சுதந்திர தினம் | தமிழர் விசனம், உலகத் தலைவர்கள் வாழ்த்து
பெரும்பான்மையான தமிழர்களின் எதிர்ப்பலைகளின் மத்தியில் சிறீலங்காவின் 71 வது சுதந்திரதினத்தைப் பெரும்பான்மைச் சமூகம் விமரிசையாகக் கொண்டாடியது. எலிசபெத் மகாராணி, புட்டின், இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உட்படப் பல உலகத் தலைவர்கள் வழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் “சுதந்திரம் என்பது அதன் அர்த்தத்திற்கேற்ப பூரணமாக இன்னும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. நாட்டிலுள்ள சகல மக்களும் அரசியல், சமூக, பொருளாதார, சூழலிய, ஆன்மீக விடயங்களில் ஒற்றுமையோடு வாழும் போதுதான் சுதந்திரம் உண்மையாகக் கிடைத்ததாகக் கருதப்படும்” என்று கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் சார்பில் ராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ வாழ்த்துக்களஇத் தெரிவித்திருந்தார். ரஷ்ய அதிபர் புட்டின் ‘இரு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எமது உறவு பிரிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். அதே வேளை பிராந்திய ஸ்திரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் எமது உறவு பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழர் பிரதேசங்களில் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரிக்கும் வகையில் சில நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுதந்திர தினத்தைத் துக்க நாளாக அனுஷ்டிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டது.