சீனா: 12 நாட்களாக வட்டமிடும் செம்மறியாடுகள் – மர்மம் துலங்கியது?

தொடர்ந்து 12 நாட்களாக சீனாவிலுள்ள ஒரு பண்ணையில் செம்மறியாடுகள் ஒரே வட்டத்தில் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தியும் காணொளியும் வந்திருந்தன. இதற்கான விளக்கமொன்றை பிரித்தானிய பேராசியர் ஒருவர் தற்போது கொடுத்திருக்கிறார்.

பிரித்தானியாவிலுள்ள ஹார்ட்பெரி பல்கலைக்கழகத்தின் விவசாய பீடப் பேராசிரியரான மற் பெல் என்பவர் கொடுத்த இந்த விளக்கத்தில், இச் செம்மறியாடுகளைப் பண்ணைக்காரர் ஒரே இடத்தில் தொடர்ந்து பல நாட்களுக்குப் பூட்டி வைத்திருப்பதனால் அவற்றின் மனநிலை பாதித்து ஒருவரையொருவர் பின்பற்றி வட்டத்தில் நடக்கவாரம்பிக்கின்றன என்கிறார். மூடிய இடத்தில் இருக்கும்போது சிலருக்கு ஏற்படும் மனத்தவிப்பு (claustrophobia) இச் செம்மறியாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என இப் பேராசிரியர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ஒரே இடத்தில் நீண்டநாட்கள் முடக்கப்படும்போது ஏற்படும் விரக்தியும் அதனால் ஏற்படும் மன அழுத்தமும் இப்படியான முணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றன என்கிறார் அவர்.

மொங்கோலியாவின் நாட்டுப்புறமொன்றிலுள்ள பண்ணையொன்றில் எடுக்கப்பட்ட இச்செம்மறியாடுகள் பற்றிய காணொளி சீனாவின் ‘பீப்பிள்ஸ் டெய்லி’ இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. முதலில் சில ஆடுகளே இந்த வட்ட அசைவை மேற்கொண்டிருந்தன எனவும் பின்னர் பண்ணையிலுள்ள அனைத்து ஆடுகளும் அவற்றைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டன எனவும் இப்பண்ணையின் உரிமையாளரான செல்வி மியாவோ கூறியிருக்கிறார். நவம்பர் மாத நடுப்பகுதியில் இச்சுற்றுநடை ஆரம்பித்தது எனவும் பின்னர் அவை நடையைக் கைவிட்டுவிட்டனவா என்பது பற்றியும் செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே வேளை வேறு பண்ணைகளில் இப்படியான ந்டைமுறைகள் எதுவும் அவதானிக்கப்படவில்லை எனக் கூறப்படுக்கிறது. சென்ற வருடம் இங்கிலாந்திலுள்ள ஒரு பண்னையிலும் செம்மறி ஆடுகள் பலவட்டங்களில் நடந்து ‘எதிர்ப்பைத்’ தெரிவித்திருந்தன.