India

சுயாட்சியைத் தாருங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை மீளுருவாக்காதீர்கள் – மத்திய அரசுக்கு ஏ.ராஜா கோரிக்கை

“தனித் தமிழ் நாடு கோரிக்கையை நோக்கி எங்களைத் தள்ளாதீர்கள்” என தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ராஜா, இந்திய மத்திய அரசுக்கு எச்சரித்திருக்கிறார். ஜூலை 03, ஞாயிறன்று நாமக்கலில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுவந்த ‘தனித் திராவிட நாடு’ கோரிக்கை 1962 இல் கைவிடப்பட்டது. தனிநாடு கோருவது சட்ட விரோதமென அப்போது ஆட்சியிலிருந்த ஜவஹர்லால் நேரு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தனி நாட்டுக் கோரிக்கை கைவிடப்படிருந்தது.

சமஷ்டி ஆட்சிக்கான கோரிக்கையைத் தி.மு.க. தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த போதிலும், ராஜாவின் இக் கோரிக்கை தனித் திராவிட நாடு விடயத்தை மீண்டும் உசுப்பேத்தி விட்டிருக்கிறது. “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற தலைப்பில் நாமக்கல் தி.மு.க. மாவட்டப் பிரதிநிதிகளினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் பேசும்போதே ஏ.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். கலைஞர் கருணாநிதியின் பொன் வாக்கியமாகக் கருதப்படும் மேற்கூறப்படும் தலைப்பு இக்கூட்டத்தின் மூலம் மீளவும் புத்தாக்கம் செய்யப்படுகிறது எனக் கருதப்படுகிறது.

“”இந்தியாவின் பொது மொழியாக இந்தி இருந்தால்தான் நாட்டை ஒன்றிணைக்க முடியும்” எனச் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். ஒரு மொழியால் நாட்டை எப்படி ஒன்றிணைக்க முடியும்?. பாகிஸ்தான் பிறந்ததும் அந் நாட்டின் தந்தை என வர்ணிக்கப்படும் ஜின்னா கிழக்குப் பாகிஸ்தானின் தலைநகர் டாக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் உருது மொழியில் பேச ஆரம்பித்தபோது ஒரு சிறுவன் எழுந்து நின்று “எஙக்ளுக்கு வங்காள மொழி மட்டுமே தெரியும், உருது அல்ல” எனக் கூறினான். ஆனாலும் ஜின்னா தொடர்ந்தும் உருது மொழியிலேயே பேசினார். அதுவே இறுதியாக நாட்டைப் பிரித்தது” என ராஜா தஹ்னது பேச்சின்போது தெரிவித்தார்.

“இந்தியா ஒரு ‘மாநிலங்களின் கூட்டு’ என வரையறைப்படுத்துவதே மிகவும் கஷ்டமாக இருந்தது. அவ் வசனத்தை ஏற்றுக்கொள்ளவே காங்கிரஸ் மறுத்துவிட்டது. எனது விருப்பத்தையும் மீறி ‘பாரதம்’ என்ற சொல்லை அரசியலமைப்புக்குள் வலுக் கட்டாயமாகப் புகுத்தி விட்டார்கள்” என டாக்டர் அம்பேத்கார் கூறியிருந்தார் என ராஜா மேலும் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கோவிலில் ராஜ ராஜ சோழனின் சிலையை நிறுவுவதற்கு கலஞர் முயற்சித்தபோது அது மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரத்துக்குட்பட்டது எனக்கூறி மத்திய அரசு அனுமதியை மறுத்துவிட்டது.

“இந்தியாவின் அரசியலமைப்பு மூன்று அதிகாரப் பட்டியல்களை வரையறுக்கிறது – மத்தி, மாநிலம் மற்றும் சமாந்தரமான அதிகாரங்கள். இவற்றில் மத்திக்கே அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு குறைந்தளவு அதிகாரங்கள் தானும் இல்லை. இவற்றைப் பற்றி நிறைய எழுதவும் பேசவும் பட்டுள்ளது. எனவே தனி நாட்டுக் கோரிக்கையை எம்மீது வலிந்து திணிக்காதீர்கள் என நாம் பிரதமரையும் உள்ளக அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறோம். “எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி இருக்கவேண்டுமென பிரதமர் மோடி கூறுகின்றார். மாநிலங்களிடையே ஒற்றுமை வேண்டுமென்றால் இந்தியைப் படியுங்கள் என்கிறார் உள்ளக அமைச்சர் அமித் ஷா. கட்சியின் ஆரம்பகர்த்தாவான பெரியார் இறக்கும்வரை தனிநாட்டையே கோரியவர். ஆனால் நாம், தி.மு.க.வினர், ஜனநாயகத்துக்காகவும், தேசிய ஒருமைப்பட்டுக்காகவும் இக் கோரிக்கையைப் புறந்தள்ளிவைத்துள்ளோம். எனவே நான் கூறுகின்றேன். எமது முதலமைச்சர் இதுவரை அண்ணாவின் பாதையில் செல்கிறார். எங்களைப் பெரியார் பாதைக்குள் தள்ளி விடாதீர். தனிநாட்டுக்கான கோரிக்கையை நோக்கி எங்களைத் தள்ளிவிடாதீர். எங்களுக்கான சுயாட்சியைத் தந்துவிடுங்கள்” என ராஜா அறைகூவல் விடடுத்தார்.

ஆனாலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாயினும்சரி, உள்ளூர் கட்சி அலுவலர்களாகவிருந்தாலுஞ்சரி தி.மு.க. அரசையோ அல்லது முதலமைச்சரையோ சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் பேசவேண்டாமெனவும் அப்படிப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப்டுமெனவும் முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். (தி நியூஸ் மினிட்)