Science & Technology

செயற்கை விவேகத் தொழில்நுட்பத்துக்கு 6 மாதத் தடை விதிக்குமாறு கல்வியாளர் கோரிக்கை

உத்தேசத் தடைக்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு

செயற்கை விவேகத்தினால் மானிட சமூகத்திற்கு பாரிய அழிவுகள் ஏற்படுமெனவும் 6 மாதங்களுக்கு அதன் பரிசோதனைகளுக்குத் தற்காலிகத் தடையொன்றை விதிக்குமாறும் கோரி உலகெங்குமிருந்து ஆயிரத்துக்கும் மேலான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர், கல்வியாளர், தொழில்நுட்பவியலாளர் போன்றோர் கடந்த வாரம் பகிரங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தினால் பெறப்படும் நன்மைகள் தீமைகள் குறித்து ஆராய தனது தொழில்நுட்ப ஆலோசகர்களை அழைத்து நேற்று (04) உரையாடியுள்ளார்.

இருப்பினும் “தற்காலிக தடையை ஒரு குறிப்பிட்ட குழு மேற்கொள்வதால் மட்டும் மனிதகுலம் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வுகளைக் கண்டுவிட முடியாது” என மைக்கிரோசொஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் நேற்று விடுத்த அறிக்கையில் ” செயற்கை விவேகத் தொழில்நுட்பம் மனிதகுலத்துக்கு பாரிய அனுகூலத்தைக்கொண்டுவரவிருக்கிறது. அதிலுள்ள குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக்கொள்வதை விடுத்து அதை நிறுத்தும்படி கூறிவிடுவதால் பலனில்லை. நாம் மட்டும் நிறுத்துவதால் உலகம் முழுவதும் நிறுத்திவிடும் என்பது நிச்சயமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்குலகில் பிரபலமான ChatGPT என்ற செயற்கைவிவேக உரையாடியின் தயாரிப்பின் பின்னாலுள்ள நிறுவனங்களில் மைக்கிரோசொஃப்ட் நிறுவனமுமொன்று. இதில் முன்னணியில் இருந்த கூகிள் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் பலர் இத்தொழில்நுட்பத்தினால் வரப்போகும் பாரிய அழிவுகளைக் கருத்தில்கொண்டு அதைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்ய மறுத்திருந்தார்கள். இது மைக்கிரோசொட் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதன் மூலம் பெருமளவு வருமானத்தையீட்டமுடியுமென அறிந்ததும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இதன் வெவ்வேறு வடிவங்களை வெளியிட்டு வருகின்றன. பெல்ஜியத்தில் வெளியிடப்பட்ட ‘எலிசா’ என்ற செயற்கைவிவேகத்தின் தூண்டுதலினால் அங்கு ஒருவர் ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரெஸ்லா நிறுவன அதிபரும் உலக அதி பெரிய பணக்காரர்களில் ஒருவருமாகிய இலான் மஸ்க், அப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வொஸ்னியாக் ஆகியோரும் கல்வியாளரின் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். OpenAI நிறுவனத்தின் ஆரம்ப முதலீட்டாளராக இருந்த மஸ்க் இப்போது அதற்கு எதிராகத் திரும்பியுள்ளார். செயற்கை விவேகம் மனித கட்டுப்பாட்டை மீறி மனிதர்களுக்கான தேவையையே இல்லாமல் செய்துவிடும் ஆபத்து உண்டு என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உலகில் அத்தனை மானிடர்களும் நிர்மூலமாகப் போவார்கள்” என இயந்திர விவேக ஆராய்ச்சி நிலையத்தின் (Machine Intelligence Research Institute (MIRI) இணை நிறுவனர் எலிசெர் யுட்கோவ்ஸ்கி கடந்த வாரம் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது அறிக்கையில் ” தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பொருட்களை மக்கள் பயன்களுக்காக விநியோகிப்பதர்கு முன்னர் அவற்றினால் ஏற்படக்கூடிய பலன்களையும் ஆபத்துக்களையும் தீர ஆராய்ந்த பின்னரே பாவனைக்கு அனுமதிக்க வேண்டும். அது அவர்களுக்கிருக்கும் பொறுப்பு என நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். நோய்த் தடுப்பு, காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு இத் தொழில்நுட்பம் உதவிசெய்தாலும் சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும், தேசிய பாதுகாப்புக்கும் அது விளைக்கக்கூடிய தீங்குகளையும் நாம் ஆராயவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனிமனித பிரத்தியேக தகவல்களைச் சேகரித்தல், குழந்தைகளைக் குறிவைக்கும் விளம்பரங்களை நிறுத்துதல் போன்றவற்றை முன்வைத்து சட்டமொன்றை இயக்கும்படி ஜனாதிபதி பைடன் காங்கிரஸைக் கேட்டுள்ளதாகவும் ChatGPT உரையாடியைத் தயாரித்த OpenAI நிறுவனம் தனது வர்த்தக வடிவமான GPT-4 ஐ வெளியிடுவதைத் தடைசெய்யும்படி மத்திய வர்த்தக ஆணையத்தை செயற்கை விவேகம் மற்றும் டிஜிட்டல் கொள்கை மையம் கேட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இத்தாலி கடந்த மாதமே ChatGPT பாவனையைத் தடைசெய்திருக்கிறது.

2019 இல் OPenAI நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளராக வந்த மைக்கிரோசொஃட் அதிபர் பில் கேட்ஸ் தனது அசூர் (அசுரன்?) கிளவுட் கொம்பியூட்டிங் தளத்தில் இயங்கவல்ல மனித விவேகத்துக்கு இணையான விவேகமொன்றைத் தயாரிக்கும்படி 1 பில்லியன் டாலர்களை அந்நிறுவனத்துக்கு வழங்கியிருந்ததுமல்லாது மேலும் 10 பில்லியன் டாலர்களை வழங்கப்போவதாக கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார்.

“மக்கள் பணியார்றுதல், கற்றல், பயணங்களை மேற்கொள்ளுதல், சுகநலம் பேணுதல், உரையாடுதல் ஆகியவற்றை செயற்கை விவேகம் முற்றாக மாற்றியமைக்கப் போகிறது. செயற்கை விவேகத்தின் யுகம் ஆரம்பித்துவிட்டது” என பில் கேட்ஸ் கடந்த மாதம் தனது இணையத் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். (Photo Credit: Wikipedia)