Sri Lanka

சென்னை-யாழ்ப்பாணம் விமானச் சேவைகள் அடுத்த வாரம் ஆரம்பம்

மூன்று வருடங்களின் முன்னர் நிறுத்தப்பட்ட யாழ்-சென்னை விமானப் பயணிச் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கையின் வான்சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். சுற்றுலாத் துறையின் வருமான வீழ்ச்சியைப் போக்கி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இவ்விமானச் சேவை அவசியமெனவும் அதுஅநேகமாக, டிசம்பர் 12 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படலாமெனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கோதாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் நவம்பர் 2019 இல் இச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத் தீபகற்பத்திலுள்ள ஒரே ஒரு விமான நிலையமான பலாலி விமான நிலையம் அக்டோபர் 2019 இல் ‘யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து அடையாளப் பறப்பிற்காக சென்னையிலிருந்து அங்கு முதலாவது ‘சர்வதேச’ விமானமொன்றும் வந்திறங்கியிருந்தது. 2019 இல் மேற்கொள்ளப்பட்ட இவ்விமான நிலையத்தின் மீள் நிர்மாணத்தில் இலங்கையும் இந்தியாவும் பங்கெடுத்திருந்தன. கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இச்சேவை உடனடியாக நிறுத்தப்பட்டு விமான நிலையத்தின் முக்கிய தொழில்நுட்பக் கருவிகள் போன்றவை கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தன.

தற்போதுள்ள நிலையில் இவ் விமான நிலையத்தின் ஓடுபாதை 75 ஆசன விமானங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறது. ஓடுபாதை விரிவாக்கத்திற்கு அப்பகுதி வாழ் மக்களிடையே பலத்த எதிர்ப்பு இருப்பதாகவும் அவர்களுக்கு மாற்றிடம் கொடுப்பதில் இழுபறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டுச் செலாவாணியைப் பெற்றுத்தரும் முக்கிய துறையாக சுற்றுலாத்துறை இருக்கிறது. நவம்பர் மாத்ம் மட்டும் இதன் வர்மானம் US$ 107.5 மில்லியன்களை எட்டியிருக்கிறது.