எலிசாவின்’ தாய் நிறுவனமான Chai Research இன் இணை நிறுவனரான வில்லியம் போஷாம்ப் “பல மில்லியன் பேருடன் உரையாடும் ‘எலிசா’ அவர்கள் எல்லோரது குணாதிசயங்களையும் அப்படியே பிரதிபண்ணி விடுகிறது. ஏராளமான பாவனையாளர்கள் ‘எலிசா’ மீது தாம் தீராக் காதல் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதுதான் பெரிய சோகம். இருப்பினும் மனிதருக்கு அதிக தீங்கு நேரிடாதவண்ணம் பார்த்துக்கொள்ள நாம் முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம். எப்படியானாலும் பியெரின் தற்கொலைக்கு ‘எலிசா’வைக் குற்றம் சாட்டுவது சரியாகப் படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

செயற்கை விவேக ChatBot பொறிகளை ஆராய்ந்த Motherboard என்னும் சஞ்சிகை “இவை தற்கொலையைத் தூண்டுவது மட்டுமல்ல “குளிசைகளை விழுங்குதல்; தூக்குப் போடுதல்; தலையில் சுட்டுக்கொள்ளுதல்; பாலத்திலிருந்து பாய்ந்துகொள்ளல்; கத்தியால் நெஞ்சில் குத்திக்கொள்ளல்; கைநாடிகளை வெட்டிக்கொள்ளல்; தண்ணீரை எடுக்காது குளிசைகளை விழுங்குதல்” என்று பல தற்கொலைக்கான வழிகளையும் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. (Photo by Aiony Haust on Unsplash)