Sri Lanka

சீன-இலங்கை உறவு | அமெரிக்காவின் புதிய நிர்வாகம் இலங்கை மீது அழுத்தத்தை அதிகரிக்குமா?


மாயமான்

பைடன் நிர்வாகத்தின் இரண்டு நியமனங்கள் மிக முக்கியமானவை. ஒன்று அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையில் இடம் பெறும் சமாந்தா பவர். மற்றது உள்ளகக் கொள்கை வகுப்பின் முக்கிய பதவியில் அமரும் சூசன் றைஸ். இந்த இரண்டு பெண்களும் நேர்மையான, முற்போக்கான, திடகாத்திரமான கொள்கை வகுப்பாளர்கள்.

ஒபாமாவின் நிர்வாகத்தில் அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதியாக இருந்த பவர் தற்போது USAID என்னும் அமெரிக்க உதவி நிறுவனத்திற்கும் தலைமை தாங்குகிறார். அதைவிட அவரது தேசியப் பாதுகாப்புச் சபை நியமனம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் ஒரு முக்கிய பதவி. இனப்படுகொலை பற்றி அவர் எழுதிய நூல் மிகவும் பிரபலமானது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்ளிட்ஸின் இன்றைய அறிக்கை மூலம் பவரின் வரவு தெளிவாகப் புலப்படுகிறது.

இலங்கையில் சீனா மேற்கொள்ளும் உட்கட்டுமான நடவடிக்கைகள் குறித்து தூதுவர் ரெப்ளிட்ஸ் மீண்டும் தனது கரிசனையை வெளியிட்டிருக்கிறார்.

“அமெரிக்க வணிக நிறுவனங்கள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை நிறைவுசெய்யவே விரும்புகின்றன. ஆனால் அதற்கான சம சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். பொதுக் கொள்வனவு முதல் ஒப்பந்தங்களுக்கான விண்ணப்பங்கள் (tenders) வரை தனியார் நிறுவனங்களுக்கான சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலகுவான இடமாக இலங்கை இருக்க வேண்டும். இவ் விடயங்கள் பங்காளிகளிடையே திறந்த, வெளிப்படைத் தன்மையுடன் கூடியதாகவும் பரஸ்பரம் நன்மை பயப்பனவாகவும் இருக்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது” எனத் தூதுவர் ரெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.சீனாவுடனான இலங்கையின் உறவு இப்படியாக இருக்குமானால் அதைத் தாம் ஊக்குவிப்பதாகவும் ஆனால் சீனாவுடன் அப்படியொரு பங்காளியாக இருப்பதன் மூலம் இலங்கை பெரிதாக எதைப் பெற்றுவிடப் போகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் சீனா மேற்கொள்ளும் சில திட்டங்கள் பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் தமக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்தார். இத் திட்டங்களில் சில சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இலங்கையின் உள்நாட்டு நிறுவனங்களுக்கு இத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்படாமை போன்ற விடயங்கள் பற்றித் தான் குழப்பமுறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கையர்கள் எதிர்பார்க்கும் நீண்டகால அபிவிருத்தியை இவை தரமாட்டா” என நேற்று அவர் ஊடகவியலாளருடன் மேற்கொண்ட வட்ட மேசை சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.

தீவுப்பகுதியில் மின்வழங்கல் திட்டமொன்றை எந்தவித பொது அறிவிப்பும் இல்லாமல் சீன நிறுவனமொன்றிற்கு இலங்கை அரசாங்கம் கடந்த சில நாட்களின் முன்னர் வழங்கியிருந்தது.

ட்றம்ப் நிர்வாகத்தில் இந்து சமுத்திரத்தில் சீன-அமெரிக்க பலப்போட்டி உக்கிரமாகப் பேசப்பட்டிருந்தாலும் பிராந்திய பிரதிநிதிகளுக்கு உறுதியான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. பைடன் நிர்வாகத்தில் சமாந்தா பவர் போன்றவர்களின் வருகை பிராந்திய ரீதியில் முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை மீளவும் வழங்குகிறது. தூதுவர் ரெப்ளிட்ஸின் இலங்கை மீதான காட்டமான அறிக்கைகள் இதையேதான் காட்டுகின்றன.மனித உரிமைகள் விடயத்திலும், பைடன் நிர்வாகம் மிக உறுதியோடு செயற்படும் போக்கு தெரிகிறது. ட்றம்ப் நிர்வாகத்தின்போது அமெரிக்கா ஐ.நா.மனித உரிமைகள் சபையிலிருந்து விலகியிருந்தது. பைடன் நிர்வாகத்தில் அமெரிக்கா மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இணையக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஏற்கெனவே இலங்கை மீது கடும் அதிருப்தியோடு இருக்கும் மனித உரிமை ஆணையாளர் பக்கெலெ போன்றோருக்கு இது வலுச் சேர்க்குமெனெ எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையின் முந்திய அரசும், தற்போதைய அரசும் மிகவும் மந்தகதியில் இயங்கியிருந்தன எனவும் இவ்விடயத்தில், பைடன் நிர்வாகம் இலங்கை மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க சபையிலுள்ள இதர நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றுமெனெவும் தூதுவத் ரெப்ளிட்ஸ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.

அடுத்து வரும் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் ஆணையாளர் பக்கலெயின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. அவ்வறிக்கையின் வரைவு, ஏற்கெனவே இலங்கை அரசாங்கத்திற்கு தகவற் பிழை / சரிபார்ப்பிற்காக அனுப்பப்பட்டிருந்தது. வெளிவிவகார அமைச்சின் முக்கிய பதவியிலுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி அதைத் தனக்குப் பிரியமான ஊடகமொன்றின் மூலம் பொதுவெளியில் உலாவ விட்டது பற்றி ஆணையாளர் மிகவும் ஆத்திரமுற்றிருக்கிறார் எனவும் 30/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை நடவ்டிக்கைகளை மேற்கொள்ளாத படியால் இலங்கை மீது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்க்குப் பரிந்துரைப்பது, பொருளாதாரத் தடை, பயணத்தடை போன்ற மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாமென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வேளையில் சாதகாமான அமெரிக்க நிர்வாகம் இருப்பது இலங்கைத் தமிழர் விடயத்தில் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.