Spread the love
கெஜ்ரிவாலின் முயற்சியால் நான்கு ஆண்டுகளில் டெல்ஹியின் வளி மாசு (air pollution) 25% குறைந்தது

செப்டம்பர் 12, 2019

உலகின் அதிகமான மாசுள்ள காற்றைச் சுவாசிப்பவர்கள் டெல்ஹி வாசிகள் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பு (WHO) தீர்ப்பு வழங்கியிருந்தது. தற்போது அம் மாசு 25% தால் குறைந்திருக்கிறது. என்ன நடந்தது?

சூழல் மாசடைதல் | டெல்ஹி முதலமைச்சரின் மாசற்ற தலைமை! 1
டெல்ஹி நகரின் மாசடையும் வளி

2014 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு உலகம் பூராவும் இருக்கும் பெரிய நகரங்களில் வளி மாசடைந்திருக்கும் தரத்தைப் அளவிட்டுப் பட்டியலிட்டது. அதன் படி உலகின் அதி கூடிய மாசடைந்த வளியைக் கொண்ட நகரம் டெல்ஹி என்று அறிவித்தது.

அப்போது டெல்ஹியின் முதலமைச்சராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் அப்போது ஒரு சபதமெடுத்தார். டெல்ஹியின் வளியைச் சுத்தப்படுத்துவேன் என்று. நான்கு வருடங்களுக்குப் பிறகு அங்குள்ள வளியின் மாசு 25 வீதத்தால் குறைந்திருக்கிறது. சொன்னதைச் செய்கிறார்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளிவந்தவுடன் கெஜ்ரிவால் ஒரு ‘மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவை அமைத்தார். 2010 இல் அது வளி மாசுவை உடனுக்குடன் (real time) கணிக்கும் நிலையங்களை, ஆர்.கே.புரம், பஞ்சாபி பா, ஆனந்த் விஹார், மந்திர் மார்க் ஆகிய இடங்களில் நிறுவினார். கடந்த வருடம் இந் நிலையங்கள் 26 ஆக உயர்ந்தது.

2012 இல் டெல்ஹியின் வளியின் தராதரம் கீழ் நிலைக்குப் போனதை இந் நிலையங்கள் அறிவித்தன என டெல்ஹி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். “அந்த வருடம், குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில், விவசாயிகள் அறுவடை முடிந்த கையோடு வரும் பயிர் எச்சங்களை எரிப்பார்கள். அது காற்றோடு வந்து வளி மண்டலத்தில் தங்கி விடுகிறது. இது கட்டுப்பாட்டுக் குழுவுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்தது. வளியின் தராதரம் சடுதியாகக் குறைந்ததற்கு பயிர் எரிப்பே காரணம் என்றார் அந்த அதிகாரி.

2012 இலிருந்து டெல்ஹியின் வளி மாசு படிப்படியாகக் குறைந்துகொண்டு வருகிறது. 2015 இலும் 2018 இலும் அதன் வீழ்ச்சி அதிகம்.

அமெரிக்க சூழல் பாதுகாப்பு வாரியத்தின் (Environmental Protection Agency -EPA) கருத்துப்படி, வளியிலுள்ள துகள்கள் மீது நீர்த் திவலைகள் படிவதால் ஏற்படும் துணிக்கைகள் தான் வளி மாசடைவதற்குக் காரணம். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வளி மாசடைதல் அதிகரிக்கிறது எனவும், நவம்பர் மாதம் இது உச்சத்துக்குப் போகிறது எனவும் கட்டுப்பாட்டுக் குழு நிரூபித்திருக்கிறது.

ஹர்யானா, பஞ்சாப், உ.பி. போன்ற பிரதேசங்களில் நவம்பர் மாதமே வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன. இக் காலப்பகுதியில் வெப்பநிலை தணிந்து வளியின் ஈரப்பதனும் அதிகரிக்கிறது. டெல்ஹியில் நவம்பர் மாதத்தில் இலைகள் எரிக்கப்படுகின்றன. இவற்றின் மொத்தமான விளைவுகள் தான் வளி மாசடைவதற்குக் காரணம் என்பதை அறிந்தார்கள்.

Related:  குவைத் | 8 இலட்சம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படலாம்

பயிர் எரிப்பு மட்டுமல்லாது, தெருச் சீர்திருத்தத்தினால் கிளம்பும் தூசி, வாகனங்களின் புகை எல்லாமே வளி மாசடைவதற்குக் காரணம். கெஜ்ரிவாலின் அரசாங்கம் அதற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.

2014 இல் வழக்கறொஞர் வர்த்தமன் கெளசிக் மாசடைதல் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பயத்திடம் (National Green Tribunal) விண்ணப்பம் கொடுத்தார். அவரது விண்ணப்பத்தின் பிரதிபலனாக, டீசல், பெற்றோல் வாகனங்கள் மீதான தடையுள்ளிட்ட, தீர்ப்பாயம் இட்ட பல கட்டளைகளை உச்ச நீதிமன்றம் தக்க வைத்தது.

2014 முதல் 2017 வரை டெல்ஹி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டுச் சபை, சூழல் மாசு தவிர்ப்பு, கடுப்பாட்டு அதிகாரசபை ஆகியன , தெருப் போக்குவரத்துக்களை மாறி மாறித் தடை செய்வது முதல், பல கட்டுப்பாடுகளை விதித்தும் தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியும் முயற்சிகளை எடுத்தன.

2017 இல் மத்திய அரசு தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைத் திட்டத்தைப் (Graded Response Action Plan (GRAP)) பாவித்து, டெல்ஹி அரசு 48 மணித்தியாலங்களுக்கு வளி மாசடைதல் நீடித்தால் கனரக வண்டிகள் டெல்ஹிக்குள் வருவது தடைசெய்யப்பட்டும், சகல கட்டுமான வேலைகளும் நிறுத்தப்பட்டும் நடவடிக்கைகளை எடுத்தது. அத்துடன் டெல்ஹியிலுள்ள இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை மூடியும், ‘பெற் கோக்’ ஆலைகளில் எரிபொருளாகப் பாவிக்கப்படுவதை நிறுத்தியும் ‘BS VI’ எரிபொருளை அறிமுகப்படுத்தியும், அனல் மின்நிலையங்களை மூடியும் டெல்ஹி அரசு மேர்கொண்ட நடவடிக்கைகளினால்தான் இம் மாசு குறைப்பு சாத்தியமானது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இருப்பினும், டெல்ஹி அரசு சுயமாக எடுத்த இரண்டு நடவடிக்கைகள் இம் மாசு குறைப்புக்கு முக்கிய காரணமென அவர்கள் கூறுகிறார்கள். ஒன்று: பயிர், இலை எரிப்புகளைச் செய்பவர்கள் மீது கடுமையான அபராதம் விதித்தமையால் எரிப்பு முற்றாக தடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு: கட்டுமான வேலைகளைக் கட்டுப்படுத்தியது. இது பயிர் எரிப்புத் தடையைப் போன்று அதிகளவு பலனைத் தரவில்லையாயினும், ஓரளவு உதவி செய்திருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

Print Friendly, PDF & Email