Spread the love

சூர்யாவை மாட்டிய 'சூரரைப் போற்று' - பொலிஸ் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 1

விரைவில் வெளிவரவிருக்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று‘ திரைப் படத்தைத் தடை செய்யும்படி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரால், 6 மாதங்களுக்கு முன்னர் பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக, நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு பொல்சாருக்கு, இன்று (புதன்), சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுதா கொங்காரவின் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் வரும் ‘மண்ணுருண்ட மேல‘ பாட்டில் இரண்டு வரிகள் அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளன எனவும் இதனால் இரண்டு சாதிப் பிரிவினரிடையே மோதல் உருவாகும் அபாயமுண்டென்றும் அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

6 மாதங்களுக்குப் பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமையால், சென்ற வாரம் கார்த்திக் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இன்று இவ் வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், சட்டத்தின் பிரகாரம் இம் முறையீட்டின் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு பொலிஸ் துறையைப் பணித்துள்ளார்.

மண்ணுருண்ட மேல’ பாடலில் வரும் “கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா / அந்த மேல்சாதிக் காரனுக்கு ரெண்டு கொம்பிருந்தா காட்டுங்கையா” என்னும் வரிகள் சாதி மோதல்களை ஏற்படுத்தலாம் என்பதே கார்த்திக்கின் முறையீட்டுக்கு காரணம்.



இப் பாடல் வரிகள் தாழ்த்தப்பட்ட / உயர் சாதிகளுக்கிடையில் நிலவும் அமைதியைக் குழப்பும் எனவும் அவ் வரிகளை நீக்கும்படியும் கோரி கார்த்திக் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். இக் காரணங்களுக்காக, தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்கள் முடியும் வரை இப் படம் வெளியிடுவதைத் தடை செய்யும்படியும் கார்த்திக் கோரியிருந்தார்.

சூர்யாவும் அபர்ணா பாலமுரளியும் இணைந்து நடிக்கும் ‘சூரரைப் போற்று‘ அமசோன் பிறைம் வழியாக அக்டோபர் 30 அன்று வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email