Spread the love
– சிறைக்கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு

முன்னாள் இராணுவ செர்ஜெண்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது சட்டத்துக்கு முரணானதும், நீதித்துறையை அவமதிப்பதுடன் அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை முறியடிப்பதுமாகும் என சிறைக்கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (Committee for Protecting Rights of Prisoners (CPRP)) தெரிவித்துள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கைதியை முறையான மீள்பரிசீலனையின்றி, எழுந்தமானமாக விடுதலை செய்வதற்கு அரசியமைப்பின் கட்டளை 34(1) ஜ ஜனாதிபதி பாவித்திருக்க முடியாது எனவும், அதை எதிர்த்து தாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவ் வமைப்பு தெரிவித்துள்ளது.

எதுவித வெளிப்படைத்தன்மைகளுமின்றி, அரச தலைவர்களால் மன்னிப்பு வழங்கப்படும் வழக்கம் இந் நாட்டின் நீதித்துறையை அவமதிப்பதுடன் அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகிறது என CPRP யின் தலைவரம் சடடத்தரணியுமான சேனகா பெரேரா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2000 ஆம் ஆண்டில், உள்ளக இடப்பெயர்வுக்குள்ளாகியிருந்த (IDPs) தமிழ் மக்கள் பேரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை வழங்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சேர்ஜெண்ட் சுனில் ரத்நாயக்காவை கடந்த வியாழனன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.

“என்ன அடிப்படையில் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மன்னிப்பு வழங்கினார் என்பதை நாம் அறிய விரும்புகிறோம். அவரது மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தமையானது நீதி பரிபாலனத்தில் தவறு நிகழ்ந்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அப்படியிருக்க அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு எந்த அடிப்படையுமில்லை. தீவிர குற்றங்களைப் புரியாமல் சிறைகளில் நீண்டகாலங்களாக இருக்கும், வயது முதிர்ந்தவர்களுட்படப் , பலருக்கு மன்னிப்பு வழங்கும்படி நாம் பலகாலமாகக் கேட்டுக்கொண்டு வருகிறோம், ஆனால் எங்கள் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை ” என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைக்கு கைதியை விடுதலை செய்வதற்கு முன்னர் அவர் தொடர்பான விசாரணை நீதிபதியின் அறிக்கையை சட்டவாளர் நாயகத்தின் (AG) ஆலோசனைக்கிணங்கவும், நித்தியமைச்சரின் பரிந்துரைக்கிணங்கவும், ஜனாதிபதி கோரிய பின்னர் அது பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே, மன்னிப்பு வழங்கப்படுவதற்கு அரசியமைப்பின் 34(1) கட்டளை அதிகாரம் தருகிறது. அதுவே வெளிப்படைதன்மையுள்ள செயற்பாடு என பெரேரா தெரிவித்தார்.

“அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட இந்த அதிகாரத்தைச், சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். எனவே இக் கட்டளை அரசியலமைப்புக் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை மீள் பரிசீலனைக் குழுவொன்றிடம் ஒப்படைக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந் நடவடிக்கையை, “சந்தர்ப்பவாதமெனவும்’ காலத்தின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட ஒன்றென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related:  இலங்கை | பாராளுமன்றத் தேர்தல்கள் பின்போடப்படலாம்?

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களும் சுனில் ரத்நாயக்காவின் எழுந்தமானமான விடுதலை பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன .

றோயல் பார்க் கொலைக்குக் காரணமானவரெனக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட்ஸ் ஷ்ராமந்த ஜெயமாஹா என்ற கைதியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்த போதும் இதே போன்று எதிர்ப்புகள் தோன்றியிருந்தன. அதன் மீதான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.

ஜெயமாஹா விடுதலை விடயத்தில், அது செல்லுபடியாகாதெனத் தீர்ப்பளிக்கும்படியம், அரசியலமைப்பு கட்டளை 34(1) ஐ, மன்னிப்பு வழங்குவதற்கு முறையாகப் பிரயோகிப்பதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்கும்படியும் கோரி, பெண்களும் ஊடகங்களும் சேர்ந்த அமைப்பு (Women and Media Collective) அடிப்படை உரிமைகள் விண்ணப்பமொன்றை (FR) பதிவுசெய்துள்ளது.

இவ் வழக்கு மே 29 அன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

Print Friendly, PDF & Email