LIFE

சுவீடன்: பாடசாலைகளில் கணனிகளை அகற்றிவிட்டு மீண்டும் புத்தகங்கள்!

15 வருடங்களுக்கு முன்னர் சுவீடனில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கணனிப் புரட்சி’ யின் காரணமாக பாடசாலை மாண்வர்கள் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக கணனிகளைப் பாவிக்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, 15 வருடங்களின் பின் மாணவர்களிடமிருந்து கணனிகளைப் பிடுங்கிவிட்டு மீண்டும் புத்தகங்களைத் திணிக்கும் திட்டம் சுமார் 104 மில்லியன் யூரோ செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காரணம்? மாணவர்களது கவனக் குறைவு, கிரகிப்பு குறைவு அடிப்படைத் திறன்கள் அருகிப்போவது போன்ற காரணங்களை அவதானித்த கல்விச் சமூகம் மீண்டும் புத்தங்களுக்குத் திரும்பும்படி அரசுக்கு அறிவுறுத்தியமை தான் இத் திடீர் அறிவிப்பு.


2009 இல் சுவீடன் பாடசாலைகளில் பாடப் புத்தககங்களை எடுத்துவிட்டு கணனிகளைப் பாவிக்க அனுமதித்ததன் மூலம் டிஜிட்டல் புரட்சியை ஆரம்பித்திருந்தது. கற்றலை நவீனப்படுத்துவதன் மூலம் எதிர்கால டிஜிட்டல் உலகத்திற்கு மாணவர்களைத் தயாரிப்பதும் அதே வேளை கற்கையில் மாணவர்களை ஆர்வத்தோடு ஈடுபடுத்த முயல்வதுமே இந்நடவடிக்கைக்கான காரணியென அப்போது கூறப்பட்டது. இதற்காக Tablets, Laptops மற்றும் Multimedia உபகரணங்களை வழங்கி தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்கு வசதிகளைச் செய்துகொடுத்தது அரசு. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல இந்நம்பிக்கை தகர்க்கப்பட்டு மாணவர்களது பெறுபேறுகளில் பின்னடைவு காண ஆரம்பித்தது. மாணவர்களிடையேயான நேருக்கு நேரான ஊடாடல்கள் அருகிப்போய் சமூக கூட்டு வாழ்க்கை பற்றி அக்கறை கொள்ளாது கணனிகளுடனேயே பெரும்பாலானோர் மணிக்கணக்காக காலத்தைக் கழிப்பது கற்றலுக்கு குந்தகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக இந்த ஆண்டிற்குள் (2025), சுமார் 104 மில்லியன் யூரோ செலவில் மாணவ்ரகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கணனித் தொழில்நுட்பத்தை முற்றாக ஒழித்து விடுவது அரசின் திட்டமில்லை எனவும் மாணவர்கள் தமது பாடசாலைக் கல்விக் காலத்தில் சம்நிலையைப் பேண வேண்டுமென்பதே தமது நோக்கமெனவும் அரசு தெரிவித்துள்ளது.

சுவீடன் நாட்டின் இவ்வதிரடி நடவடிக்கை உலகம் முழுவதும் மாணவர்களது போதானா வடிவங்கள் குறித்து உரையாடல்களை முடுக்கி விட்டுள்ளது. கணனிகள் மாணவர்களது நன்மையைப் பாதிக்கின்றனவா அல்லது அதை வளர்க்க உதவுகின்றதா?; டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய கற்கை முறைகளுக்குமிடையே சமநிலை பேணப்படுகின்றதா? என்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்க உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

சுவீடந் மீளறிமுகப்படுத்தும் பாரம்பரியக் கற்கை முறை நன்மையையே பயிர்க்கும் என எதிர்பார்க்கலாம். (Image Credit: rut-miit-eWnSMfxvpF4-unsplash)