NewsSri Lanka

சீன நிறுவனத்திடமிருந்து மீண்டும் உரம் இறக்குமதி, இலங்கை அரசு தீர்மானம்

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களைக் கொண்டிருந்ததென இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பபட்டதுடன் அதற்கான கொடுப்பனவான US$ 6.9 மில்லியன்களையும் கொடுத்த பின்னர் அதே சீன நிறுவனத்திடமிருந்து மீண்டும் உரத்தை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.

சீனாவின் கிங்டாவோ சீவின் பயோரெக் குழுமத்திடமிருந்து கடந்த தடவை இறக்குமதி செய்த உரத்தில் பசிலஸ் பக்டீரியம் காணப்பட்டதால் இலங்கையின் நியம நிறுவனம் (Srilanka Standards Institute (SLSI)) அவ்வுரத்தை இலங்கை மண்ணில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுக்க மறுத்திருந்தது. இதனால் அவ்வுரத்தை ஏற்றிவந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இதன் நட்ட ஈடாக US$ 6.9 மில்லியன் டாலர்களை இலனக்கை அரசாங்கம் அந்நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனாலும் அதற்கு மேலாக இலங்கை அரசாங்கம் நட்ட ஈடு வழங்கவேண்டுமெனவும் அதைப் பெறுவதற்காக சர்வதேச நியாய மன்றங்களில் முறையிடுவோமெனவும் சீன நிறுவனம் மிரட்டியிருந்தது.



இப்போது அதே நிறுவனத்திடமிருந்து புதிதாக உரத்தை இறக்குமதி செய்ய இலங்கை அரசு இணங்கியிருக்கிறது. இந்தத் தடவை, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கட்டளைப்படி, இலங்கையில் நியம நிறுவனம் இவ்வுரத்தை ஏற்றுக்கொள்வதற்காகப் புதிய நியமத்தை உருவாக்கி வருவதாகவும், அதனால் தடைகள் ஏதுமின்றி இவ்வுரத்தை இலங்கை இறக்குமதி செய்யமுடியுமெனவும் நியம நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் கே.ஏ.அனில் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி-மார்ச் மாதமளவில் இவ்வுரம் இலங்கயை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.