சுமந்திரன் மீது கொலை முயற்சி செய்தவரும் சகாக்களும் சட்டமா அதிபரினால் விடுதலை

யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. எம்.ஏ.சுமந்திரன மீது கொலை முயற்சி மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2019 ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்த பிரபல பாதாள உலக சண்டியரான கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் நேற்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரட்ண மற்றும் அவரது 10 சகாக்கள் மீது வழக்குத் தொடர்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லையென கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து சட்டமா அதிபரின் பணிப்பில் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் எனவும், சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்தினார்கள் எனவும் இவர்களோடு சேர்த்து மொத்தம் 15 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

இக் கொலை முயற்சியைத் தொடர்ந்து சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு பெப்ரவரி 21 அன்று, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் நீக்கப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து இப்போது இது நடைபெற்றுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்கள் இலங்கையில் அனுபவித்து வரும் குறைபாடுகளை உலகத்துக்கு அறிவிப்பதற்காக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற, பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை (P2P) என்ற பேரணியை ஒழுங்குசெய்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வீரசேகரா நீக்கியிருந்தார். இப் பேரணி நடைபெறுவதைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளையும் முறியடித்து பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்களிப்புடன் ஊர்வலம் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.

சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவருக்கு விசேட படையணியின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மார்ச் பேரணி யாழ்ப்பாணம் சென்றடைந்த கையோடு, வீரசேகரவின் பணிப்பின் பேரில் இப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டிருந்தது.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து சுமந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது, “(எனது) பாதுகாப்பை நீக்குவதற்கான சாத்தியமாக மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம். முதலாவது, எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது உண்மை ஆனால் நான் பேரணியில் பங்குபற்றியமையினால் எரிச்சலுற்ற அரசாங்கம் எனது பாதுகாப்பை நீக்கியுள்ளது; இரண்டாவது, எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கவேயில்லை, இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள்; மூன்றாவது, வஞ்சக நோக்கத்துடனானது, எனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கத்துடன் இருப்பவர்களுக்கு “நீங்கள் இப்போது உங்கள் முயற்சியை மேற்கொள்ளலாம்” என உற்சாகமளிப்பது. எனவே எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதஹ்ற்கு அரசாங்கமே பொறுப்பு எடுக்கவேண்டி வரும்” எனத் தெரிவித்திருந்தார்.

பா.உ. சுமந்திரன் மீது, 2017, 2019 இல், இரண்டு தடவைகள் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 2017 ல், சாவகச்சேரியில் வைத்து சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன என பயங்கரவாத விசாரணைப் பிரிவு அப்போது தெரிவித்திருந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கிளேமோர் குண்டுகளையும் குற்றவிசாரணைப் பிரிவு கைப்பற்றியிருந்தது. நான்கு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இது தொடர்பாகக் குற்றங்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தனர். 2016-2017 காலப்பகுதியில் சுமந்திரன் மீது நான்கு தடவைகள் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என அப்போது கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அவருக்கு விசேட பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பை வழங்கியிருந்தார்.

பின்னர், மார்ச் 2019 இல், விடுதலைப் புலிகளுடனும், பாதாள உலக சண்டியர்களுடனும் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 12 பேரைக் கொழும்பு குற்றப் பிரிவு கைதுசெய்து கொழும்பு தலைமை நீதிபதி லங்கா ஜயரட்ண முன்னிலையில் பாரப்படுத்தியிருந்தது. வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் பணிப்பின்பேரில் தமிழ் அரசியல்வாதி ஒருவரின்மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதெனக் குற்றஞ்சாட்டப்பட்டு இச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனரென் கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்திருந்தது. இதில் குறிப்பிடப்பட்ட தமிழ் அரசியல்வாதி யாரென அப்போது அறிவிக்கப்படவில்லையெனினும், அது சுமந்திரனாக இருக்கலாமென அப்போது ஊகம் தெரிவிக்கப்பட்டது. இவ் விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் எல்லோரும் பாதாள உலகுடன் தொடர்புடையவர்கள்.

ஜெனிவாவில் நடைபெறவிருந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சுமந்திரன் நாட்டைவிட்டுப் புறப்படுவதற்கு முன்னர் அவரைக் கொலைசெய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாக அப்போது வெளிவந்த சிங்களத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக 2019 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பணிப்பின் பேரில் இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. (கொழும்பு ரெலிகிராஃப்)