Art & LiteratureColumnsசிவதாசன்

சுந்தர ராமசாமி ( மே 30, 1931 – அக்டோபர் 14, 2005)

| ஒரு நினைவு

சுந்தர ராமசாமி நம் காலத் தமிழ் எழுத்தாளர்களில் தனியாக இனம்காணக்கூடியவர். அவரது தமிழ்ப் பற்றும், மொழிப்பாவனையும் இயற்கையானவை. ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற அவரது நூலே நான் வாசித்த அவரது முதல் நூல். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முதலாவது இயல் விருதைப் பெறுவதற்கு கனடா வந்திருந்தபோது அவரை நேரடியாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பை ‘காலம்’ செல்வம் தந்திருந்தார். அவரைப்பற்றிய முன் கற்பிதங்கள் எதுவுமில்லாமல் அச்சந்திப்பு நிகழ்ந்திருந்தது. அதிகம் பேசமாட்டார். தாடியைத் தடவிக்கொண்டு கேட்டுக்கொண்டு இருப்பார். அவர் எங்களை அளவிடுகிறார் என்பதற்கான அத்தனை முத்திரைகளும் அவர் முகத்தில் தெரிந்தன. அவற்றை மீறி அவர் உரையாடலில் ஈடுபட்டால் அது எமது அறிவுக்குக் கிடைத்த அங்கீகாரம். சுமார் ஒரு மணிநேர உரையாடலில் அவர் எவரையும் சாடவில்லை, எகத்தாளத்தோடு துள்ளிக்குதிக்கவில்லை, நையாண்டி பண்ணவில்லை. முதிர்ச்சியின் தளம்பலற்ற பூரணத்துவ நிலை. அதுவே அவரை முதலும் கடைசியுமாக நான் சந்தித்தது.

சு.ரா. வைப்பற்றிப் பலரிடமும் உரையாடியிருக்கிறேன். ஏனைய பிரபல எழுத்தாளர்களில் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் போன்றவை இவரை அண்டியதாக எனக்குப் படவில்லை. ஆனால் ஜே.ஜே. சில குறிப்புகளில் அவர் பல பிரபலங்களைத் தடவிக் குத்துவது தெரிந்தது. அந்த நையாண்டி நடை என் தமிழுக்குப் புதிது. வசீகரமான அவரது தமிழுக்கு நான் அடிமையாகி விட்டேன். ‘காலம்’ செல்வத்தின் கிரமமான நச்சரிப்பால் சு.ரா.வின் அனைத்துப் புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன் எனலாம். இன்னும் பசி அடங்கவில்லை. அவரது பிறந்த நாளன்று ‘வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள்: 2003 -2005’ என்ற அவரது புத்தகத்தை மீளவும் ஒரு தடவை வாசித்தேன். அதில் அவர் தனது இறந்த மகள் தொடர்பாக வரைந்த கட்டுரையொன்று என்னை மிகவும் பாதித்திருந்தது. அவரது நினைவாக அக் கட்டுரையை இங்கு மீளவும் பதிகிறேன். – சிவதாசன்


என் சுயவரலாற்றிலிருந்து ஒரு அத்தியாயம்

சுந்தர ராமசாமி

காலம் சென்ற எனது மகள் செளந்தரா உயிரோடு இருந்திருந்தால் இப்போது அவளுக்கு 46 வயதாகியிருக்கும்.

அவள் தனது 26 ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டாள். 20 ஆண்டுகள் நோயின் எண்ணற்ற எண்ணற்ற துன்பங்களை மெளனமாக அனுபவித்தாள்.

செள்ந்தராவுக்கு வந்த நோயைத் தற்காலிகமாகக் கண்டறிய (provisional diagnosis) ஐந்து வருடங்கள் வரையிலும் ஆயிற்று. டாக்டர்கள் Multiple Sclerosis என்றார்கள். நோயின் முழுப் பெயரையே அவர்கள் எப்போதும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் வைத்தியத் துறையில் M.S. என்று குறிப்பிடுவதுதான் வழக்கம் போலிருக்கிறது. அந்த எழுத்துக்கள் என் சிறு வயதிலிருந்தே இசையைப் பற்றிய என் கனவின் குறியீடாக இருந்தவை. அதன் பின் அவை வேதனை சார்ந்த நினைவுகளைத் தூண்டும் குறியீடாக இருக்கின்றன.

என் மகளுக்கு Multiple Sclerosis என்பது, மாறி மாறி அவளைப் பார்க்க நேர்ந்த டாக்டர்கள் எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இந்த நோய் இந்தியாவில் அபூர்வத்திலும் அபூர்வம் என்றார்கள். இவளுக்கு இந்த நோய் எப்படி வந்தது என்று தங்களையே கேட்டுக்கொண்டார்கள். அமெரிக்கர்களிடையே தான் இந்த நோய் பரவலாக இருக்கிறது என்று தகவல் தந்தார்கள்.

தமிழ்ப் பேராசிரியரான ஜேசுதாசனும் நானும், 2002 இல், 83 ஆவது வயதில் அவர் மறைவது வரையிலும், நண்பர்களாக இருந்தோம். ஐம்பது வருடங்களில் சிறுகச் சிறுக நெருக்கம் பெற்று முடிவில் அது தந்தைக்கும் மகனுக்குமான் ஒரு உறவுபோல் மாறியிருந்தது. செளந்தஹ்ராவின் நோய் யேசுதாசனுக்கு மனக்கலவரத்தைத் தந்திருப்பதாக நான் உணர்ந்தேன். அத்ன் பின் குறுகிஅ நாட்களிலேயே எனக்கும் அவருக்குமான உறவில் ஒரு மாற்றம் நிகழ்ந்துவருவதுபோல உணர்ந்தேன். நெகிழ்ச்சியின்றி அந்த மாற்றத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஏனோ ஒவ்வொரு தடவையும் அவர் முஅக்ம் நினைவுக்கு வரும்போதெல்லாம் மனது சங்கடப்பட்டது. அவர் என்னைப் பார்க்கும் பார்வையில், வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மிகுந்த கவலை அவர் கண்களில் தெரிந்தது. அந்த நேரங்களில் அவர் மனதில் என்னென்ன எண்ணக்கள் ஓடின என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு முறையும் செளந்தராவின் படுக்கைப் பக்கம் வந்து நிற்கும்போது அதிகமாக எதுவும் கேட்காமலவளுடைய முகத்தை அவர் கூர்ந்து பார்ப்பார். நோயைப் பற்றி என்னிடம் விசாரிப்பதில் அவருக்குப் பெரிய ஆர்வம் இல்லை என்பதை நான் உணர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் அவர் அவள் கட்டிலின் அருகே நின்றபடியே தன் கண்களை மூடிக்கொள்வார். அவளது வலது கரத்தை அவருடைய வயோதிகமான விரல்கள் துடித்தபடி ஸ்பரிசித்து விலகுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியும். அதன் பின் தன் வேலை முடிந்துவிட்டது என்பதுபோல் அவர் முன் வாசல் அறைக்கு (hall) வந்து அமர்ந்து கொள்வார்.

வெகுநாட்களுக்கு ஆறுதல் சொல்வது போல் எந்த வார்த்தையும் அவரிடமிருந்து வரவில்லை. தனக்குத் தெரியாததைப்பற்றிச் சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதுபோல் பட்டது. அவருடைய ஆறுதல்கள் – அவை medical science சார்ந்தவை அல்ல என்பது தெரிந்திருந்த போதிலும் – எனக்குத் தேவையாக் இருந்தன. எந்தக் கற்பனையான ஆறுதலையும் பற்றிக்கொள்ளும் மனநிலைக்கு நான் வந்திருந்தேன். எல்லோரையும் ஆறுதப் படுத்தத் துடிக்கும் ஜேசுதாசன் மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது சங்கடத்தைத் தந்தது.

அவரது குக்கிராமத்தில் அவருக்குத் தொலைபேசி இணைப்புக் கிடைத்த பின்பு, ஒவ்வொரு நாளும் அவர் என்னுடன் போனில் பேசத் தொடங்கினார். மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்பார். நான் அவளுடைய அன்றைய உடல் நிலையைச் சுருக்கமாகச் சொல்வேன்.

அவள் நோய்வாய்ப்பட்டு ஒரு சில வருடங்கள் கழிந்திருந்தன. அவள் வாழ்க்கை பற்றிய நம்பிக்கை நாள்தோறும் குறைந்துகொண்டே வந்தது. அலோபதி மருத்துவர்கள் எல்லோரும் நோய் நீங்கும்படி செய்வதற்கு எதுவுமில்லை என்றுதான் சொன்னார்கள்.

ஒருநால் போனில் பேசும்போது செளந்தராவுக்கு நோய் குண்மாகிவிடும் என்றார் ஜேசுதாசன். அவ்வாறு அவர் சொன்னது எனக்கு ஆறுதலையும் வியப்பையும் தந்தன. யாரிடமோ தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது போலவும், இப்போதுதான் அதற்குச் சாதகமான விடை கிடைத்தது போலவும் எனக்குத் தோன்றிற்று. அவ்வாறு தோன்றுவதற்கான காரணங்களும் இருந்தன.

யேசுதாசனும் தமிழ் நாவலாசிரியையான அவர் மனைவி ஹெப்சிபா ஜேசுதாசனும் இளம் வயதிலேயே தங்களை ஏசுவிடம் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்கள் என்பது அவர்களது நண்பர்கள் எல்லோருக்குமே தெரியும். சந்தோஷம் என்றாலும் சரி, துக்கம் என்றாலும் சரி அவர்கள் மனத்தின் மையத்தில் இருந்த ஆண்டவருடந்தான் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு மத்திய வயதாக இருந்த காலத்தில் திருவனந்தபுரத்தில் பாளையம் சர்ச் முன்னால் நின்று நெடுஞ்சாலையில் தங்களைத் தாண்டிப் போகிறவர்களுக்கு சமயம் சார்ந்த துண்டறிக்கைகளை – எவருக்கும் தருவதற்கு விட்டுப் போய்விடக்கூடாது என்ற கவலையுடன் – விநியோகிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

கடவுள் நம்பிக்கை கொண்ட பலரையும் எனக்குத் தெரியும். கடவுளை நம்புகிறவர்கள், நம்புகிறவர்களைப்போல் காட்டிக்கொள்கிறவர்கள், அப்பட்டமான வேஷதாரிகள், கடவுள் பேரில் விஷமம் செய்து வருகிறவர்கள் எல்லோரையும். ஆனால் தாங்கள் சார்ந்து நிற்கும் நம்பிக்கைக்கும் தங்கள் வாழ்க்கைக்கும் இடையே சிறிய இடைவெளிகூட இருப்பது ஜேசுதாசன் தம்பதியினருக்குச் சம்மதம் இல்லாமல்தானிருந்தது. இந்தளவு ஆழ்ந்த நம்பிக்கையை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை.

பின்னால் யேசுதாசன் எங்கள் வீட்டுக்கு வந்த்போது, அவர் முன் நான் தனிமையாக இருந்த ஒரு நேரத்தில், ‘கவலைப்பட வேண்டாம். நான் தொடர்ந்து ஜெபம் செய்து வருகிறேன்’ என்றார். ‘ஆண்டவரிடம் காலையும் மாலையும்பிரார்த்தனை செய்கிறோம்’ என்றார். சகல நோய்களையும் குணப்படுத்த வல்லவரான வைத்தியரிடம் நான் எவ்வளவு நம்பிக்கை கொள்வேனோ அதற்கு இணையான நம்பிக்கையுடன் அவர் சொன்னார்.

ஆனால் செளந்தராவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. போனில் பேசும்போதும்சரி, வீட்டுக்கு வந்து செளந்தராவை அவர் பார்த்து முடித்த பின்னும் சரி அவர் வழக்கம்போல் சிகிச்சை பற்றியெல்லாம் அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமின்றி, ‘ஆண்டவருக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியும்’ என்று சொல்வார்.

ஒருநாள் பேசிக்கொஇண்டிருந்தபோது இப்போது நீங்கள் பிரார்த்தனை செய்யத்தொடங்கி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும் என்று கேட்டேன். அவர் மிக மென்மையான குரலில், ‘பத்து வருடங்கள் இருக்கலாம்’ என்றார். பத்து வருடங்கள்! அவர் உணவருந்தாத நாட்கள் இருந்திருக்கலாம். பிரார்த்தனை செய்யாத நாட்கள் இருந்திருக்கவே முடியாது. என் மன நெகிழ்ச்சியை அவரிடம் சொல்லத் தெரியாமல் தவித்தேன்.

செளந்தரா காலமானாள். ஒரு சில மாதங்களுக்குப் பின் ஜேசுதாசனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. வேறு சில விஷயங்களை எழுதிவிட்டு, முடிவாகக் கடிதத்தில், ‘என்னுடைய முயற்சி வெற்றி பெற்றிருக்கும், உங்களுக்கும் சிறிது நம்பிக்கை இருந்திருந்தால்’ என்று எழுதியிருந்தார். ‘இனி வருந்திப் பயனில்லை, ஆண்டவருடைய சித்தம்’ என்று கடிதத்தை முடித்திருந்தார்.

நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரையிலும் ஒரு agnostic ஆகவே இருந்து வருகிறேன். ஜேசுதாசனின் கடிதம் வந்த அன்று எனக்குத் தாங்கிக் கொள்ள முடியாத துக்கம் ஏற்பட்டது. தந்தை போல என்னை நேசித்த நண்பரை ஏமாற்றி விட்டேனோ என்ற வருத்தம் என்னை ஆட்கொண்டது. (சண்டே எக்ஸ்பிரஸ், 25 மே 2003)