ColumnsJekhan Aruliah

செபீரோ (Xebiro): யாழ்ப்பாணத்தில் உருவாகும் ஐரோப்பிய தொழில்நுட்பம்

வளரும் வடக்கு – 7

ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

ஆரோக்கியம், பொருளாதாரம் எனப் பலவழிகலாலும் உலகிற்கு மிக மோசமான பாதிப்புகளைத் தந்துகொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று, கற்றலிலும், பணிகளிலும்கூட பல புரட்சிகரமான மாற்றங்களைத் திணித்து வருகிறது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் நேரடிக் கல்வியிலிருந்து தொலைக் கல்வியைத் (distance learning) தரும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக வளாகங்களில் கவனமற்ற போதிப்பு, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் சோர்வுற்ற இளையோர் இப்போது தமது வீடுகளில் படுக்கையறைகளை வகுப்பறைகளாக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருக்கும் கிராமத்துப் பிள்ளைகளும் ஆசிரியர்களும் இணையத் தொடர்புகளைப் பெற மரங்களில் ஏறவேண்டிய நிலை. அலுவலகப் பணியாளர்கள் தமது பணிகளைத் தமது சொந்த வீடுகளிலிருந்தே ஆற்றுவதற்குத் தள்ளப்படுகிறார்கள். தொலைதூரக் கல்விக்கும், பணிக்கும் இசைவாகும் வகையில் தொழில்நுட்பமும் தன்னன் மாற்றிக்கொண்டு வருகிறது. 2013 இல் எந்தவித அமர்க்களமுமில்லாமல் சந்தைக்கு வந்த ‘சூம்’ (ZOOM), கோவிட் பெருந்தொற்று முடக்கத்துடன் உள்வீட்டுப் பிள்ளையாகிவிட்டது. 2019 இல் அதன் காலாண்டு வருமானமானம் US$ 200m. 2021 இல் அதன் காலாண்டு வருமானம் US$ 1b; இரண்டே வருடங்களில் அதன் வளர்ச்சி ஐந்து மடங்கு!

சசீவன் கணேசநாதன் – தலைவர், செபீரோ

கோவிட்-19 முடக்கங்களும் தொலைப் பணியாற்றலும் (remote working)

தொலைதூரப் பணியாற்றல் (remote working) என்பதைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் மிக நீண்ட காலமாக அறியப்பட்டிருந்ததெனினும் அது பெரிதாகப் பாவனையில் ஈடுபடுத்தப்படவில்லை. வலையமைப்பு பாதுகாப்பில் ( network security) இருந்த நம்பிக்கையீனம் மற்றும் தமது சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்யலாமென்று மாணவர்களும் பணியாளர்களும் கொண்டிருந்த அவநம்பிக்கையும் இந்நடைமுறைப் பிரயோகத்தைத் தாமதப்படுத்தியிருந்தன. இந்த இசைவாக்கத்தின் பயனாக, மெருகூட்டப்பட்ட தற்போதைய தொழில்நுட்பம், தொலைப் பணியாளர்களின் விசைப்பலகை (key strokes) மற்றும் சுட்டி (mouse) ஆகியவற்றின் இயக்கங்களையும் நகர்வுகளையும் அவதானிப்பதோடு, எழுந்தமானமாக கணினிகளின் திரைகளைப் படமெடுப்பது (screen shots) போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகளை அலுவலக முகவர்கள் செய்வதற்கு வழிசெய்து கொடுக்கின்றன. கால, பண விரயங்களைத் தரும் பயணங்களைத் தவிர்த்து வீடுகளில் இருந்தபடியே சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கு அவர்கள் கொடுக்கும் விலையாக தொலைப் பணியாளர்கள் இந்த ‘கண்காணிப்புகளைச்’ சகித்துக் கொள்கிறார்கள்.

தொலைப்பணிகள் மூலம் உறபத்தித் திறன் (productivity) அதிகரித்ததைக் கண்ட நிறுவனங்கள், கோவிட் முடக்கங்கள் தளர்த்தப்பட்ட பின்னரும், தமது அலுவலகத் தள அளவுகளைச் சுருக்கிப் பணத்தைச் சேமித்துக்கொள்கின்றன. சில நிறுவனங்கள் தமது விலையுயர்ந்த அலுவலக வாடகைகைளைத் தவிர்ப்பதற்காக தொலைதூர சிறுநகரங்களில் சிறிய அலுவலகங்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றன. இருப்பினும், இப்படியான தொலைப் பணி முயற்சிகளினால் சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படாமலில்லை. உதாரணமாக அலுவலகங்களிலிருந்து பணியாற்றுபவர்கள் மத்தியில் ஏற்படும் சமூக உணர்வு, நேரடித் தொடர்பாடல், இறுக்கமான உறவு ஆகியவற்றின் மூலம் பலமானதும் விசுவாசமுள்ளதுமான பணிக்குழுக்களை உருவாக்க முடியும். இவற்றைத் தவிர்க்க சில நிறுவனங்கள் சில சாதுரியமான வழிவகைகளையும் கையாளுகின்றன.

செபீரோ : லண்டன், கொழும்பு, தற்போது யாழ்ப்பாணத்திலும்…

கோவிட் பெருந்தொற்றின்போது கொழும்பைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ‘செபீரோ’ (Xebiro) தனது பணியாளர்கள் பலரை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பியது. கோவிட் முடக்கம் தளர்த்தப்பட்டதும் இப்பணியாளர்களைக் கொழும்பிற்குத் திருப்பி அழைக்காமல் வடக்கின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் ஒரு தொலைப்பணி அலுவலகத்தை அது நிறுவி அதன் மூலம் பணியாளர்களை நிர்வகிக்க ஆரம்பித்தது.

கொழும்பு அலுவலகத்தில் சஜீவ் எட்வார்ட்

செபீரோ, யாழ்ப்பாணத்தில் பிறந்த சில இளையவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சிலர் தமது சிறு வயதுகளிலும், சிலர் தமது உயர்தரக் கல்விகளை முடித்துக்கொண்டு மேற்கல்விகளுக்காகவும் கொழும்புக்கு இடம் பெயர்ந்தவர்கள். இந் நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர்களாக (directors), சசீவன் கணேசானந்தன் (தலைவர்) Shaseevan Ganeshananthan (President), பிரேம்குமார் ராஜதுரை ( பொறியியல் மற்றும் செயற்பாட்டுப் பணிப்பாளர்) (Premkumar Rajathurai (Director, Engineering and Operations) மற்றும் சஜீவ் எட்வார்ட் (சந்தைப்படுத்தல் மற்றும் பங்காளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர்) (Director, Marketing and Partnership) ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்புகளை மேற்கொண்டிருந்தபோது அறிமுகமானவர்கள்.

2016இல் சசீவனின் எண்ணக்கருவில் உதித்த செபீரோ, ‘ஒன்ரோமட்றிக்ஸ்’ (Ontomatrix) என்ற பெயரில் 2017 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. ஐக்கிய அரபு ராச்சியத்தில் சந்தை ஆய்வுகள் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த சஜீவ் பின்னர் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் இந் நிறுவனம், ஐரோப்பாவிலுள்ள தமது வாடிக்கையாளர்களுக்காக டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் செயலிகளை உருவாக்கும் (digital marketing and application development) தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து நிறுவனம் வளர்ச்சியடைந்ததும் செயலி உருவாக்கப் பணிகள் தனிமைப்படுத்தப்பட்டு ‘கோட்லாண்டிக்’ (Codelantic) என்ற நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான JKH, MIT, Virtusa ஆகியவற்றில் பணியாற்றிக்கொண்டிருந்த பிரேம், கோட்லாண்டிக்’ நிறுவனத்தின் நிர்வாகப் பணியை ஏற்றுக்கொண்டார்.

இந் நிறுவனத்தின் ஆரம்பம் லண்டன், கொழும்பு நகரங்களாக இருப்பினும் அதன் எதிர்காலத் தளமாக யாழ்ப்பாண நகரமே இப் பணிப்பாளர்களின் மனங்களில் என்றும் நிறைந்திருந்தது. கோவிட் பெருந்தொற்று அந்த எதிர்காலத்தை நிகழ்காலமாக மாற்ற வழிசெய்துவிட்டது.

யாழ்ப்பாணத்தில் தொலைப்பணி முயற்சிகளின் சவால்கள்

லண்டனில் இருக்கும் தலைமையகம் பெரும்பாலான மென்பொருள் உருவாக்கங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், கொழும்பில் செபீரோ தனது குழுவினைக் கட்டியெழுப்பியது. 2020 இல் கோவிட்-19 இன் முடக்கங்கள் இம் முயற்சியை யாழ்ப்பாணத்திற்கு நகர்த்தியது. ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்திலுள்ள பழைய வீடொன்றை வாடகைக்கு அமர்த்தியதன் மூலம் செபீரோவின் இக்கள முயற்சி பலனளிக்குமா எனப் பரீட்சித்தார்கள். இந்த பரீட்சார்த்த முயற்சி அளித்த வெற்றியின் உற்சாகத்தால், 2021 நடுப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் ஒரு நிரந்தர இடமொன்றை எடுத்துக்கொள்ள நிர்வாகம் தீர்மானித்தது. யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து 500 மீட்டர்கள் தொலைவில் ஒரு நவீன கட்டிடம் இந் நிறுவனத்தின் தளமாகியது.

யாழ்ப்பாணத்தில் செபீரோ அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் 25 பணியாளர்களையும், உலகம் முழுவதிலும் மேலும் 70 பணியாளர்களையும் கொண்டு செபீரோ இப்போது ஒரு உலக நிறுவனமாகப் பரிணமித்துள்ளது. மென்பொருள் உருவாக்குபவர்கள் (developers), வணிக ஆய்வாளர்கள் (business analysts), தர உறுதியாளர் (Quality Assurance), தகவல் தொழில்நுட்ப-மென்பொருள் விருத்தியாளர் (DevOps) ஆகிய துறைகளில் திறமைகளைக் கொண்டிருப்பவர்களைப் பயிற்சியாளர்களாக (interns) உள்வாங்கிப் பின்னர் நிரந்தர பணியாளர்களாக அவரவர் துறைகளுக்குத் தரமுயர்த்துவதைத் தனது கொள்கையாக வரித்திருக்கிறது செபீரோ. யாழ்ப்பாணத்தில் உருவாகும் இப்பணியாளர்களின் தொழில்நுட்பத் தரம் கொழும்பிலுள்ளவர்களுக்கு நிகராக இருக்கிறது என்கிறார் சஜீவ். பயிற்சிக்காகப் புதியவர்களை உள்வாங்குவது அவர்களுக்குத் தொழில்நுட்பத்தைப் போதிப்பதற்கல்ல மாறாக, அவர்களுக்கு ஒழுக்கத்தையும் (discipline), மென்திறன்கள் (soft skills), நல்ல மனப்பான்மை (good attitude) ஆகியவற்றை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே எனக் கூறுகிறார் சஜீவ்.

இலக்கு நோக்கி மையப்படுத்தப்பட்ட ஒரு வணிக சூழலில் (focused goal driven corporate team environment) பணியாற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்வதே இப்பயிற்சியாளரிடம் எதிர்ப்பார்க்கப்படுவது. இலங்கை முழுவதற்கும் பொதுவான குணாம்சமான, மெதுவான சீரற்ற வாழ்வுமுறைக்குப் (slower more random pace of life) பழக்கப்பட்டுப் போனவர்கள் இவர்கள். வடக்கிலிருந்து தெற்குவரை, குழந்தைப்பருவம் முதல் முதுபருவம் வரை, அரச சேவை முதல் தனியார் சேவை வரை இதுவே பழக்கம். வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் இலங்கை நிறுவனங்களில் மட்டுமே உண்மையான தொழில்நேர்த்தியைக் காணமுடிகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள வாடிக்கையாளர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். இலங்கையின் வேகத்தில் இயங்கும் நிறுவனங்கள் இவ்வணிகச் சூழலில் நிலைத்து நிற்கமாட்டா. நிலைத்து நின்றுபிடிக்கும் நிறுவனங்கள் ஒழுக்கம், இலக்குநோக்கிய நகர்வு, நற்பண்பு ஆகியவற்றைத் தமது பணியாளர்களிடையே புகுத்தியவையாகவே இருக்கும். ஆடை, தேயிலை உற்பத்தி முதல் மென்பொருள் சேவை வழங்கும் துறைகள் வரை இதுவே உண்மை.

கொழும்பு போன்ற ‘அதி வேக’ நகரங்களில் இயங்கும் தொழில்நுட்பத் துறைக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்று. புதிதாக சேர்க்கப்படும் பணியாளர்கள் மூத்த, அனுபவமிக்க பணியாளர்களிடமிருந்து இப்பணிக்கலாச்சாரத்தை விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். பழையவர்களிடமிருந்து புதியவர்களும் நல்ல பண்புகளை உள்வாங்கப் பழகிக்கொள்கிறார்கள். நேரம் தவறாமை, இலக்கு நோக்கிய திண்ணமான, அமைதியான பணியாற்றல் ஆகிய பண்புகளைக் கொண்டிருக்கும் மூத்தோரைப் பார்த்து இளையோரும் கற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம் தமது திறமைகளை அபிவிருத்தி செய்துகொள்பவர்களுக்கு பல வழிகளிலும் தொழில்வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்கள் வந்து சேர்கின்றன. ஊதிய உயர்வும், கைகளில் நிரம்பப் பணமும் அவர்களுக்கு வெகுமதிகளாகக் கிடைக்கின்றன. கடிகாரம் தீர்மானிப்பது போலல்லாமல், நாள் முடியும்போதுதான் பணியும் முடிவடைகிறது என்ற பணிக்கலாச்சாரத்தை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.


Premkumar Rajathurai, Director Engineering and Operations, in the Jaffna office

இப் பணிக்கலாச்சாரத்தைப் புகுத்துவதற்கு செபீரோ ஒரு வரையறுக்கப்பட்ட நடைமுறையைக் கையாள்கிறது. பணியாளர்கள் உள்வரும் போதும் வெளீயேறும் போதும் அவர்களது பெருவிரலடையாளாங்கள் ஸ்கானர் மூலம் பதியப்படுகின்றன. ஆடையணிகளில் இறுக்கமான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. கூட்டங்கள் சரியான நேரத்துக்கு ஆரம்பிப்பதுடன் செயற்பாடுகள் அனைத்தும் பதிவுசெய்யப்படுகின்றன. முறையாக வரையறுக்கப்பட்ட கையேடுகள் மற்றும் தானியக்கப் பரிசோதனைகள் ஆகியன, மென்பொருட் செயற்பாடுகள் சீராகச் செயற்பட வழிவகுக்கின்றன. ஏற்கெனவே செயற்பாட்டில் இருக்கும் பல மென்பொருள் செயலிகள் தொலைப்பணி (remote working) முறைகளில் பிரயோகப்படுத்தப்படுகின்றன. திட்ட மேலாண்மைக்கு (Project Management) ‘ஜிரா’ (Jira); குழுக்களிடையே தகவற் பரிமாற்றத்துக்கு ‘ஸ்லாக்’ (Slack); மென்பொருள் தரத்தைப் (code quality) பரிசோதிக்க ‘சோனார்கியூப்’ (SonarQube) மற்றும் ‘ஹைவ்டெஸ்க்’ (Hivedesk) ஆகிய மென்பொருள்களும் பாவிக்கப்படுகின்றன. விசைப்பலகைகளின் செயற்பாடுகள் (key strokes), சுட்டி அசைவுகள் (mouse movements) ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காகவும், இடைக்கிடையே அவர்களது கணனிகளின் திரைகளைப் படம் பிடிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட விசேட கணகாணிப்புச் செயலிகள் (Apps) ஒவ்வொரு பணியாளர்களின் கணினிகளிலும் உட்புகுத்தப்பட்டிருக்கின்றன. அலுவலகங்கள் எங்கும் பொருத்தப்பட்டிருக்கும் காமராக்கள் (CCTV) அலுவலகச் செயற்பாடுகளை நிர்வாகம் கவனித்துக்கொள்ள உதவுகிறது.

‘ஹைவ்டெஸ்க்’ போன்ற கண்காணிப்புச் செயலிகள் ஒருபணியாளரது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறது என்ற கரிசனை இருந்த போதிலும், அலுவலகத்தில் நேரடியாக வந்து பணிபுரியும்போது முகாமையாளரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவது போன்ற ஒன்றே இதுவும் என எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து பணிபுரிபவர்களுக்கும் கொழும்பிலிருக்கும் அலுவலகமொன்றில் பணிபுரிபவர்களுக்கும் ஒரே வகையான கண்காணிப்பை இத் தொழில்நுட்பம் வழங்குகிறது.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தேவைகளுக்காக ‘ஒன்ரோமேட்றிக்ஸ்’ என்ற நிறுவனத்தையும், மென்பொருள் தயாரிப்பிற்காக ‘கோட்லாண்டிக்’ என்ற நிறுவனத்தையும் செபீரோ நிறுவியது. அத்தோடு ‘எம்பிறியோஸ்’ (Embryoz) என்ற நிறுவனத்தையும் பின்னர் தனது குழுமத்தில் இணைத்துக்கொண்டது. முதன் முதலாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களில் (startups) பங்குதாரராகி அவற்றை வளர்த்துவிடுவதே ‘எம்பிறியோஸ்’ நிறுவனத்தின் நோக்கம். எம்பிறியோஸ்’ நிறுவனத்தில் பங்குதாரராகுவதற்கு முதலீடாக அதன் மென்பொருள் விருத்தி, சந்தைப்படுத்தல், ஆதார சேவைகள் ஆகியவற்றை மிகக்குறைந்த விலையில் (at cost) செபீரோ வழங்குகிறது. லண்டனில் நான்கு ஆரம்ப வியாபார நிறுவனங்களுடன் தற்போது ‘எம்பிறியோஸ்’ பணியாற்றி வருகிறது. Digital Banking Ecosystem, Artificial Intelligence Analysis of Text, Market Place for Beauty and Grooming Saloons, A Full Service Enterprise wide E-Commerce System ஆகியவையே அவை. மேலும் பல புதிய வியாபார ஆரம்ப முயற்சிகள் ‘எம்பிறியோஸ்’ உடன் இணைவதற்குக் காத்திருக்கின்றன. technical infrastructure support and management மற்றும்  Artificial Intelligence and machine learning applications போன்ற புதிய வியாபார முயற்சிகளுக்கான முதலீடுகளைத் தருவதற்கு ‘செபீரோவின்’ கிளை நிறுவனங்கள் தயாராகவுள்ளன.

வடக்கின் திறமைகளை அபிவிருத்தி செய்தல்

வடமாகாணத்தின் இளையோரை வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிய மேற்கொள்ளும் முகமாக ‘நேச்சர் லீப்’ (NurtureLeap) என்னும் திட்டத்தை செபீரோ அறிமுகப்படுத்தியிருக்கிறது. வட மாகாணத்தின் பல்கலைக்கழகங்களுக்கு மிக அண்மிய பகுதிகளில் இவற்றின் அலுவலகங்கள் அமைந்திருக்கும். யாழ். பலகலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள ‘கம்பஸ் வீதி’ யில் இதன் முதலாவது அலுவலகம் இருக்கிறது. வடக்கிலிருந்து வரும் பயிற்சியாளர்கள் தங்கி செபீரோவின் ‘இலங்கைத் தலைமையகத்தில்’ பயிற்சிகளைப்பெறுவதற்காக கொழும்பில் ஒரு வீட்டையும் இந் நிறுவனம் வைத்திருக்கிறது. பொருத்தமான தொழில்நுட்பத் திறமைகளைக் கொண்டிருக்கும் பயிற்சி மாணவர்களுக்கு ‘நேச்சர் லீப்’ சம்பளமும் வழங்குகிறது. மென்பொருள் அபிவிருத்தி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், தகவல் பரிமாற்றக் கட்டுமானம், செயற்கை விவேகம் போன்ற துறைகளில் இம் மாணவர்களுக்கு ‘நேச்சர் லீப்’ பயிற்சிகளை வழங்குகிறது. 6-12 மாத காலப் பயிற்சியின் பின்னர் இம்மாணவர்களுக்கு தமது நிறுவனங்களிலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ முழுநேர பணிகளைப் பெறுவதஹ்ற்கு செபீரோ உதவி செய்கிறது.

மேலும், அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கு பண உதவிகளைச் செய்ய விரும்புவர்களிடமிருந்து நன்கொடைகளை (sponsorships) ‘நேச்சர் லீப்’ எதிர்பார்க்கிறது. நிர்வாகச் செலவு, உபகரணங்கள், மாணவரின் பராமரிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்க இது உதவும்.

இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் யாழ்ப்பாணததை ஒரு திறனாளர் சந்தையாக மாற்றுவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடிவரும் நிலையை உருவாக்கவேண்டுமென்பதே செபீரோவின் இலட்சியம். வடக்கில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் காட்டும் உதாரண நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதும் அதன் விருப்பம். சிறிய இலாபங்களைத் தரும் முயற்சிகளைத் தாண்டி, கிராமத்துத் தையல் பெண்களுக்கு உதவி செய்வதையோ, அல்லது கைவினைப் பொருட்களைச் செய்து விற்று வறுமையைப் போக்குவதற்கென உதவிகளைப் புரிவதையோ விட்டுவிட்டு மக்களை நிரந்தரமாக வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் பெரு முயற்சிகளுக்கு உதவிகளைச் செய்யவேண்டுமென்பதே செபீரோவின் பெருவிருப்பு. இதன் மூலம், இந் நன்கொடைகள் நிறுத்தப்பட்ட பின்னருங்கூட, இக் குடும்பங்கள் தொடர்ந்தும் செழிப்போடு வாழ முடியும்.

செபீரோ நிறுவனத்தின் பங்காளர் பணிப்பாளரான சஜீவ் எட்வார்ட்டுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: sajeev@xebiro.com

( — இக்கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து தனது இரண்டு வயதில், குடும்பத்தினருடன் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்தவர். இலண்டனில் வளர்ந்த இவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம்பெற்றபின் இரண்டு தசாப்தங்களாக தகவற் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். இதைல் அரைவாசிக்காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை இலங்கையிலும், இந்தியாவிலும் நிர்வகித்தார். 2015 இல் இலங்கைக்குத் திரும்பிய ஜெகன் யாழ்ப்பாணத்தைத் தனது தளமாகக் கொண்டு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். விரும்புபவர்கள் jekhanaruliah@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.-)

(இக் கட்டுரை லங்கா பிசினெஸ் ஒன்லைன் (Lanka Business Online (LBO)) என்ற இணையப் பத்திரிகைக்காக எழுதப்பட்டுப் பிரசுரமானது. தலைப்பு மற்றும் சிறிய மாற்றங்களுடன், ஆசிரியரின் அனுமதியுடன் இங்கு மீள் பிரசுரமாகிறது)