Spread the love

நீதின்ற உத்தரவை மீறி காலம் சென்ற புத்த பிக்குவின் உடலை மறுக்கப்பட்ட இடத்தில் தகனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் அவர்கள் நேற்றுப் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் வேண்டுகோளொன்றை முன்வைத்தார். இது தொடர்பாக திரு சம்பந்தன் அவர்கள் பார்ரளுமன்றத்தில் ஆற்றிய உரை கீழே தரப்பட்டுள்ளது.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம் | நடவடிக்கை எடுக்குமாறு இரா.  சம்பந்தன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் 1
இந்துக் கோவில் வளாகத்தில் புத்த பிக்குவின் உடல் தகனம்

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் 2019 ஒக்டோபர் 8 ஆம் திகதி நான் பின்வரும் அவசர பொது முக்கியத்துவமிக்க பிரச்சினையை எழுப்ப விரும்புகிறேன்:

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை என்று அழைக்கப்படும் ஓர் இடத்தில் நீராவியடி பிள்ளையார் கோவில் எனும் புராதன இந்துக் கோவிலொன்று உண்டு. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கிடையில் அப்பகுதிக்குச் செல்வதற்குக் குடிமக்கள் எவரும் அனுமதிக்கப்படாதபோது, அக் கோவில் வளாகத்தினுள் குருகந்த ரஜமகா விகாரை என்று அழைக்கப்படும் ஒரு பௌத்த விகாரை பலவந்தமாக நிர்மாணிக்கப்பட்டதோடு, மிக அண்மைக்காலத்தில் அவ்விகாரையைப் புனரமைக்க முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.

இது அந்தப் பகுதியில் வாழும் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் அக்காலகட்டத்திற்குள் அங்கு குடியிருக்கத்தொடங்கிய பௌத்த பிக்குகளுக்குமிடையே அமைதியின்மைக்கு இட்டுச் சென்றது.

இவ்விடயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கற்றறிந்த நீதவானுக்கு அறிவிக்கப்பட்டதன்பேரில், அவ்விகாரையின் மீள்நிர்மாணத்தை தடைசெய்து உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டது. அவ்விகாரையின் தலைமைப் பிக்கு வவுனியாவிலுள்ள வடமாகாண மேல் நீதிமன்றத்தில் அவ்வுத்தரவை மீள் பரிசீலிக்குமாறு கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அந்த விடயம் இன்னும் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, 2019 செப்டெம்பர் 21 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் குருகந்த ரஜமகா விகாரையின் தலைமைக் குரு நோய்வாய்ப்பட்டு கொழும்பில் காலமானார். முல்லைத்தீவு பொலிசார் ஏனைய விடயங்களோடு,

(அ) குருகந்த ரஜமகா விகாரையின் தலைமைக் குரு (அப்போது) காலமாகியிருந்தாரென நீராவியடி பிள்ளையார் கோவில் நிர்வாக சபையினால் பொலிஸ் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்ததெனவும்,

(ஆ) (இந்துக் கோவிலும் பௌத்த விகாரையும் அமைந்துள்ள வளாகமாகையால்) சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ள அவ்வளாகத்தினுள் சொல்லப்பட்ட தலைமைக் குருவின் உடல் கொண்டுவரப்படுமாயின், அது அப்பகுதியில் அமைதி சீர்குலைவதற்கு வழிவகுக்குமெனவும் கூறி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தகவலொன்றைப் பதிவு செய்திருந்தனர்.

அதன்பேரில் கற்றறிந்த நீதவான் 2019 செப்டெம்பர் 21 ஆம் திகதி
(அ) மேற்குறிப்பிடப்பட்ட முறைப்பாட்டாளர்களையும் மேற்குறிப்பிடப்பட்ட பௌத்த விகாரையின் தற்போதைய தலைமைக் குருவையும்; 2019 செப்டெம்பர் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமுகமளித்திருக்குமாறும்; அத்துடன்
(ஆ); இவ்விடயத்தில் உரிய இறுதிக் கட்டளையொன்று வழங்கப்படும்வரை மேற்குறிப்பிடப்பட்ட காலஞ்சென்ற தலைமைக் குருவின் உடல் சர்ச்சைக்குரிய சொல்லப்பட்ட வளாகத்தில் தகனம் செய்யப்படஃபுதைக்கப்படக் கூடாது என்றும் கட்டளையொன்றைப் பிறப்பித்தார்.

Related:  யஸ்மின் சூக்கா, ITJP க்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மானநட்ட வழக்கு!

2019 செப்டெம்பர் 23 ஆம் திகதி இவ்விடயம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் சார்பில் தோன்றிய சட்டத்தரணி தகனச்சாலைகள் மற்றும் மயானக் கட்டளைச் சட்டத்திற்கமைய தேவையான அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலே சொல்லப்பட்ட உடலை தகனம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று குறிப்பிட்டார்.

பௌத்த விகாரையின் சார்பில் தோன்றிய சட்டத்தரணி மாற்று இடமொன்றில் உடலைத் தகனம் செய்வதற்கு தாங்கள் விரும்புவதாகக் கூறினார். மேற்கூறப்பட்ட இந்துக்கோவிலின் நிர்வாக சபை அதற்கு உடன்பட்டது.

அதற்கமைய, சொல்லப்பட்ட உடலின் தகனம் சர்ச்சைக்குரிய வளாகத்தில் செய்யப்படாலாகாது என்றும் அதற்குப் பதிலாக மாற்று இடமொன்றில் செய்யப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் இணக்கப்பாட்டுக் கட்டளையைப் பிறப்பித்தது.

இக்கட்டளை பிறப்பிக்கப்பட்ட பின்னர், வண. கங்கொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று காலஞ்சென்ற தலைமைக் குருவின் உடலை நீதவானின் உத்தரவு எந்த இடத்தில் தகனம் செய்யக்கூடாதென்று அவர்களுக்கு தடை விதித்ததோ, அதே இடத்திற்கு கொண்டு சென்று, அப்பகுதியில் திரண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தகனஞ் செய்யத் தொடங்கியது.

அதன் விளைவாக ஒரு குழப்பநிலை தோன்றியது. அப்போது மேற்கூறப்பட்ட இந்துக் கோவிலின் தலைமைக் குரு கடுமையாகக் காயமுற்றார். இந்துக் கோவிலின் நிர்வாக சபை சார்பில் தோன்றிய ஒரு சட்டத்தரணியும் தாக்கப்பட்டார்.

இச்சம்பவம் முழுவதும் பொலிசார் எஸ்எஸ்பி தலைமையில் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவர்கள் நீதி மன்றத்தின் சொல்லப்பட்ட கட்டளையை பிக்குகளும் ஏனையவர்களும் மீறுவதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யவில்லை. சம்பவத்தின்போது அங்கு திரண்டிருந்த இந்து சமூக உறுப்பினர்களையே சர்ச்சைககுரிய அவ்விடத்திற்குள் பிரவேசிக்கவிடாது தடுத்தனர்.

CA (CC)  மனு 04/2016 ஆம் இலக்கம் கொண்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பிற்காக 6ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சங். கலகொட அத்தே ஞானசார தேரர்…. அவர் சனாதிபதியினால் 2019 மே மாதம் 23 ஆம் திகதி மன்னிப்பளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக அவர் ஹோமாகமை நீதவானினால் 11309 ஆம் இலக்க வழக்கில் 2018 மே 24 ஆம் திகதியிடப்பட்ட தீர்ப்பில் ஏனையவற்றோடு;, காணாமற்போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான முறைப்பாட்டாளரை திறந்த நீதிமன்றில் அச்சுறுத்தியமைக்காக குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார். அவர் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்: வழக்கு இலக்கம் மேன் முறையீடு 28/2018.

சொல்லப்பட்ட மேன்முறையீட்டு விசாரணை துரிதமாக நடத்தப்பட்டு அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் முறைப்பாட்டாளர் தற்போது நிலுவையிலுள்ள SC/SPL/LA/89/19 ஆம் இலக்க வழக்கு மூலம் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

நீதின்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகிறேன். இது நீதிமன்ற உத்தரவை நிலைநாட்டுவதற்குத் தவறியது மாத்திரமின்றி, அது மீறப்படும்போது அதற்கு வசதியேற்படுத்திய பொலிசாரையும் உள்ளடக்கவேண்டும்.

Related:  துயரம்: 'உலகத்தின் ஒளி விளக்கு' தமிழ் மருத்துவர் பரராஜசிங்கம் மறைவு

ஒப்பம்
ஆர். சம்பந்தன், பா.உ ( திருகோணமலை)
இலங்கைத் தமிழசரசுக் கட்சி (ததேகூ) பாராளுமன்றக் குழுத் தலைவர்

Print Friendly, PDF & Email