சீன சக்தி வழங்கல் திட்டங்களில் இந்தியா தலையிடுகிறது -சீனா குற்றச்சாட்டுஇலங்கையில் தாம் மேற்கொள்ளும் சக்தி வழங்கல் திட்டங்ககளில் தலையிடுவதன்மூலம் இலங்கை உட்படத் தென்னாசிய நாடுகளின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்கும் இந்தியா பேராபத்தாக விளங்குகிறது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையின் வடபகுதியிலுள்ள தீவுகளில் சீனா ஆரம்பிக்கவிருந்த மின்வலுத் திட்டங்களுக்கு “மூன்றாவது தரப்பொன்றினால்” ஆபத்து விளையுமென்பதனால் அத் திட்டங்களை சீனா தற்காலிகமாகக் கைவிட்டுள்ளமை தொடர்பாகச் சீனா கருத்துக்கூறியுள்ளது.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளும் இந்தியாவுக்கு மிக அண்மையில் இருப்பதனால் அவற்றில் சீனா நிலைகொள்வது இந்தியாவுக்கு ஆபத்து என்பதனால் அத் திட்டங்களை நிறுத்தும்படி கடந்த ஜனவரி முதல் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்தியா மற்றும் யப்பானுடன் கூட்டாக இலங்கை செய்துகொண்ட கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தில் தலையிட்டு சீனா இப்போது அத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தைத் தான் எடுத்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் அதானி குழுமத்துக்குக் கொடுக்கப்பட்ட மேற்கு கொள்கலன் முனையத்தைவிட கிழக்கு முனையம் ஆழமானது என்பதனால் அது மிகவும் பயனுள்ளதும் இலாபகரமானதுமாகும். இதனால் மோடி அரசு மிகவும் அதிருப்தியடைந்திருந்தது.

அதே வேளை $12 மில்லியன் டாலர்கள் நிதியுதவியுடன் இத் தீவுகளில் மேற்கொள்ளவிருந்த திட்டங்களைத் தாமே முடித்துத் தருவதாக இந்தியா இலங்கையைக் கேட்டிருந்தது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென சீன நிறுவனமான ‘சைனோ சோவர் ஹைபிரிட் டெக்னோலொஜி’ யுடன் இலங்கை ஒப்பந்தம் செய்திருந்தது. வெளிநாடுகளில் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடும் பெரும்பாலான சீன நிறுவனங்கள் சீன இராணுவத்தின் அங்கங்கள் என்பது பரவலாக அறியப்பட்ட உண்மை.

இலங்கையில் மேற்கொள்ளவிருந்த மின்வழங்கல் திட்டங்களைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு சீனா தற்போது மாலைதீவுகளில் இதே போன்ற திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. அங்குள்ள 12 தீவுகளில் தலா 2.5MW வலுவைப் பிறப்பிக்கும் சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்துவதற்கு சைனோசொவர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.