சுவாசத்தின் மூலம் உள்ளிழுக்கக்கூடிய கோவிட் தடுப்பு மருந்து, கனடாவில் பரீட்சிக்கப்படுகிறது

தற்போது முதலாம் கட்ட மனிதப் பரிசோதனையில் (Phase1 Trial)

நீண்ட காலமாக உலகத்தை வருத்தி வரும் கோவிட் பெருந்தொற்றை நிரந்தரமாக ஒழிப்பதற்கென உலகில் பல விஞ்ஞானிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் பல வழிகளிலும் முயன்று வருகின்றன. அவற்றில் ஒரு வழி, மூக்கு / வாய் சுவாசக் குழாயினால் உள்ளிழுக்கக்கூடிய (inhale) தடுப்பு மருந்து. இப்படியான ஒரு தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் கனடிய பல்கலைக்கழகமான மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஓரளவு வெற்றியைக் கண்டிருக்கிறார்கள்.

விலங்குகளில் ஏற்கெனவே பரீட்சிக்கப்பட்டு அதன் செயற்படு திறனை அவதானித்த பின்னர் இவ் விஞ்ஞானிகள் குழு அடுத்த கட்டமான மனிதப் பரிசோதனைகளுக்குத் தயாராகி வருகின்றனர். சகல விதமான கோவிட் வைரஸ் திரிபுகளையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை இத் தடுப்பு மருந்துக்கு உண்டு என இவ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலின் சுவாச உறுப்புகளைத் தாக்கும் இன்னுமொரு மிகக் கொடிய நோயான காச நோய்க்கான சுவாச மூலம் உள்ளிழுக்ககூடிய தடுப்பு மருந்தை இவ் விஞ்ஞானிகள் குழு ஏற்கெனவே தயாரித்திருந்த அனுபவம் கோவிட் தடுப்பு மருந்தையும் இதே வழியில் தயாரிக்க முடியுமென்ற ஊக்கத்தைக் கொடுத்தது என்கிறார் இவ் விஞ்ஞானிகளில் ஒருவரான ஃபையோனா இஸ்மாயில்.

கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட உடனடி ஆபத்தைக் கடக்க ஃபைசர், மொடேர்னா, அஸ்ட்றாசெனிக்கா போன்ற தடுப்பு மருந்துகள் உதவி செய்திருந்தனவாயினும் அவை உலகின் சகல தரப்பு மக்களிலும் எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. அதே வேளை இவ் வைரஸின் புதிய திரிபுகளுக்கு எதிராக இம் மருந்துகள் எதிர்பார்த்த அளவுக்குச் செயற்திறனையும் கொண்டிருக்கவில்லை. மக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கும் சுவாசவழித் தடுப்பு மருந்து நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதோடு, புதிய திரிபுகளையும் தடுக்ககூடிய வல்லமை கொண்டதாக இருக்கும் என இஸ்மாயில் தெரிவிக்கிறார்.

இவ் விஞ்ஞானிகள் குழுவில் நோயறி நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நிர்ப்பீடன நிபுணர்கள், காற்றில் மிதக்கும் துணிக்கைகளை ஆராயும் நிபுணர்கள் எனப் பலதரப்பட்ட நிபுணத்துவம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் எனவும், ஏற்கெனவே காச நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த அனுபவம் இருந்தமையால் அதே அணுகுமுறையை கோவிட் தொற்றுக்கு ஏற்றவாறு தாம் மாற்றியமைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவிக்கிறார். சுவாசப்பை சம்பந்தமான எநத நோய்களையும் முறியடிக்ககூடிய மருந்துகளைத் தயாரிக்கக்கூடிய வல்லமை தமக்கு உண்டு என அவர் நம்புவதாக மேலும் தெரிவித்தார்.

ஒரு தடுப்பு மருந்தின் பிரயோகத்தின்போது அது ஒருவரது உடலின் சுயமான நோயெதிர்ப்புத் திறனை அதிகரிப்பதோடு அக் குறிப்பிட்ட நோய்க்கிருமியின் வருகையை எதிர்பார்த்து உடலைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு தடுப்பு மருந்தின் தயாரிப்பின்போதும் அதன் செயற்திறனை மட்டுமல்ல அது எந்தளவுக்குப் பாதுகாப்பானது எனபதையும் விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும். Phase 1 என்று அழைக்கப்படும் இந்த முதற்கட்டப் பரிசோதனையை மக்மாஸ்டர் விஞ்ஞானிகள் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள். கோவிட் வைரஸைப் பொறுத்தவரையில் அதன் கூர்ப் புரதத்தை (spike protein) மட்டுமல்ல வைரஸின் உடலினுள் இருக்கும் புரதத்தையும் இனம்கண்டு தாக்கியழிக்கும் திறனை இத் தடுப்பு மருந்து கொண்டிருக்கும் எனத் தான் நம்புவதாக இஸ்மாயில் தெரிவிக்கிறார். தற்போதுள்ள தடுப்பு மருந்துகளின் பயனாக, கோவிட் வைரஸின் கூர்ப் புரதங்களின் வடிவமைப்பை மட்டுமே உடலின் நோயெதிர்ப்பு பொறிமுறை ஞாபகத்தில் வைத்திருக்கிறது. இதனால் வைரஸ் இப் புரதத்தின் வடிவமைப்பை மாற்றிக்கொண்டு புதிய திரிபாக உடலுள் நுழையும்போது நோயெதிர்ப்பு பொறிமுறையால் இப் புதிய திரிபுகளை இனம்காண முடியாமல் போய்விடுகிறது. இக் காரணத்தால் தற்போதுள்ள தடுப்பு மருந்துகள் புதிய திரிபுகளுக்கு எதிராகச் சிறப்பாகச் செயற்படுவதில்லை. இதைத் தவிர்ப்பதற்காக வைரஸின் உடலினுள் இருக்கும் புரதத்தையும் அறிந்துகொள்ளும் நடைமுறையை இப் புதிய தடுப்பு மருந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். வைரஸின் உடலினுள் இருக்கும் புரதம் தன் வடிவத்தை மாற்றிகொள்வதில்லை என்பதனால் அப் புரதத்தைக் குறிவைத்து இப் புதிய தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் எவ்வகையான திரிபு உடலில் நுழைந்தாலும் அதை உடலின் நோயெதிர்ப்புப் பொறிமுறை இனம்கண்டு விடும்.

அது மட்டுமல்லாது தற்போது ஊசிகள் மூலம் எடுக்கும் தடுப்பு மருந்துகளைப் போலல்லாது சுவாசக் குழாயினூடு எடுக்கும் மருந்தின் அளவு ஒப்பீட்டளவில் அதன் 1% த்தின் அளவிலேயே இருக்கும். இதனால் பல இலட்சக்கணக்கானவர்களுக்கு இத் தடுப்பு மருந்தைப் பாவிக்கலாம்.

பொதுவாக ஒரு தடுப்பு மருந்தின் பாவனை அளவைத் தீர்மானிப்பது அது எப்படியான எதிர்ப்புத் திறனை எமது உடலில் உருவாக்குகிறது என்பதைப் பொறுத்தே. பல தடவைகளில் தேவைக்கு அதிகமாக உருவாக்கப்படும் எதிர்ப்புத் திறன் நமது சொந்த உடலையே தாக்கியழிக்கத் தொடங்கிவிடும் (autoimmune decease ). அதே வேளை குறைந்த எதிர்ப்புத்திறனை உருவாக்கினாலும் நோய்க்கிருமி அதற்குப் பழகிப்போய்விடும் ஆபத்தும் உண்டு. இக் காரணங்களுக்காக சரியான மருந்தளவைத் தீர்மானிக்க வேண்டும். இதற்காகவே Phase 1 போன்ற மனிதப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஏனைய தடுப்பு மருந்துகளைப் போலன்றி, இத் தடுப்பு மருந்து சுவாசக் குழாய்களின் சளிப்படலத்தில் தங்கி விடுவதானாலும், அதுவே வைரஸின் ஆரம்ப தங்குமிடமாக இருப்பதனாலும் மருந்தின் செயற்பாடு உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் சளி சுரம் போன்ற பக்டீரியாவினால் உருவாகும் நோய்களுக்கு எதிராகவும் இத் தடுப்பு மருந்து பலன் தருகிறது. (அகத்தியன்)