‘சீமானை வெல்ல முடியாது, தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்’ – வழக்கை மீளப்பெற்ற விஜயலக்ஷ்மி
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது பதிந்திருந்த வன்புணர்வு வழக்கை மீளப் பெறுவதாக நடிகை விஜயலக்ஷ்மி அறிவித்துள்ளார். “சீமான் தமிழ்நாட்டில் அதி சக்தி வாய்ந்த ஒருவர். அவரோடு ஒப்பிடுகையில் நான் ஒரு பொருட்டே அல்ல. அவருக்கு எதிராக எவரும் எதையுமே செய்துவிட முடியாது. நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்” என நேற்று (செப். 16) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார். அத்தோடு இவ்விடயத்தில் பொலிஸ் விசாரணை மந்தகதியில் நடைபெறுகிறது எனவும் இவ்வழக்கை முன்னெடுக்கக்கூடிய திறமை பொலிசாருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தன்னைக் கல்யாணம் செய்துகொள்வேன் என நம்பிக்கையூட்டி சீமான் வன்புணர்வு செய்தார் எனவும் இதனால் தான் ஏழு தடவைகள் கருத்தடை செய்யவேண்டி ஏற்பட்டதெனவும் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் எனவும் கூறி ஆகஸ்ட் 28 அன்று விஜயலக்ஷ்மி பொலிசாரிடம் புதிதாக் ஒரு வழக்கைப் பதிவுசெய்திருந்தார்.
இம்முறைப்பாடு தொடர்பாக செப்டமர் 9, 14 ஆகிய திகதிகளில் பொலிசாரால் அழைப்பாணை விடப்பட்டிருந்தது எனவும் ஆனால் இரண்டு தடவைகளிலும் அவர் அவற்றை உதாசீனம் செய்துவிட்டதாகவும் தெரிகிறது.
இந்த விடயத்தில் தனது பரிதாப நிலை குறித்து பொதுமக்கள் ஆதரவு தருவார்கள் எனத் தான் எதிர்பார்த்ததாகவும் அதற்குப் பதிலாக சமூக வலைத் தளங்களில் தன்னைப் பற்றி இழிவான பதிவுகளே இடப்படுகிறதென்றும் விஜயலக்ஷ்மி மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாகத் தான் சீமானுடன் பேசியதாகவும் ஆனால் வழக்கை மீளப்பெறுவதற்கு யாரும் அழுத்தம் தரவில்லை எனவும் தான் சீமானுக்கு எதிராக இனி ஒரு நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை எனவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
“இவ்விடயத்தில் சீமான் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்ததாயினும் பொலிசார் என்னையே குற்றவாளிபோல் நடத்தினர். நான் ஒரு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தது போல உணர்ந்தேன். எனது தொலைபேசிகளை பொலிசார் எடுத்துக்கொண்டு விட்டனர். என்னால் ஒருவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. நிறைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றை எல்லாம் நான் ஊடகங்களுக்குச் சொல்ல முடியாது” என அவர் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு இதே போன்றொரு முறைப்பாட்டை நடிகை விஜயலக்ஷ்மி சீமானுக்கு எதிராகச் செய்திருந்த காரணத்தால் பொலிசார் சீமான் மீது வழக்குப் பதிந்திருந்தனர் எனவும் அப்போதும் விஜயக்ஷ்மியின் கோரிக்கையை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 27 ஜூலை 2020 அன்று அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ‘இதுவே எனது கடைசி வீடியோ’ என முகநூலில் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். தான் மிகவும் மோசமான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் சீமானும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களும் தனக்கு தீராத தொல்லை தருவதும் தனது தற்கொலை முயற்சிக்கு ஒரு காரணம் எனவும் அவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
விஜயலக்ஷ்மி சென்னையில் பிறந்தவர். தாயார் 1984 இல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்தவர். தந்தையார் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். ஒரு சகோதரியுமுண்டு.
கன்னடம், தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் அவருக்கு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்திற்காக ஃபிலிம் ஃபெயர் சஞ்சிகயின் சிறப்பு நடிகைக்கான விருது கிடைத்திருந்தது. அவரது முதல் தமிழ் படம் பூந்தோட்டம் (1998).