IndiaSri Lanka

சீன உளவுக் கப்பலின் வருகை: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை!

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வருகைதரும் சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5 இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவை வெகுவாகப் பாதிக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கப்பற் தேவைகளை நிவர்த்திசெய்யும் நோக்கில் அது இங்கு வருவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தாலும், இது தொடர்பான பலத்த எதிர்ப்பை இந்திய அரசு இலங்கைக்குத் தெரிவித்துள்ளது.

இக் கப்பல் சீனாவின் உளவுத் தேவைகளுக்காகப் பாவிக்கப்படும் ஒன்று. ஆகாய மார்க்கமாக 750 கி.மீ தூரத்திலுள்ள சமிக்ஞைகளை அறிந்துகொள்ளும் ஆற்றல் கொண்ட இக் கப்பலின் வீச்செல்லைக்குள் இந்தியாவின் தென் மாநிலங்களிலுள்ள இராணுவ மற்றும் அணு மின்நிலையங்கள் இருப்பதால் இந்தியா இக் கப்பலின் வருகை குறித்து மிகவும் அதிருப்தி கொண்டுள்ளது. வான்வெளியில் விண்மதிகளுடன் மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்களை வேவு பார்க்கக்கூடிய வல்லமை இக் கப்பலுக்குண்டு. இதன் வருகை குறித்து ஏற்கெனெவே இலங்கை அரசிடம் இந்தியா கேள்வி எழுப்பியபோது அதன் வருகையைத் தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் இக் கப்பலின் வருகைக்கான அனுமதியை கோதாபய ராஜபக்சவின் நிர்வாகம் ஏற்கெனெவே வழங்கியிருந்தமை பற்றி இலங்கை இந்தியாவிடம் தெரிவிக்கவில்லை. தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் சீன-இந்திய தரப்புகளிடையே அகப்பட்டுச் செய்வது தெரியாமல் மிரண்டுபோயுள்ளதாக அறியப்படுகிறது.

பொதுவாக இப்படியான விடயங்களை வெளிவிவகார அமைச்சுகளே கையாள்வதுண்டு. ஆனால் விக்கிரமசிங்க நிர்வாகத்தில் வெளியுறவு விடயங்களைக் கையாளும் அமைச்சர் அலி சப்றி முற்றிலும் அநுபவமில்லாதவர். அவரை மீறி அல்லது அவரைக் கருத்தில் கொள்ளாது இச் சீனக்கப்பலின் வருகை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே அனைத்தையும் கையாண்டுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம தெரித்துள்ளார். இலங்கயின் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்கள் தற்போது ஜனாதிபதி விக்கிரமசிங்கவின்கீழ் உள்ளன. அவரது பாதுகாப்புச் செயலாளாராக கமால் குணரத்ன உள்ளார்.

ராஜபக்ச நிர்வாகம் பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பியடைக்க முடியாது போனபோது அதன் பின்னர் வந்த விக்கிரமசிங்க / சிறீசேன நிர்வாகம், 2017 இல், அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு எழுதிக்கொடுத்துவிட்டது. இதனால் அத்துறைமுகத்தில் நடைபெறும் காரியங்கள் எதனையும் கண்காணிக்க முடியாத நிலையில் இலங்கை உள்ளது. ஆனால் இலங்கையின் எத்துறைமுகத்திற்கும் வருகைதரும் கப்பல்கள் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமெனில் அதை ஆட்சேபிக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு.

சீனாவின் ஜியாஞ்ஞின் துறைமுகத்திலிருந்து ஜூலை 13 அன்று யுவான் வாங் 5 கப்பல் புறப்பட்டிருக்கிறது. அன்றுதான் கோதாபய ராஜபக்சவும் தநது பதவியைத் துறந்திருந்தார். ஆகஸ்ட் 11 அம்பாந்தோட்டை வரும் இக் கப்பல் ஆகஸ்ட் 17 வரை அங்கு தரித்து நிற்கும். ஆரம்பத்தில் அதன் வருகை தொடர்பான செய்தியில் உண்மையில்லை என மறுத்த பாதுகாப்பு அமைச்சு பின்னர் அது தனக்குத் தேவையான எரிபொருள் மற்றும் பாவனைத் தேவகளை நிரப்பிக்கொள்வதற்காகவே அது அங்கு வருகிறது எனவும் இப்படியான கப்பல்கள் இந்தியா, சீனா, யப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வந்து போவது வழமை எனவும் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் நலின் ஹேரத் தெரிவித்திருந்தார். ஆனால் யுவான் வாங்க் 5 கப்பல் சாதாரண கப்பலல்ல என்பது பற்றியோ அல்லது அக் கப்பலின் வருகையின் நோக்கம் என்ன என்பது பற்றியோ ஹேரத் விபரிக்கவில்லை.

இந்தியாவின் கரிசனை

பொதுவாக இப்படியான கப்பல்களின் நடமாட்டம், அப் பிராந்தியத்தில் ஏவுகணை நடவடிக்கைகள் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான திட்டங்கள் தீட்டப்படும்போதே மேற்கொள்ளப்படுகின்றன என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்திருக்கலாம். இக் கப்பலின் வேவு வீச்சு 750 கி.மீ. தூரத்தை எட்டும் என்பதால் இவ்வெல்லைக்குள் வரும் கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் அணுவாராய்ச்சி பற்றிய தகவல்களையும், கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், நிலையங்களின் பூகோள நிலைத் தகவல்களையும் யுவான் வாங்க 5 அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இவ் விடயம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் அரிண்டம் பாக்சி கருத்துத் தெரிவிக்கையில் “சீனாவின் யுவான் வாங் 5 கப்பலின் வருகை குறித்த தகவல்கள் எமக்கு ஏற்கெனவே எட்டியுள்ளன. அதன் நகர்வுகள் தொடர்பாக இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத் தயாராகவுள்ளோம். எமது இக்கரிசனை இலங்கைக்கு எச்சரிக்கையாக அமையுமென நான் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

பாக்சியின் இக் கருத்து தொடர்பாகக் கருத்துக்கூறிய சீன தரப்பு “எமது சட்டபூர்வமான கடல் பிரதேச நடவடிக்கைகளில் பிறர் தலையீடு இருக்கமாட்டாது என நாம் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

20219 இல் அந்தமான் தீவுகளுக்கு அருகே வந்த ஷீ யான் 1 என்ற சீன கடற்படைக் கப்பலை இந்திய கடற்படைக் கப்பல்கள் துரத்தியிருந்தன. 2014 இல் கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைந்த அணுவலு நீர்மூழ்கி ஷாங்ஷெங் 2 தொடர்பாக இந்தியா எழுப்பிய கடும் எதிர்ப்பு காரணமாக அப்போதய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச புது டெல்ஹிக்குச் சென்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோர்வாலைச் சந்தித்து இரு தரப்பிடையேயும் எழுந்த பிணக்கைத் தீர்த்து வைத்திருந்தார்.

த.தே.கூட்டமைப்பும் எதிர்ப்பு

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்ற காரணத்தினால் இலங்கையிலுள்ள வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இச் சம்பவம் சட்டபூர்வமான நியாயத்தைக் கொடுத்துவிடக் காரணமாக அமிந்துவிடுமென்பதை இலங்கை அரசு மனதில் கொள்ளவேண்டுமென்பதை மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுக்கு எச்சரித்திருக்கிறது.