India

சூறாவளி நிவர் | தமிழ்நாட்டில் தரையிறங்கும் இந்தி!


கடந்த சில மணி நேரங்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரபிரதேச மாநிலங்களைச் சுழற்றியடித்துக்கொண்டிருக்கும் சூறாவளி நிவர் தன்னோடு இந்தியையும் சேர்த்து தரையிறக்கி வருகிறது.

இந்திய காலநிலைத் திணைக்களத்தால் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் இதுவரையில் ஆங்கிலத்தில் தான் இருந்து வந்தன. ஆனால் சூறாவளி நிவர் பற்றிய எச்சரிக்கைகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே ருவீட் மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இது மீண்டுமொரு இந்தி எதிர்ப்பு பேரலையை ருவிட்டர் வெளியில் உருவாக்கி விட்டிருக்கிறது.

இந்தியில் வெளியிடப்படும் சூறாவளி நிலவரங்கள் பற்ரிய ருவீட் செய்திகளுக்கு எதிர்ராக #இந்தியைநிறுத்துங்கள் என்ற அடையாளத்துடன் பலர் ருவீட்களைச் செய்துவருகின்றனர். சிலர், சூறாவளி நிவர் உத்தரப் பிரதேசம், பீஹார் மாநிலங்களுக்கு நகர்ந்துவிட்டது என நையாண்டித் தனமாக ருவீட் செய்து வருகிறார்கள்.

இவ்வருட ஆரம்பத்தில் இந்திய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தென் மாநிலங்கள் பலவும் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. இக் கொள்கையில், ஒவ்வொரு மாநிலமும் இந்தி, ஆங்கிலத்துடன் பிரதேச மொழி ஒன்றையும் கற்பிக்க வேண்டுமெனச் ‘சிபார்சு’ செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்படப் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். தற்போது தமிழ்நாட்டில் கல்வி தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.



நிவர் நிலவரம்

இறுதியாகக் கிடைத்த செய்திகளின்படி, சூறாவளி நிவர் தனது பலத்தை இழந்து தாளமுக்கமாக மாறியுள்ளதெனவும், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தொடர்ந்து அடைமழை பெய்யலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நிவரினால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும், நிவரை எதிர்பார்த்து பல பாதுகாப்புத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் இழப்புக்கள் குறைவாக இருக்கின்றன என நம்பப்படுகிறது. 1486 தற்காலிக நிவாரண முகாம்களில் ஏறத்தாழ 1.25 இலட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அவசரகால சேவைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.