செங்கோல் – இந்து அதிகாரத்தின் சின்னமாகிறதா?
மாயமான்
பொன்னியின் செல்வன் தமிழுக்கும் தமிழருக்கும் உருவேற்றிவிட இப்போது செங்கோல் வந்து மேலும் உடுக்கடிக்கிறது. எல்லாம் நன்மைக்கே தான். அடுத்த பரம்பரை தமிழர் வரலாற்றைக் கூகிளில் தேட இவையெல்லாம் உதவிசெய்யும்.
இந்த செங்கோலுக்குப் புதுக்கதையும் பழைய கதையுமிருக்கிறது. வடஇந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தின் திறப்புவிழா மே 28 இல் (இன்று) நடக்கவிருக்கிறது. இந்த நாடாளுமன்றத்தின் ஆரம்பவிழாவில் கைமாறப்படவிருக்கும் செங்கோலின் கதை புதிது. இந்தியா சுதந்திரமடைந்தபோது தமிழ்நாட்டினால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை பழைய நாடாளுமன்றத்திலிருந்து புதிய நாடாளுமன்றத்துக்கு மாற்றுவதாக மோடி அரசு திடீர் அறிவிப்பைச் செய்தது. அதை விரும்பாத தி.மு.க. உட்பட 19 கட்சிகள்திறப்புவிழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இச்செங்கோல் ஒரு பொது வைபவத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது 1947 இல். அப்போதைய திருவாடுதுறை ஆதீனத்தின் துணைத் தலைவர் குமாரசுவாமி தம்பிரானால் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இச் செங்கோல் வழங்கப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை இச் செங்கோல் வெளிச்சத்தைக் கண்டிருக்கவில்லை. நேரு குடுபத்துக்குக் காணிக்கையாக்கப்பட்டு அலகபாத்திலுள்ள ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் ஓய்வுபெற்றிருந்த செங்கோல் யாரோ ஒரு முக்கிய சங்கியின் கண்ணில் பட்டுவிட்டதால் இப்போது அது புதிய நாடாளுமன்றத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கிறது.
இந்த 19 கட்சிகளும் திறப்புவிழாவைப் புறக்கணிப்பது செங்கோலுக்காகவல்ல, மாறாக மோடி அரசின் பிற்போக்குத்தனமான அரசியலைத் தோலுரித்துக்காட்டவெனக் கூறப்படுகிறது. வழக்கமாக நாடாளுமன்ற ஆரம்ப நிகழ்வுக்குத் தலைமை தாங்குவது நாட்டின் ஜனாதிபதியே தவிரப் பிரதமரல்ல. ஆனால் இந்தத் தடவை ஜனாதிபதி ஓரங்கட்டப்பட்டு பிரதமர் மோடிக்கு இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இதற்கு காரணம் செங்கோல் அல்ல. அதைக் காவிச்செல்லவேண்டிய ஜனாதிபதி திரெளபதி முர்மு துர்ப்பாக்கியமாக ஒரு ஆதிவாசியாக இருந்துவிட்டார். சங்கிகளின் அடாவடித்தனத்தின் அதியுச்சமிது.
பழைய கதை
செங்கோல் என்பது நீதி வழுவாது ஆட்சி செய்யும் அரசன் ஒருவனுக்கான சின்னமென சங்கநூல்கள் கூறும். சிலப்பதிகாரத்தில் பாண்டியர்களின் செங்கோல்கள் பற்றிய பல கதைகள் உண்டு. பாண்டிய நாட்டின் செங்கோல் ஒருபோதும் வளையாதது எனவும் ஆனால் கோவலன் விடயத்தில் இச்செங்கோல் வளைந்துவிட்டது எனவும் சிலப்பதிகாரம் சொல்லும்.
அரசர்கள் தமது முடிகளைத் துறந்து பிறிதொருவருக்கு முடிசூட்டும்போது நீதி வழுவாது ஆட்சியைத் தொடரவேண்டுமென்பதன் அடையாளமாக செங்கோலைக் கொடுப்பது வழக்கம். ஆனால் ஜனநாயக மரபு ஆட்சியைத் தீர்மானிக்கும் கோலாக மாறியதும் செங்கோலின் தேவை இல்லாமல் போய்விட்டது. 1947 இற்குப்பின் இந்தியாவை நீண்டகாலம் ஆண்ட கட்சி காங்கிரஸ். நேருவைப் போலவே அவரின் வாரிசுகளும் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவர்களாட்சியில் செங்கோல் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் சங்கிகளின் தந்திரமும் நோக்கமும் வேறு. செங்கோலை அவர்கள் இந்துக்களின் அதிகாரச் சின்னமாக மாற்றிவிட்டார்கள், an act of cultural appropriation.
செங்கோலின் புதுக்கதையையும் பழைய கதையையும் போட்டுக் குழைத்துப் பார்த்தால் அதற்குள் சங்கிகளின் ‘நிறத்தைப்’ பார்க்கலாம். ஜவஹர்லால் நேருவுக்கு செங்கோலைக் கையளிக்க முன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தின் குமாரசுவாமி தம்பிரான் அதைப் பன்னீரால் கழுவித் தூமைப்படுத்தியே கொடுப்பார். காரணம் மவுண்ட்பேட்டன் கையிலிருந்து அதைத் தம்பிரான் வாங்குகிறார். அச்செங்கோல் அசுத்தமாகிப் போய்விட்டது என்பதற்காக அதைக் கழுவியிருக்கலாம். இந்த மதச்சம்பிரதாயத்துடன் நேரு உடன்பட்டிருப்பார் என்பது சந்தேகம். ஆனால் செங்கோல் என்பது நீதிவழுவாமையின் சின்னம் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருப்பார் எனவும் நம்ப இடமுண்டு. ஆனால் சங்கிகள் செங்கோலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்தால் அதை இந்து ஆதிக்கவெறியின் ஒரு அடையாளமாக்குவதற்கான முயற்சி எனவே படுகிறது. நீதிவழுவாத தமிழ் அரசர்களின் கரங்களிலிருந்து செங்கோலைப் பிடுங்கி பன்னீரால் கழுவி அதை ஒரு புனித இந்து ஆயுதமாக மாற்றுவதே சங்கிகளின் நோக்கம்.
இதற்காக நாம் ஆதீனங்கள் மீது கசப்படையத் தேவையில்லை. அது சைவர்களின் மடம். அங்கு சமஸ்கிருதத்தில் அல்ல தமிழிலேயே பாராயணம் செய்யப்படுகிறது. இதன் தலைவர்கள் பிராமணராக இருப்பதில்லை. எனவே நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் உரிய இடத்தில் தான் இருந்திருக்கிறது. சங்கிகள் தத்தெடுக்கும்வரை அதன் பிறப்பும் வளர்ப்பும் தமிழ்தான். சிவன் ஒரு தமிழ்க் கடவுள் என்பதே அவர்கள் வாதம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் நோக்கம் இந்த சைவத் தமிழ் ஆதீனங்களுக்கும் காவிகளைப் பூசி இந்துக்களாக்குவது. சென்ற வருடம் மதுரையில் நடந்த விஷ்வ ஹிந்து பரிசாத் மாநாட்டில் மதுரை ஆதீனகர்த்தா தேசிகர் ஞானசம்பந்தர் பேசியது சங்கிகளின் நோக்கம் வெற்றிபெறுகிறது என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. செங்கோலின் புதிய கதை அதன் அடுத்த அத்தியாயம்.
ஆதீனங்கள் ஒருபோதும் தம்மை இந்து என அழைத்ததில்லை. சைவர்கள் என்றே அழைப்பார்கள். பா.ஜ.க.வின் இந்துத்வ அரசியலுக்கு இது சவாலாக இருந்துவருவது. எனவே செங்கோலுக்கும் ஆதீனத்துக்கும் முடிச்சுப்போட்டு இரண்டுக்கும் காவி பூசுவதே சங்கிகளின் நோக்கம். இதன் பிறகு செங்கோல் ஒரு இந்து அதிகாரத்தின் அடையளமாக மாறிவிடும். இதற்கு அண்ணாமலை போன்ற தமிழர்களும் துணைபோகின்றார்கள்.
ஆனாலும் நாடாளுமன்றத்தில் செங்கோல் குந்தியிருப்பது பற்றிச் சில தமிழ் உணர்வாளர்கள் புல்லரித்துப்போயிருப்பதுமுண்டு. ‘இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல்’ என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கும். படிப்படியாக அதன் பெயர், நிறம், வடிவம் எல்லாம் மாறிக் காவிகளின் அடையாளமாக அது மாற்றப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதைவிடச் சங்கிகளுக்கு இன்னுமொரு நோக்கமும் இருக்கலாம். தமிழ்நாடு மாநிலத்தில் பா.ஜ.க. அரசியல் ரீதியாகப் பலதடவைகள் மூக்குடைபட்டுப் போனதன் காரணமாக இம்முறை தமிழரின் அடையாளமான செங்கோலைப் பெருமைப்படுதியதன் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க அவர்கள் கனவு காணலாம். கடந்த வாரம் சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ‘செங்கோல்’ மாநாட்டில் மத்திய தமிழ் அமைச்சர்களும் மாநில தமிழ் அமைச்சர்களும், ஆளுனர் ரவியும் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்துகொண்டிருப்பது ‘செங்கோலின்’ தேவையச் சங்கிகள் சரியாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள் எனவே படுகிறது.
பாவம் செங்கோல். (Image Credit: TNM)