சீன பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங்கி இலங்கை வந்தார்

நேற்று (28) இலங்கை வந்திருந்த சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனெரல் வே ஃபெங்கியை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

பேச்சுவார்த்தையின்போது இலங்கையுடனான நல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்வதெனவும் பாதுகாப்பு, முதலீடுகள் விடயங்களில் சீனா தொடர்ந்த்தும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்குமெனவும் அமைச்சர் வே தெரிவித்ததாக அறியப்படுகிறது.

சந்திப்புகள் முடிவடைந்ததும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுடனா சந்திப்பு மிக மிகப் பிரயோசனமாக இருந்ததாகவும் இவ வரவின் மூலம் இருநாடுகளிடையேயான உறவும் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கிறதெனவும் ஜெனெரல் வே தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது சீன தூதுவர் கி ஜென்ஹொங், சீன மத்திய இராணுவ ஆணையத்தின் அதிகாரி லெப்.ஜெனெரல் ஷாவோ யுயன்மிங், மேஜர் ஜெனெரல் சீ குவோவே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

செவ்வாயன்று (27) பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த சீன குழுவினரை, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி நிஷாந்த உளுகெத்தென்னெ, விமானப் படையைச் சேர்ந்த எயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயாயே மர்றும் சீன தூதுவர் கி ஜென்ஹொங் ஆகியோர் வரவேற்றிருந்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் பேரா.ஜி.எல் பீரீஸ் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு சீனா உதவிசெய்யவேண்டுமென மஹிந்த ராஜபக்ச சீன அமைச்சர் வேயிடம் கேட்டுக்கொண்டதாக அறியப்படுகிறது.

இரண்டு ராஜப்கசக்களினதும் அறிக்கைகளில் கொழும்பு துறைமுக நகரம் பற்றிய எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை.