சூலகப் புற்றுநோய் (Ovarian cancer)

Spread the love
By: எஸ்.ரகுராஜ் M.D.
மேலோட்டமாக:
எஸ்.ரகுராஜ், MD

பெண்களில் சூலகம் (ovary) என்பது, அவர்கள் கருத்தரிப்பதற்குத் தேவையான முக்கிய உறுப்புக்களில் ஒன்று. ஒரு பெண்ணின் கருப்பைகளுக்கு மேலே இரண்டு பக்கங்களிலும் (இடம், வலம்) இரு சூலகங்கள் உண்டு. ஏறத்தாள பாதாம் பருப்பு அளவில் ஒவ்வொன்றும் இருக்கும்.

இச் சூலகம் இரண்டு முக்கியமான தொழிற்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஒன்று: கருத்தரிப்புக்குத் தேவையான முட்டைகளை (oocytes) உற்பத்தி செய்கிறது. மற்றது: பெண்களின் உடலியக்கத்துக்கு முக்கியமான எஸ்ட்றொஜின் (oestrogen) மற்றும் புறோஜெஸ்ரெறோன் (progestrone) ஆகிய ஹோர்மோன்களைச் சுரக்கிறது.

சூலகம்

சில பெண்களில் இச் சூலகங்களின் மீது புற்றுநோய் வளர்வது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். கனடாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சூலகப் புற்றுநோய்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வருடமொன்றுக்கு 2800 பெண்கள் இந்நோய்க்கு ஆளாகிறார்கள். உயிரைக் குடிக்கும் புற்று நோய்களில் இது 5 வது இடத்தை வகிக்கிறது. அமெரிக்காவில் வருடத்துக்கு 21,000 பேர் இந்நோய்க்கு ஆளாகி அவர்களில் 14,000 பேர் மரணமடைவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது.

பெரும்பாலான வேளைகளில் சூலகப் புற்றுநோய், இடுப்பு, வயிறு போன்ற இதர உறுப்புக்களுக்குப் பரவிய பின்னரே கண்டுபிடிக்கப்படுகிறது. பிந்திய நிலையில், இந்நோய்க்குச் சிகிச்சையளித்தாலும் பயனில்லாமல் போய்விடுகிறது. இந் நோயின் ஆரம்பத்தில், சூலகங்களில் மட்டுமே நோய் குடிகொண்டிருக்கும்போது, அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது கீமோ தெரப்பி மூலமாகவோ இலகுவாகச் சிகிச்சையளித்து நோயை வெற்றிகரமாக நிறுத்திவிடலாம்.


நோயறிகுறிகள்

சூலகப் புற்றுநோய், அதன் ஆரம்பத்தில் அறிகுறிகளைக் காட்டுவது குறைவு. முற்றிய நிலையில், அவற்றின் அறிகுறிகள், குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில், பாதகமற்ற அறிகுறிகள் போலத் (benign symptoms) தோற்றம் காட்டும். அவற்றில் சில:

 • வயிறு ஊதிய அல்லது வீங்கியது போன்ற உணர்வு (Abdominal bloating or swelling)
 • சாப்பிடும்போது விரைவில் வயிறு நிரம்புவது போந்ற உணர்வு (Quickly feeling full when eating)
 • உடல் எடை குறைதல் (Weight loss)
 • இடுப்பில் அசாதாரண உணர்வு (Discomfort in the pelvis area)
 • மல இறுக்கம் அல்லது ஒழுங்கற்ற மலக் கழிவு (Changes in bowel habits, such as constipation)
 • அடிக்கடி சலம் கழிக்க உந்துதல் (A frequent need to urinate)
சூலகப் புற்றுநோய்க்கான காரணங்கள் (Causes)

சூலகப் புற்றுநோய்க்கான காரணங்கள் என்னவென இன்னும் அறியப்படவில்லையாயினும், அந் நோயை ஊக்குவிக்கும் சில காரணங்களை (risk factors) மருத்துவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

கலங்கள் பிரிவடைந்து புதியவற்றை உருவாக்குவது உடலில் நடைபெறும் அன்றாட நிகழ்வு. உதாரணத்திற்கு, தோலிலுள்ள பழைய கலங்கள் இறந்துபோய் உதிர்ந்துபோகப் புதிய கலங்கள் அவற்றை ஈடுசெய்கின்றன. அநேகமான உறுப்புக்களில் இது ஒரு நாளாந்த நிகழ்வு. இப்படிக் கலப் பிரிவுகள் நடைபெறும்போது தவறுகள் அல்லது பிறழ்வுகள் (mutations) ஏற்பட்டுப் புதிய கலங்கள் கட்டுக்கடங்காமல் விரைவாகப் பிரிவடையத் தொடங்குகின்றன. அதனால் அப்பகுதியில் அசாதாரண வளர்ச்சி (திரட்சி tumor) ஏற்படுகிறது. நல்ல கலங்கள் தமது ஆயுளை முடித்துக்கொள்ள இந்த பிறழ்வுக் கலங்கள் தொடர்ந்தும் வாழ்கின்றன. சிலவேளைகளில் அயலிலுள்ள இழையங்களினுள்ளும் இவை அத்துமீறி வளர முற்படுகின்றன. இப்படி உடலின் வெவ்வேறு உறுப்புக்களுக்குப் பரவுவதை மருத்துவர்கள் metastasize அல்லது நான்காம் நிலைப் (stage 4 cancer) புற்றுநோய் என்றும் அழைப்பர்.

Related:  கனடாவுக்கு N95 சுவாசக் கவசங்களை விற்பதற்கு ட்றம்ப் தடை விதித்துள்ளார்!
ஆபத்துக் காரணிகள் (Risk factors)

சூலகப் புற்றுநோய் வருவதற்குச் சாத்தியாமான ஆபத்தான காரணிகள் பின்வருமாறு:

 • குடும்பத்தில் வேறு யாருக்காவது இவ் வியாதி வந்திருப்பது (a family history of ovarian cancer).
 • மரபணுக்களில் பிறழ்வுகள் (genetic mutations of genes associated with ovarian cancer, such as BRCA1 or BRCA2).
 • மார்பக, கருப்பை, பெருங்குடல் புற்றுநோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டமை (a personal history of breast, uterine, or colon cancer)
 • கட்டற்ற உடற் பருமன் (obesity)
 • கருவுற்பத்திக்கான மாத்திரைகள உண்டிருத்தல் அல்லது ஹோர்மோன் ஈடுசெய்திருத்தல் (the use of certain fertility drugs or hormone therapies)
 • ஒருபோதும் கர்ப்பமுறாதிருத்தல் (no history of pregnancy)
 • கருப்பையின் உட் சுவரில் படலம் வளர்தல் (endometriosis)
 • முதுமை (Older age)
 • பரம்பரையில் வரும் மரபணுப் பிறழ்வுகள் (Inherited gene mutations)
 • எஸ்ட்றொஜின் ஈடுசெய்யும் சிகிச்சை நீண்ட காலத்துக்குச் செய்யப்பட்டிருத்தல், அதிக பலமுள்ள எஸ்ட்றொஜின் பாவனை (Estrogen hormone replacement therapy, especially with long-term use and in large doses)
 • மாதவிடாய் தொடங்குவதும், முடிவதுக்குமான வயது (age when menstruation started and ended)
தடுப்பு முறைகள் (Prevention)

ஆரம்பத்தில் கண்டறிந்தாலே தவிர, சூலகப் புற்றுநோயை முற்றாகத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே. இருப்பினும் சில நடைமுறைகளின் மூலம் அதற்கான ஆபத்துக் காரணிகளைக் குறைக்க முயற்சிக்கலாம். அவை:

 • கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளல் (Consider taking birth control pills) – கருத்தடை மாத்திரைகளை நீங்கள் பாவிக்கலாமா என்பது பற்றி உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். உங்கள் நிலைமையைப் பொறுத்து அதனால் விளையும் நன்மைகள் / தீமைகள் பற்றி அவர் உங்களுக்கு விளக்கமளிப்பார்.
 • உங்கள் ஆபத்துக் காரணிகள் பற்றி மருத்துவருடன் ஆலோசியுங்கள் ( Discuss your risk factors with your doctor) – உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பக அல்லது சூலகப் புற்றுநோய் வந்திருந்தால் உங்கள் மருத்துவருக்கு இதைத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கும் இன் நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர் ஆலோசித்து முடிவுகளை எடுப்பார். சில வேளைகளில் உங்கள் மரபணுக்களைப் பரிசோதித்துப் பார்க்க மரபணு ஆலோசகரிடம் (genetic counselor) உங்களை அவர் அனுப்பலாம். உங்கள் மரபணுக்களில் பிறழ்வுகள் காணப்பட்டால் உங்களுக்கு சூலகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமெனத் தீர்மானித்து சூலகங்களை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குவதற்கு அவர் ஆலோசனை வழங்கலாம்.
பரிசோதனைகள் (Diagnostic tests)
Transvaginal Ultrasound

சூலகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க இரண்டு வகையான பரிசோதனைகளை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பது வழக்கம். 1: ‘ட்ரான்ஸ் வஜைனல் அல்ட்ராசவுண்ட்’ (transvaginal ultrasound). இதன் போது, சூலகம், கருப்பை, பலோப்பியன் குழாய் போன்ற கருத்தரிப்பு உறுப்ப்க்களின் உட்பக்கத்தை அல்ட்றாசவுண்ட் கருவி மூலம் ‘படம்’ பிடிக்கப்படும். 2: நோயாளியில் இரத்தப் பரிசோதனையைச் செய்து அதில் CA-125 (cancer antigen 125) எனப்படும் பதார்த்தம் அளவுக்கு மேலிருக்கிறாதா என்று பார்ப்பார்கள். வேறு பல காரணங்களிலஈனாலும் CA-125 பெண்களில் அதிகரிக்கின்ற படியால் இது ஒரு திட்டவட்டமான பரிசோதனையாக அல்லாது ஒரு மேலதிக வழிகாட்டியாகவே பாவிக்கிறார்கள்.

Related:  கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள ஒன்ராறியோ அரசின் செயற் திட்டம்
CA-125 அதிகரிப்பதற்கான இதர காரணங்கள்
 • கருப்பையின் அகப்படலம் (Endometriosis)
 • ஈரலில் கட்டிகள் (Liver cirrhosis)
 • சாதாரண மாதவிடாய்க் காலம் (Normal menstruation)
 • இடுப்பில் அழற்சி (Pelvic inflammatory disease)
 • கருப்பை நார்க்கட்டிகள் (Uterine fibroids)

இக் காரணங்களுக்காக மருத்துவர்கள், நோயாளியில் சூலகப் புற்றுநோய்க்கான அதீத ஆபத்துக் காரணி உண்டென்று தீர்மானித்தாலே தவிர CA-125 பரிசோதனையைப் பெண்கள் செய்வதற்குப் பரிந்துரைப்பதில்லை.

மரபணுப் பரிசோதனைகளில் BRCA1, BRCA2 மரபணுக்களில் பிறழ்வுகள் ஏற்பட்டிருப்பது அறியப்படும்போது அந்நோயாளிகளில் CA-125 பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இருப்பினும் CA-125 பரிசோதனையின் நோயறியும் திறன் பற்றி மருத்துவ சமூகம் இன்னும் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

Print Friendly, PDF & Email
>/center>