CultureWorld

சூடான் | இஸ்லாமிய சட்டங்கள் நீக்கப்படுகின்றன; புரட்சியாளர் கொண்டாட்டம்


சூடான், ஒமார் அல்-பஷிரின் 30 வருட ஆட்சி ஒழிக்கப்பட்டதோடு பல அரசியல், கலாச்சாரச் சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ‘காஃப்டா’ எனப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைவு உட்படப் பல கடுமையான இஸ்லாமிய நடைமுறைகள் தடைசெய்யப்படுமென இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

இந்த இடைக்கால அரசு அறிவித்த சீர்திருத்தங்களில் மதநம்பிக்கையைக் கைவிடுவது இனிமேல் குற்றமாகாது எனவும், பெண் பிறப்புறுப்புச் சிதைவு தடை செய்யப்படுவது, பெண்கள் பயணம் செய்வதற்கு பயண உத்தரவு எடுப்பது போன்றன இனிமேல் தேவையில்லை எனப் பல அடங்கியுள்ளன.

கடந்த 30 வருடங்களாக ஆட்சியிலிருந்த முன்னாள் அதிபர் ஒமார் அல்-பஷீரின் ஆட்சி 2019 இல் முடிவுக்கு வந்ததையடுத்து பெண்களும், சிறுபான்மையினரும் அனுபவித்து வந்த கடுமையான இஸ்லாமியச் சட்டங்கள் தளர்த்தப்பட்டுச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச் சீர்திருத்தங்கள் சூடான், பெண்களுக்கும் சிறுபான்மை இனங்களுக்குமெதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட வன்முறை முற்றாக ஒழிக்கப்படுவதற்கான ஒரு முக்கிய நகர்வு என றெட்றெஸ் எனப்படும் துன்புறுத்துக்கு எதிரான அமைப்பு, நீதி மற்றும் சமாதானக் கற்கைகளுக்கான ஆபிரிக்க மையம் ஆகியன தெரிவித்துள்ளன.

“நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட துன்புறுத்தல் முற்றாக ஒழிக்கப்பட்டு, நீதியும் இழப்பீடுகளும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையும்வரை, புதிய உள்ளூர்ச் சட்டங்களையும், கொள்கை சீர்திருத்தங்களையும் அரசாங்கம் உருவாக்கவேண்டும்” என றெட்றெஸ் அமைப்பின் சர்வதேச சட்ட ஆலோசகர் சார்ளி லூடன் தெரிவித்துள்ளார்.

மதத் துறப்பு என்பது சூடானில் இதுவரை மரணதண்டனைக்குரிய குற்றமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பல பிறமதக்காரர் இதனால் பாதிக்கப்பட்டு வந்தனர். இச் சட்டம் இன்மேல் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது. அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் பிரத்தியேக இடங்களில் மது அருந்துவதும் இனிமேல் அனுமதிக்கப்படுமென நீதி அமைச்சர் நஸ்றெடீன் அப்டுல்பரி கடந்த வாரம் அறிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான சுலோகங்களில் ஒன்றான ‘சுதந்திரத்தை’ அடைவதற்கான முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்றாக இச் சீர்திருத்தங்கள் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.



மெரியம் இப்ராஹிம் என்பவர் தனது முஸ்லிம் தந்தையின் மதத்தைப் பின்பற்றாது தாயின் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினார் என்பதற்காக அவருக்கு சூடான், மதத் துறப்புச் சட்டத்தின் கீழ், மரணதண்டனை வழங்கியிருந்தது. சர்வதேச எதிர்ப்பின் காரணமாக 2018 இல் இது கைவிடப்பட்டிருந்தது.

சூடானின் பொது ஒழுங்குச் சட்டத்தின்படி, பெண்கள் பொது இடங்களில் நீளக்காற்சட்டைகளை அணிந்தால் அவர்களுக்கு 40 கசையடிகள் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சீர்திருத்தங்களின் முதற்படியாக இச் சட்டம் 2019 இல் ஒழிக்கப்பட்டது. இச் சட்டத்தினால், 2016 இல் மட்டும், 45,000 பெண்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இச் சீர்திருத்தங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுமென்பதில் சில அமைப்புகள் சந்தேகம் தெரிவிக்கின்றன. உதாரணமாக பெண்கள் பாலுறுப்புச் சிதைவு தொடர்பாக, சமூக எதிர்ப்பு பலமாக இருக்கும் எனவும் மேலும் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதாலேயே இது சாத்தியமாகும் என சில செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.