News & AnalysisSri Lanka

சுமந்திரன் கைதுசெய்யப்படுவாரா? – தொடர்கிறது கோதாவின் பழிவாங்கல்கள்…

பதியுதீன் சகோதரர்கள் கைதுகளைத் தொடர்ந்து அரசாங்கத்தை விமர்சித்துவரும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர் விரைவில் கைதுசெய்யப்படலாமெனத் தென்னிலங்கை ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன. அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. சுமந்திரனும் ஒருவராக இருக்கலாமென ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தக்குதல்களுக்கும் கோதாபய ராஜபக்சவுக்கும் தொடர்பிருப்பதாக பாராளுமன்றத்தில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருந்த சமாகி ஜன பலவேகய பா.உ. ஹரின் பெர்ணாண்டோவைக் கைது செய்யும் முயற்சியில் அவருக்கு குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பாணை விடுத்திருந்ததும் அதை எதிர்பார்த்திருந்த அவர் ஏற்கெனவே மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக்கொண்டிருந்தார். இருப்பினும் அவர் எந்த நேரத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு 90 நாட்களுக்கு தடுத்துவைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று கடந்த சில நாட்களில் பாராளுமன்றத்தில், அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியிருந்த சமாகி ஜன பலவேகய பா.உ. மனுஷா நாணயக்கார, ஜேவி.பி. பா.உ. அனுரகுமார திசநாயக்கா மற்றும் த.தே.கூட்டமைப்பு பா.உ. எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாமென ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ ஊகம் தெரிவித்துள்ளது.

இதே வேளை, அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த ராஜிதஹ் சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, அசாத் சாலி ஆகியோர் ஏர்கெனெவே கைது செய்யபட்டு வழக்குப் பதிவிற்காகக் காத்திருக்கின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் ஹேஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்படுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களுக்கு 90 நாட்கள் பிணை அனுமதி மறுக்கப்படுவதற்கான அதிகாரத்தை அச்சட்டம் வழங்குகிறது.

இதே வேளை, தனது அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் மீதும் கோதாபய நடவடிக்கை எடுக்கலாமென எத்ரிபார்க்கப்படுகிறது. ஒரு சில ஊடகங்களைத் தவிர ஏனையவை அரசாங்கத்தை ப்கைத்துக்கொள்ளாமல் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசாங்கத்தை விமர்சிக்கும் தனியார் சமூக வலைத் தளக் கணக்குகளை மூடிவிடுவதற்கும் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்றவாறும் ‘ பொய்ச் செய்திகளுக்கு எதிரான’ சட்ட்மொன்றைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராகிவருகிறது.

இந்நிலையில் பாராளுமன்றம் ஒன்றே பாதுகாப்போடு அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடிய இடமாக இருந்து வந்தது. பாராளுமன்றத்தில் கூரிய கருத்துக்களுக்காக ஒருவரைக் கைதுசெய்ய முடியாது என்ற பாதுகாப்பை முன்வைத்துத் தான் துணிச்சலான சில உறுப்பினர்கள் அரசாங்கத்தை விமர்சித்து வந்தார்கள். ஆனால் கோதாபய ராஜபக்ச இந்த மரபையும் உடைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கைதுசெய்ய எத்தனிக்கலாமென உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ ஆரூடம் கூறியிருக்கிறது.

கோதாபய அரசின் இந் நடவடிக்கைகள் தொடருமானால் இலங்கை உலகநாடுகளினால் ஓரங்கட்டப்படலாமெனவும் ஏற்கெனவே அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்நாட்டின் பொருளாதாரத்தை இது மேலும் மோசமாக்குமெனவும் ஜனநாயக செயற்பாட்டாளார்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு மேற்குநாடுகளின் ராஜதந்திரிகளை இன்று கொழும்பில் சந்தித்து நாட்டின் அரசியல், பொருளாதார, சுகாதார நிலைமைகள் பற்றிக் கலந்துரையாடியுள்ளார். கனடிய தூதுவர் டேவிட் மக்கின்னன், அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்ளிட்ஸ், அவுஸ்திரேலிய உதவி தூதுவர் அமந்தா ஜுவெல், ஆகியோரை இன்று பிரேமதாச சந்தித்திருந்தார்.