சுவாமி நித்தியானந்தாவுக்கு என்ன நடந்தது?
கடந்த சில மாதங்களாக சுவாமி நித்தியானந்தாவின் இருப்பு தொடர்பாகப் பல வதந்திகள் எழுந்தவண்ணமுள்ளன. பெண் கடத்தல், பாலியல் சேட்டைகள் தொடர்பாக இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் சமீபமாக ஒரு தீவொன்றை வாங்கி அதற்குக் கைலாசா எனப் பெயரிட்டு அங்கு தனது பக்தகோடிகளுடன் இனிதே வாழ்ந்துவருவதாகப் பல செய்திகள் வெளிவந்தன.
ஆனால் தற்போது அவர் மரணமடைந்துவிட்டதாக இன்னுமொரு செய்தி வெளிவந்திருந்ததாயினும் அவர் அதை மறுத்து தான் மர்மமான வியாதியொன்றினாற் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் அதை இனம்கண்டு சிகிச்சையளிக்கப் பல மருத்துவர்கள் முயன்றுவருவதாகவும் ஒரு காணொளி மூலம் தனது பக்தர்களுக்குச் செய்தியொன்றை அனுப்பியதாகக் கூறப்பட்டது.
இதன் பிறகு எமக்குக் கிடைத்த இன்னுமொரு செய்தியின்படி அவரது மர்மமான நோய்க்குக் காரணம் அவரது கழுத்தின் பின்பகுதியில் வளர்ந்த ஒரு திரட்சி எனக் கண்டுபிடிக்கப்பட்டதென்றும் அதை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின்போது ஏற்பட்ட தவறு காரணமாக கழுத்திற்குக் கீழான அவரது உடல் இயங்காநிலைக்குச் சென்றுவிட்டதெனவும் அறியப்படுகிறது.