சூடானின் முன்னாள் சர்வாதிகாரி ஒமார் அல்-பஷீர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்?

Spread the love

பெப்ரவரி 11, 2020

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றங்களைப் புரிந்தாரெனக் குற்றம் சாட்டப்பட்டு, சூடான் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஒமார் அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப தற்போதய அரசு யோசனை செய்வதாக அறியப்படுகிறது.

ஒமார் அல்-பஷீரைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்போவதில்லை என மறுப்புத் தெரிவித்து வந்த தற்போதய ஆட்சியாளர் தற்போது அதற்கு இணங்கியுள்ளது அவர்கள் நிலையில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இருப்பினும், 76 வயதாகும் அல்-பஷீரை ஹேக் நீதிமன்றத்துக்குக் கொண்டுவருவதில் பல சிக்கல்களை அந்நாடு எதிர்கொள்ளலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக சூடானின் பலமிக்க இராணுவம் இதற்கு இணங்கமாட்டாது என எதிர்பார்க்கப்படுகிரது.

பஷீரின் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட பல ஒடுக்குமுறைகளுக்கெதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு வழங்கிவந்த ஆதரவை இராணுவம் மீளப்பெற்றிருந்தது மட்டுமல்லாது, ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் பஷீரைச் சிறைக்கும் அது அனுப்பியது. டிசம்பர் மாதம் அவரை இரண்டு வருட புனர்வாழ்வுச் சிறைக்கு அனுப்புவதென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.


கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து, ஜனநாயக செயற்பாட்டாளர்கள், மூத்த இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய, 11 உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திர ஆணையம் ஒன்றினால் சூடான் ஆளப்பட்டு வருகிறது. இந்த இடைக்கால ஆட்சி மூன்று வருடங்களுக்கு நடைபெற்று அதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்படுமென இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதே வேளை, டார்ஃபுர் இலுள்ள விடுதலை அமைப்புக்களுக்கும், சூடானுக்கும் இடையில், தென் சூடான் தலைநகரான ஜூபாவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின்போது பஷீர் உள்ளிட்ட சிலரை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போதய சூடானின் ஆளும் ஆணயமும் அதற்கு இணங்கியிருந்தது. இருப்பினும் பஷீரின் பெயர் அப் பேச்சுவார்த்தையின்போது எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

பஷீர் தன் மீதான குற்றங்களை மறுப்பதோடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு ‘அரசியல் நீதிமன்றமே’ தவிர சட்ட நீதிமன்றமல்ல எனவும், தன் குற்றங்கள் எதுவாயிருந்தாலும் சூடானின் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படவேண்டுமெனவும் அவரது சட்டப் பிரதிநிதி மூலம் தெரிவித்துள்ளார்.

2003 இலிருந்து சென்ற வருடம் வரையில், டார்ஃபுர் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களது கொலைகளுக்கும், அங்க இழப்புகளுக்கும், சித்திரவதைகளுக்கும் பஷீர் காரணமாகவிருந்தாரென்பதற்காக அவர்மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

ஏறத்தாழ, 200,000 இற்கும் 400,000 இற்குமிடையிலான மக்கள் கொல்லப்பட்டும், 2.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளதாக ஐ.நா. மதிப்பிடுகிறது. பஷீரினால் உருவாக்கப்பட்ட துணைப்படையினால் தான் இக்குற்றங்கள் இழைக்கப்பட்டதென அது கருதுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  தென்னாபிரிக்கா விஞ்ஞானி கீதா ராம்ஜி கொரோனாவைரசுக்குப் பலி

Leave a Reply

>/center>