‘சுவாமி’ நித்தியானந்தா இலங்கையில் புகலிடக் கோரிக்கை!
மருத்துவ காரணங்களுக்காக தஞ்சம் கோருகிறார்
கடுமையாகச் சுகவீனமுற்றிருக்கும் சுவாமி நித்தியாநந்தா இலங்கையில் சிகிச்சை பெறுவதற்காக அங்கு தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 7 ஆம் திகதி இக் கோரிக்கையை முன்வைத்த கடிதமொன்றை நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துல்ளதாகத் தெரியவருகிறது.
கழுத்தில் ஏற்பட்ட கழலையை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது நடைபெற்ற தவறின் காரணமாக கழுத்திலுள்ள நரம்பு பாதிக்கப்பட்டதால் அவர் கழுத்துக்குக் கீழே இயக்கமற்று இருப்பதாகவும் இதற்குச் சிகிச்சையளிக்கும் வசதிகள் அவரது கைலாசா நாட்டில் இல்லை என்பதால் வெளிநாடுகளில் சிகிச்சை பெற முயற்சித்ததாகவும் முன்பு செய்திகள் வெளிவந்திருந்தன. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரமுடியுமெனக்கூறி ஒரு தமிழ்ப்பெண்ணொருவர் அமெரிக்காவிலுள்ள தமிழ் மருத்துவர்களை அணுகியிருந்தார் என்ற செய்தியும் முன்னர் கசிந்திருந்தது.
இம் முயற்சிகள் பயனளிக்காத நிலையில் இலங்கையும் டாலர் பற்றாக்குறைக்குச் சிகிச்சை தேடிக்கொண்டிருந்த வேளை நித்தியானந்தா இம்முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதே வேளை இந்தியாவில் நித்தியானந்தா மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதால் பல வெளிநாடுகள் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்படத் தயங்கியமையும் அவர் இலங்கையைத் தேர்வதற்குக் காரணமாக இருக்கலாம். மருத்துவ காரணங்களுக்காக சாதாரண விசாவில் அவர் இலங்கைக்கு வந்தால் அவரை நாடுகடத்தும்படி இந்தியா கோர முடியும். அதே வேளை அவர் உயிருக்கு அஞ்சி ‘மருத்துவ அடைக்கலம்’ கோரினால் ஜெனிவா விதிகளின்படி இலங்கை அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த முடியாது. நித்தியானந்தாவிடம் பல கோடி டாலர்கள் கைவசம் இருப்பதனால் அவர் தனது பணத்தை இலங்கையில் முதலிட விரும்புவதாக அக் கட்சிதத்தில் கேட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
பாலியல் காரணங்களுக்காகப் பெண்களைக் கடத்திய குற்றத்துக்காக நவம்பர் 2018 இல் குஜராத் பொலிஸ் நித்தியானந்தாவின் இரண்டு சீடர்களைக் கைதுசெய்திருந்தது. குழந்தைகளது படங்களைப் பாவித்து அவர் பணம் திரட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது குஜராத் பொலிஸ் குற்றம் சாட்டியிருந்தது. அதே வேளை கர்நாடகா பொலிசாரும் நித்தியானந்தாஅ மீது பாலியல் குற்றச்சாட்டொன்றைப் பதிவு செய்துள்ளது.