Sri Lanka

சூறாவளி புரெவி | வடக்கு, கிழக்கில் கடும் மழை, நான்கு பேருக்குக் காயம்


இலங்கையின் வடகிழக்குக் கரையோரக் கடல் மேல் கருக்கொண்டிருந்த சூறாவளி புரெவி, நேற்று (டிசம்பர் 2) இரவு 10:30 மணி போல் தரைப் பிரதேசத்தை அடைந்தது. வட கிழக்குக் கரையோரப் பிரதேசங்களான குச்சவெளி, திரியாய் ஆகிய பகுதிகளில் ஆரம்பித்த புரெவி, டிசம்பர் 3, அதிகாலை 2:00 மணிக்கு, அலம்பில், முல்லைத்தீவில் 222 மி.மீ. மழையைக் கொட்டியிருந்தது. ஒட்டுசுட்டான் 200 மி.மீ., பதவியா 193 மி.மீ, உடையர்கட்டு 189 மி.மீ, மணலாறு 180 மி.மீ., யாழ்ப்பாணம் 194.3 மி.மீ. என மழைப் பொழிவு பதியாகியிருந்தது என காலநிலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்பார்த்த அளவுக்கு உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லையெனினும், வடக்கு கிழக்கு பிரதேசங்கள் வெள்ளக்காடாக உள்ளன என அறியப்படுகிறது.

குறைந்தது நான்கு பேராவது கயப்பட்டுள்ளார்கள் எனவும், பல மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. திருகோணமலையில் ஐந்து வீடுகள் சூறாவளியினாற் சேதமடைந்துள்ளன.

வீடுகளில் வசிக்க முடியாத மக்கள் பாதுகாப்பான பராமரிப்பு நிலையங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளார்கள் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

நிவாரண உதவிகளுக்காக, வடக்கு கிழக்கில் இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.