Spread the love

சூரிய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சூரரைப் போற்று’ அமசோன் ‘ஒளியாறு’ வழியாக (streaming இற்கு நான் வைத்த பெயர்) ஓடத் தொடங்கிவிட்டது. விரும்பியவர் அள்ளிப் பருகலாம்.

சூர்யாவின் 'சூரரைப் போற்று' - விமர்சனம் 1
கப்டன் கோபிநாத்தின் நாவல்

கதை கப்டன் கோபிநாத்தின் Simply Fly நாவலைத் தழுவியது. எத்தனை தோல்விகள் வந்தாலும் கனவும் முயற்சியும் இறுதியில் வெற்றியைத் தருமென்ற கோபிநாத்தின் உண்மைக் கதையைத் திரைக்கு மாற்றித் தந்திருக்கிறார் இயக்குனர் கொங்கரா.

தான் சிறுவனாக இருந்தபோது தெருவோர விளம்பரப் பதாகையில் தலையில்லாத சுப்பர்மான் பின்னால் இருந்து தலையைக் காட்டிப் படமெடுத்து மகிழும்போது எழுந்த, ‘எவருக்கும் பறப்பதற்கு முடியும்’ என்ற உன்னதமான அந்த ஊக்கத்தையும், கனவையும் தனக்குள் விதைத்த ‘எயர் டெக்கான்’ விளம்பரத்தை மீண்டும் நினைவுகூரும் கப்டன் கோபிநாத்தின் ‘யான் பெற்ற இன்பத்தை’, ‘சூரரைப் போற்று’ இவ் வையகத்தின் முன் காட்சிப்படுத்துகிறது.

இப் படத்தில் நெடுமாறனாக (மாறா) வரும் சூர்யா பல பாத்திரங்களுக்குள் புகுந்து வருகிறார். கோபம், காதல், குழப்பம், சாபம் எனப் பல அவதாரங்களினூடு அவர் இலகுவாகப் புகுந்து விளையாடுகிறார். தமிழ்ச் சினிமாவின் இயல்பான கலாச்சார வார்ப்புகளை (stereotypes) இப் படம் தகர்த்தெறிகிறது – ஒரு வகையில் Me Too வின் பாதிப்பு.படத்தின் சில குறிப்பிடத்தக்க தருணங்கள்

மாறாவின் (சூர்யா) மனைவியாக வரும் பொம்மி (அபர்ணா பாலமுரளி) தனக்கென ஒரு வியாபாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரமான பெண். அவரது வியாபாரத்தைப் பற்றி மாறா குறைபடச் சொல்லும்போது பொம்மி அதற்குத் தெரிவிக்கும் எதிர்வினை சாதாரண தமிழ் கலாச்சார வார்ப்பைத் தாண்டிப் போகிறது. பொம்மி தனக்கும் ஒரு ‘அடையாளமுண்டு’ என்று தன் இடத்தை உறுதியாகத் தெரியப்படுத்துகிறார். இத் தருணத்தில் சூர்யாவை ஒரு ‘அந்தக் காலத்துக் கதாநாயகனாகப்’ பார்க்க முடியாது. பொம்மிக்கு நாலு சாத்து சாத்திவிட்டு ‘உன்னை இருக்கிற இடத்தில் வைப்பேன்’ என்று அவர் கர்ச்சிக்கவில்லை. அடங்கிப் போய் மனைவியின் உதவியை நாடும் ஒருவராக மாறுகிறார்.

காதல் காட்சிகளிலும் ‘அத்தான் / கண்ணே’/ ‘வாடா / போடா’ ரகமேதும் இல்லாது சாதாரண -முதலிரவுக்கு அடுத்தநாள் ரக- இயல்பான limited காதலாக காட்டப்படுகிறது.

ஊர்வசி (yes அவர் தான்!) இப் படத்தில் மாறாவின் தாயார் பேச்சியாக வருகிறார். முழுக் கிராமமுமே பின்னால் நிற்க அவர் மகன் மாறாவிடம் ‘முயற்சியில் வெற்றி காண வேண்டும்’ எனக் கேட்கும்போது மனங்கள் சிதறுகின்றன.

இந்தியாவின் அழிக்க முடியாத வைரஸான ஊழலையும், சாதிப் பிரச்சினையையும் ஒழிக்கும் போதனையோடு ஆயிரமாயிரம் படங்கள் வந்துவிட்டன. இதையும் அப்பட்டியலில் சேர்க்கலாம்.

நீண்ட காலத்திற்குப் பிறகு சூரியாவைத் தூக்கி நிமிர்த்தக்கூடிய ஒரு படம்.

‘நன்றி வணக்கம்’ சொல்லவேண்டிய படம் இதுவல்ல. பாருங்கள்!

-மாயமான்

Print Friendly, PDF & Email