IndiaNews & Analysis

அஞ்சலி | சென்றுவாருங்கள் சின்னக் கலைவாணரே!

திடீர் மாரடைப்பினால் நேற்று சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் சனி காலை 4.35 மணிக்கு மரணமானார். இறக்கும்போது அவருக்கு 59 வயது.

அவருக்குச் சிகிச்சையளித்த டாக்டர்களின் கருத்துப்படி, அவருடைய இருதயத்திற்கு குருதி வழங்கும் பிரதானமான LAD என்ற நாடியில் 100% அடைப்பு ஏற்பட்டிருந்ததெனத் தெரியவருகிறது. Widow maker எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்நாடியில் அடைப்பு ஏற்படும்போது உயிராபத்து ஏற்படுவதற்குச் சாத்தியங்கள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்,

வியாழன்று நடிகர் விவேக் கோவிட் தடுப்பு மருந்து எடுத்ததற்கும் இம் மரணத்துக்கும் சம்பந்தமில்லை எனச் சம்பந்தப்பட்ட மருத்துவமனையும், தமிழ்நாடு சுகாதாரத் திணைக்களச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை

கோவில்பட்டியில் பிறந்த விவேக்கின் இயற் பெயர் விவேகானந்தன். பாடசாலை, கல்லூரிக் காலங்களிலிருந்தே நகைச்சுவை நிகச்சிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றி வருபவர். தமிழ்நாடு அரசாங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தனியாக நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் (standup comedy) செய்துவந்தார். 1987 இல் மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் ‘மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரமொன்றைக் கொடுத்ததன் மூலம் விவேக் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

80 களில் பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துவந்த விவேக் 90களில் மிகவும் வேண்டப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகராக இருந்தார். இக் காலத்தில் ரஜினிகாந் போன்ற பிரபல நட்சத்திரங்களுன் அவர் நடித்திருந்தார். 220 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகர் விவேக்கை மேலும் பிரபலப்படுத்தியஹு அவருடைய ‘ஒரு வசன நகைச்சுவை’ . அவருடைய வசனங்கள் பின்னர் பெரிய நாயகர்களாலேயே தமது படங்களில் பாவிக்கப்படுமளவுக்குப் பிரபலமானவை. குஷி, மின்னலே, அலைபாயுதே, டும் டும் டும், சிவாஜி போன்ற பல நகைச்சுவைப் படங்கள் தற்போதும் விரும்பிப்ப் பார்க்கப்படும் படங்களாகும். கமல், மாதவன், அஜித், விஜேய் போன்ற பல தலைமுறைகள் கதாநாயகர்களோடு இணந்து பல படங்களில் நடித்திருக்கிறார் விவேக்.

சமூக செயற்பாடுகள்

திரைப்படத்துறைக்கு அப்பால், நடிகர் விவேக் பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் முன்னெடுத்து வந்தவர், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனது சமூக வலைத்தளத்தின் மூலமாகவோ அல்லது கிடைக்கும் மேடைகள் மூலமாகவோ பல சமூக நலச் செய்திகளைப் பரப்பி வந்தவர். காதல் சுடுகுது போன்ற படங்களில் வன்புணர்வு செய்தவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண்ணை வற்புறுத்துவது தொடர்பாக மிகவும் கடுமையான எதிர் நிலைப்பாட்டை எடுத்திருந்தார். மூடநம்பிக்கைகள், சடங்குகள் விடயத்தில் நம்பிக்கையில்லாத அவர் தனது படங்களில் அவற்றைப் பரிகசித்து வந்தார். இதற்காக அவர் ‘சின்னக் கலைவாணர்’ எனச் சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் நாள் கோவிட் தடுப்பூசி போட்டுவிட்டு வந்ததும் மக்களுக்கு தடுப்பூசியின் அவசியம் பற்றி நீண்ட் உரையொன்றை ஆற்றிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.

சாதனைகள்

கலையுலக சாதனைகளாக, ஃபிலிம்ஃபெயர், தமிழ்நாடு மாநில விருதுகளையும், 2009 இல் மத்திய அரசினால் வழங்கப்படும் நான்காவது அதியுயர் சிவிலியன் விருதான பத்மஷிறீ விருதையும் பெற்றிருக்கிறார். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமைப் பின்பற்றும் விவேக், புவி மாசடைதல், வெப்பமாதலைத் தவிர்ப்பதற்காக, ‘பசுமை கலாம்’ என்னும் ஒரு செயற்பாட்டைத் தொடக்கி வைத்தார். இதன் மூலம் அவர் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 1 பில்லியன் மர முளைகளை விநியோகித்தார்.

உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களைச் சிரிக்கவைத்த அவரது வாழ்வில் தீராத சோகமாக ஒரு நிகழ்வு நடைபெற்றது. 2015 இல் அவரது மகன் பிரசன்னா குமாரை டெங்கு சுரத்துக்கு இழக்கவேண்டி நேரிட்டது. இதன் பிறகு அவர் பழைய விவேக்காக மாறவேயில்லை.

அவர் நினைவாகவும், அவரது மகன் பிரசன்னா நினைவாகவும் அவர் தமிழ்நாடெங்கும் நாட்டிவிட்டுப் போன மரக்கன்றுகள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் அவருக்காக எப்போதும் நிழலைத் தந்துகொண்டிருக்கும்.