IndiaNews & AnalysisSri Lanka

சீன உளவுக்கப்பல் விவகாரம்: பாடம் கற்குமா இந்தியா?

மாயமான்

ஆகஸ்ட் 11 அன்று அம்பாந்தோட்ட்டைத் துறைமுகத்தில் தரித்து அத்தியாவசிய பொருள் நிரப்புத் தேவைகளைப் பூத்திசெய்வதற்கென இலங்கை அரசிடம் அனுமதியைப் பெற்றிருந்த சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5 கலம் துறைமுகத்துக்குள் நுழைவதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்திருக்கிறது. இவ் விடயம் தொடர்பாக இந்தியா கடும் அதிருப்தி அடைந்திருந்ததுடன், இலங்கை அரசுக்கு எச்சரிக்கையையும் செய்திருந்தது.

யுவான் வாங் 5 உண்மையில் உளவுக்கப்பலை விடப் பலம் வாய்ந்த ஒன்று எனவும் இப்படியான கப்பல் ஒன்றை இதுவரை உலகின் வேறெந்த நாடும் தயாரித்திருக்கவில்லை எனவும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய விண்மதிகளுடனான் தொலைத்தொடர்பு சமிக்ஞைகளை அபகரிக்கும் வல்லமை மற்றும் இடைக்கண்ட ஏவுகணை வீச்சுக்களின் பாதைகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டவை என்பதனாலும், அக் கப்பலின் வீச்செல்லை சுமார் 750 கி.மீ தூரம் வரை செல்லும் என்பதாலும் இந்தியாவுக்கு இக் கப்பலின் வருகை மிகவும் சிக்கலாக இருந்தது. இப்போது இந்தியாவின் அழுத்தம் காரணமாக கப்பலிற்கான தரையொதுங்கும் அனுமதி பின்போடப்பட்டுள்ளது.

இக் கப்பலின் வருகைக்கான அனுமதி ஜூலை 12 என இலங்கை அரசு அறிவித்திருந்ததும், முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச 13 ம் திகதி பதவி விலகுவதற்கு முன்னர் இவ்வனுமதியை வழங்கியிருந்தார் எனவும் தற்போதைய அரசுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனவும் காரணம் கூறப்படுகிறது. இவ்வனுமதி வழங்கலுக்கான முடிவை வழக்கமாக வெளிவிவகார அமைச்சே எடுப்பது வழக்கமானாலும் அதை ஆலோசிக்காமல் இந்தத் தடவை பாதுகாப்பு அமைச்சே அம் முடிவை எடுத்திருந்தது எனவும் கூறப்படுகிறது. இக் காலகட்டத்த்தில் துறைமுக அமைச்சர் இலஞ்சக் குற்றச்சாட்டு காரணமாகப் பதவி நீக்கப்பட்டிருந்தமையால் அவருக்கும் இவ்விடயம் மறைக்கப்பட்டிருந்தது. அரகாலயர் போராட்டம் முற்றியிருந்த இக் காலத்தில்தான் கோதாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியிருந்தார். அது மட்டுமல்லாது கோதாபயவின் அதி முக்கிய ஆலோசகராகவும் ரணிலே இருந்துவந்தார். எனவே ரணிலுக்குத் தெரியாமல் இவ்விடயம் நடந்திருக்க முடியாது. ஜூலை 13 இல் பதவி விலகும் கோதாபய ஜூலை 12 இல் இக் கப்பலின் வருகைக்கான அனுமதியை வழங்கவேண்டிய சூழ்நிலையில் இருந்திருக்கவில்லை.

இது மட்டுமல்ல இந்தியாவைக் கடுப்பாக்கிய விடயம். தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கு இதுவரை பணம், கடன், பொருளுதவி என்று சுமார் $4 பில்லியன் தொகையை இந்தியா தாரை வார்த்திருக்கிறது. அத்தோடு பொருளாதார இடரிலிருந்து இலங்கையை மீட்க சர்வதேச நாணய நிதியத்திடம் பரிந்துபேசிக் கடனுதவிக்கான முயற்சிகளில் இந்தியா உதவி செய்துவருகிறது. இலங்கையில் சீனாவின் தலையீட்டைக் குறைப்பதற்காகவே இந்தியா இந்த உதவிகளைச் செய்தாலும் அது இக்கட்டான காலத்தில் செய்யப்பட்ட பேருதவி. அப்படியிருந்தும் இக் கப்பலின் வருகையை இலங்கை இந்தியாவுக்கு அறிவிக்காமல் இரகசியமாகவே வைத்திருந்தது இலங்கை இச் செய்தி தற்செயலாக சீனாவின் இணையத்தளமான Belt and Road Initiative- Sri Lanka மூலம் தெரியவந்த பிறகே இந்தியா உசாரானது. அப்போதுகூட “அது ஒரு ஆராய்ச்சிக் கப்பல்” என சமாதானம் கூறி மழுப்பப் பார்த்தது இலங்கை. ஆனால் இக்கப்பல் சீன மக்கள் இராணுவத்தின் அதி சக்திவாய்ந்த உளவுக்கப்பல் என்ற விபரங்களை இந்தியா ஏற்கெனவே அறிந்துகொண்டுவிட்ட படியால் இலங்கை மீதான அதன் கடுப்பு அதிகமானது.

இவ் விவகாரம் வெளியே தெரிந்ததும் ரணில் விக்கிரமசிங்க அரசு கோதாபய மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்கப்பார்த்தது. இருப்பினும் இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தங்களாலும் எச்சரிக்கைகளாலும் இக் கப்பலின் வருகை தற்காலிகமாகப் பின்போடப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தென்னிலங்கை ஊடகங்கள் சீனக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை மீளப்பெற்றுவிட்டது என்பதாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இக் கப்பல் தரை ஒதுங்குமிடம் அம்பாந்தோட்டைத் துறைமுகம் என்பதும், 2017 இல் அது 99 வருடக் குத்தகையில் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது எனபதும், அதைச் செய்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்பதும் இப் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் உள்ளாக்கி வருகின்றன. இதே வேளை ரணில் விக்கிரமசிங்காவுக்குத் தெரியாமல் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, ரைறான் அலிஸ் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் சதி செய்துவருவதாகவும் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து ரணில் நாட்டை மீட்டுக்கொடுத்ததும் அவரைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காகவே ராஜபக்ச விசுவாசிகளைக் கொண்ட பாராளுமன்றப் பெரும்பான்மை ரணிலை ஆட்சியில் தற்காலிகமாகத் தாங்கிப் பிடித்து வருவதாகவும் இன்னுமொரு செய்தியும் தென்னிலங்கையில் உலாவுகிறது.

என்ன இருந்தாலும் சீனாவிலிருந்து ஏற்கெனவே புறப்பட்டுவிட்ட இக் கப்பலை வலுக்கட்டாயமாக சீனா தனது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கொண்டுவரும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தாய்வான் விடயத்தில் சீனா அமெரிக்காவுடன் பொருதுவதற்குத் தயாராகும் வேளையில் இப்படியான உளவுக்கப்பல்கள் மூலம் செய்மதித் தொடர்பாடல்களையும், இடைக் கண்ட ஏவுகணை நகர்வுகளையும் (Intercontinental Balistic Missiles (ICBM)) சீனாவினால் கண்காணிக்க முடியும். எனவே எப்படியான உதவிகளை இந்தியா செய்தாலும் இலங்கை தொடர்ந்தும் இந்தியாவின் எதிரிகளோடு இணைந்து செயற்படத் தயங்காது என்பதையே இவ்வுளவுக் கப்பலின் விவகாரம் அறைந்து சொல்கிறது. இதனால் இந்தியா பாடம் கற்றுக்கொள்ளுமானால் அது இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களைத் தனது இலக்குக்குள் கொண்டுவருவதாகவே இருக்கும்.