Science & Technology

செயற்கை விவேகத்தின் சதுரங்கம்: ஆட்டம் காணும் கூகிள்?

மைக்கிரோசொஃட்டின் புதிய வியூகம்

சிவதாசன்

பாவனையாளரைத் தமது மாய வலைகளுக்குள் வீழ்த்தி அவர்களிடமிருந்து தேவையானதை உருவி எடுத்து விற்றுப்பிழைக்கும் தொழிலையே கூகிள், மைக்கிரோசொஃட் போன்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன எனபது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் இவ்வியாபாரமும் ஒருவகை விபசாரமே. இவ்வியாபாரத்தின் ‘மாமா’க்களான கூகிளுக்கும் மைக்கிரோசொஃட்டுக்குமிடையில் நிலவிவந்த நீண்டகாலப் போட்டி செயற்கை விவேகம் வயதுக்கு வந்தவுடன் மேலும் முற்றிக்கொண்டது. செயற்கை விவேகம் பருவத்துக்கு வந்ததும் அதன் பிரதான மாமாவான மைக்கிரோசொஃட் தனது வியாபாரத்தை கூகிளின் வலயத்துக்குள் நகர்த்த முற்பட்டு வெற்றியும் கண்டுவருகிறது என்பதே இப்போதைய செய்தி.

மைக்கிரோசொஃட் தொழிலுக்குப் பழசு என்றாலும் பாவனையாளர்களைத் தன்வசம் இழுப்பதில் பின்னர் வந்த கூகிள் பயங்கர வெற்றியைத் தேடிக்கொண்டது உண்மை. தற்போது 80% வீதமான வாடிக்கையாளர்கள் கூகிளின் சேவைகளையே நாடுகிறார்கள். மீதி 20% மானவர்கள் மைக்கிரோசொஃட்டின் Bing மற்றும் Yahoo போன்ற தேடல் சேவைகளைப் பாவிக்கிறார்கள். ஆனால் செய்றகை விவேகத்தின் வருகையும் ChatGPT போன்ற உரையாடிகளின் கவர்ச்சியான சேவைகளும் பல வாடிக்கையாளர்களைத் தம்பக்கம் இழுக்கத் தொடங்கிவிட்டன. செஅர்கை விவேகத் தொழில்நுட்பப் போட்டியில் முன்னே புறப்பட்டு இடையில் குட்டித் தூக்கம் போட்ட கூகிள் முயலை மைக்கிரோசொஃட் ஆமை முந்திக்கொண்டுவிட்டது. இதனால் கூகிள் இப்போது தலையில் கைகளை வைத்துக்கொண்டு நிற்கிறது.

வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் கூகிளுக்கு தற்போது சாம்சுங் இன்னுமொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சாம்சுங் இதுவரை தனது ஸ்மார்ட் ஃபோன்களில் தேடுதலைச் செய்யும் செயலியாக கூகிளையே பாவித்துக்கொண்டு வருகிறது. சாம்சுங் இனிமேல் தனது ஃபோன்களில் கூகிளுக்குப் பதிலாக Bing கை மாற்றீடு செய்வதற்குத் திட்டமிட்டுவருவதாக இப்போது செய்திகள் கிடைத்துள்ளன. இதனால் கூகிளின் பங்குச் சந்தை விலை நேற்று 4% திடீர் சரிவைக் கண்டிருக்கிறது.

வியாபாரத்தில் போட்டிகள் சகஜம். கூகிளுக்கு இதற்கு முன்னர் வந்த பலவித சவால்களை அது வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. செயற்கை விவேகத்தில் முன்னோடியாக இருந்த கூகிள் மனிதகுலத்துக்கு அதனால் வரக்கூடிய ஆபத்துக்களை முன்னிட்டுத் தனது கதியைக் கொஞ்சம் தாமதித்தது எனவும் கூறப்பட்டது. அதில் பணிபுரிந்த பல பொறியியலாளர்கள் கூட்டாக எடுத்த இத் தீர்மானத்துக்கு கூகிளின் முதன்மை நிர்வாகியான சுந்தர் பிச்சையும் இணங்கிப் போனதாகவும் இதிலிருந்து அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கும் கூகிளுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலின் விளைவே சந்தர்ப்பவாதியான எதிரி மைக்கிரோசொஃப்ட்டின் உள்நுழைவு எனவும் கூறப்படுகிறது. இதனால் இப்போது இரண்டு எதிரிகளிடையேயும் பலத்த போட்டி நிகழ்கிறது எனவும் தோறுப்போன கூகிள் தனது செயற்கை விவேக ஆராய்ச்சிகளை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

சாம்சுங்கின் ஆண்ட்றோயிட் இயங்கு தளத்திலும், அப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் இதுவரை கூகிளே முதன்மை தேடல் செயலியாக இருக்கின்றது. இப்பாவனைக்கான ஒப்பந்தங்களை கூகிளின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் ஏற்கெனவே செய்து வைத்திருந்தாலும் அவ்வப்போது அவை புதுப்பிக்கப்பட வேண்டும். இது குறித்து அல்ஃபபெட் தற்போது சாம்சுங்குடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. சிலவேளை அது வெற்றியும் பெறலாம். ஆனால் அமெரிக்க உளவைப் பகைத்துக்கொண்டு அதனால் நீண்டதூரம் பயணிக்க முடியாது. கூகிளிடம் மிதமிஞ்சிய அளவுக்குத் தரவுகள் இருப்பதும் அதுவே வாடிக்கையாளர்களின் முன்னணித் தேர்வாக இருப்பதும் சாதகமாக இருந்தாலும் செயற்கை விவேகத் துறையில் அது துரிதமாகவும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அனுகூலத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதாகப் பரிணமிக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. விரைவில் அதிசயமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் கூகிள் அதை அறிவிக்கலாம்.

செயற்கை விவேகத்தின் பாவனையில் சேகரித்த தரவுகளைக் கொண்டு ஒரு மனித உருவத்தைச் சிருஷ்டிக்க முடியும் என்பதுவே உளவு நிறுவனங்களுக்கு அதன் மீது தீராக் காதலை ஏற்படுத்தியது. பொதுவிடங்களில் பாவிக்கப்படும் கண்காணிப்புக் கருவிகளிடமிருந்து தரவுகளைச் சேகரித்து அவற்றை இதர தரவுகளுடன் பொருத்தி ஒருவரை உடனடியாக இனம்காணும் திறமையை செயற்கை விவேகம் தருகிறது. இது உளவுக்காரர்களுக்குக் கிடைத்த அற்புதமானதொரு ஆயுதம். சில தசாப்தங்களுக்கு முன்னர் கூகிள் உருவாக்கிய ‘கூகிள் ஏர்த்’ என்னும் செயலியின் இராணுவ வடிவம் (சாதாரண பாவனையாளர்களின் செயலிக்கு துல்லியம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டிருக்கிறது) வானிலிருந்து தீப்பெட்டியொன்றின் லேபலை வாசிக்கும் திறமை கொண்டது. இதை வைத்துக்கொண்டுதான் அமெரிக்க உளவு தனது ட்றோண்கள் மூலம் உலகெங்கும் தனது எதிரிகளைத் தேடியழித்து வருகிறது. செயற்கை விவேகம் இத் திறமையை அடுத்த தளத்துக்கு உயர்த்தியிருக்கிறது. சிலிக்கன் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பல மூளைசாலிகளுக்கு இது நன்றாகப் புரிந்ததொரு விடயம். இதனால் தான் மனச்சாட்சியுள்ள பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஸ்நோடன் போன்றோர் மேலும் ஒருபடி சென்று தமது வாழ்வையே பாழாக்கியிருக்கிறார்கள். வியாபாரம் நிலைக்கவேண்டுமென்றால் கூகிள் விரைவில் உளவுகளுடன் சமரசம் செய்தேயாக வேண்டும்.

மைக்கிரோசொஃப்ட்டின் ஸ்தாபகரான பில்ல் கேட்ஸின் நடவடிக்கைகளில் ஒரு தர்மம், நியாயம் இருக்கிறது என ஒருகாலத்தில் பலருக்கும் நம்பிக்கை இருந்தது. உலகின் பல மூலை முடுக்குகளில் எல்லாம் அவரது தர்மப் பணிகள் இடம்பெற்ரு வருகின்றன. ஆனாலும் கோவிட் தடுப்பு மருந்து உற்பத்தி, பாவனை விடயத்தில் அவரது பங்கு கேள்விக்குட்படுத்தப்பட்டது. ChatGPT உரையாடி விடயத்தில் அவரது நடவடிக்கைகள் அவரது நோக்கத்தின்மீது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை மனித குலம் உருவாக்கிய சாதனங்களில் உலகைத் தடம் புரட்டக்கூடிய திறமை செயற்கை விவேகத்துக்கு உண்டு எனப் பல மூளைசாலிகள் எச்சரித்து வருகிறார்கள். ஆனாலும் அதை வைத்துப் பணம் பண்ணவெனப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். அதைக்கூட விட்டுவிடலாம். ஆனால் “இது மனிதகுலத்தின் மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது” என்ற போதனையுடன் பணம்பன்ணப் புறப்பட்டவர்களை என்ன செய்வது?.

விருப்பமோ விருப்பமில்லையோ எங்கள் குழந்தைகளின் கைகளில் திணிக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களில் எங்களின் குடும்ப வரலாறுகளுமே பதியப்பட்டிருக்கும். இலவச சேவைகளைத் தருகிறோமென முன்வரும் ஒரு சில நிறுவனங்கள் தமது செயலிகளின் மூலம் உங்கள் வரலாறுகளை உருவிச் சேமிக்கின்றன என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது. டைனோசோர்கள் ஒருகாலத்தில் உலகை வலம் வந்தன என்று மனிதர் கூறியது போல மனிதரைப்பற்றியும் இனிவரும் ‘அதுகள்’ கூரலாம். யார் கண்டது? (Photo by Andrea De Santis on Unsplash)