Health

சீனா, கோவிட்-19 ஆதாரங்களை மறைத்துவிட்டது – வூஹான் மருத்துவர்


உலகின் 95% மான தொற்றுக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் – பேரா. ரேற்றம்

ஜூலை 28, 2020: கொறோணாவைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றவாரம்பித்துவிட்டது எனத் தெரிந்த பின்னரும், சீன அரசு ஒரு வாரத்துக்கு மேல் அத் தகவலைப் பகிராமல் மறைத்துவிட்டது என ஆரமபத்திலேயே பல கோவிட்-19 நோயாளிகளை அடையாளம் கண்ட வூஹான் மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

ஜனவரி 12 இல், வூஹான் நகரிலிருந்து 700 மைல்களுக்கு அப்பாலுள்ள செஞ்சென் என்னுமிடத்தில் ஒரு குடும்பம் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்ததை பேராசிரியர், மருத்துவர் குவொக் யுங் யுவென் கண்டு பிடித்தார். இக் குடும்பத்தில் சிலர் வூஹானுக்குச் சென்று வந்திருந்ததை யுவென் ஏற்கெனவே அறிந்திருந்தார். இச்சம்பவத்தின் மூலம் வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தாவுகிறது என்பதை பேராசிரியர் யுவென் ஊகித்தார்.

அவர் உடனடியாகச் செய்தது, தலைநகரிலுள்ள அதிகாரிகளுக்கு தனது சந்தேகம் பற்றி அறிவித்தமை. ஆனால் சீன அரசு எட்டு நாட்களுக்குப் பிறகுதான் உலகத்திற்கு இவ்வைரஸின் தொற்றுத் தன்மை பற்றி அறிவித்தது.

இதற்கு முன்னர் இன்னுமொரு மருத்துவர் டிசம்பர் மாதத்திலேயே இந் நோய்த்தொற்றின் ஆபத்து பற்றி எச்சரிக்கை செய்திருந்தார். ஆனால் சீனாவின் மத்திய அரசும், வூஹான் நகராட்சியும் அவரைக் கட்டுப்படுத்தியதோடு அவரது எச்சரிக்கையையும் புறந்தள்ளியிருந்தனர்.

பேராசிரியர் யுவென் பி.பி.சி. பனோரமா நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில், ஆரம்ப நோய்த் தொற்றின் தீவிரத்தை சீன அரசு மறைத்திருக்கலாமெனவும், பல ஆதாரங்களை அது அழித்துவிட்டிருக்கலாமெனவும், இந்நோய் பற்றி மருத்துவ சமூகம் கொடுத்திருந்த தகவல்களை உலகுக்கு அறிவிக்காமல், வேண்டுமென்றே தாமதித்திருக்கலாமெனவும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ஹூனானிலுள்ள சந்தைக்குப் போகும்போது அங்கு எல்லாமே அகற்றப்பட்டுத் துப்புரவாக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கு வைரஸைக் ‘கொடுத்த’ அந்த மூலம் அங்கு இருக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.

சீன அரசு, பல தகவல்களை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவுமில்லை, பகிர்ந்தவற்றையும் மிகவும் தாமதமாகவே செய்திருந்தது. அது உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் பல மரணங்களைத் தவிர்த்திருக்கலாம். பல நாடுகளின் பொருளாதாரச் சீரழிவுகள் குறைக்கப்பட்டிருக்கலாம்.“தகவல்களை மறைத்துவிடும்படி வூஹான் அதிகாரிகளுக்கு, சீன மத்திய அரசினால் கட்டளைகள் வழங்கப்பட்டிருந்தன” என்கிறார் பேராசிரியர் யுவேன்.

ஜனவரி மாதம் வூஹானிலுள்ள ஒரு மருத்துவர், ‘இந்த ஆபத்தான புதிய வைரஸின் தாக்கத்தை சாதாரண நிமோனியா சிகிச்சைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று இதர மருத்துவர்களுக்கு எச்சரிக்கையை விடுத்தததற்காக உள்ளூர் அதிகாரிகள் அவரைத் தண்டித்திருந்தனர்.

இப்படியான ஆபத்தான சூழ்நிலையிலும், லீ வென்லியாங் என்ற இந்த மருத்துவர் வூஹான் மருத்துவமனைக்குக் கடமையாற்றும்போது நோய்த் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்தார். இவரது மரணம் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக எழுப்பிய எதிரலைகளை அரசு உடனடியாக நீக்கிவிட்டது.

கோவிட்-19 நோய்ப் பரவல் பற்றிய தகவல்களைத் தாம் பொறுப்புணர்வோடு, வெளிப்படையாக முன்வைக்கிறோம் என சீன அரசு தொடர்ந்து கூறி வருகிறது. உலக சுகாதார நிறுவனமும் இதையிட்டு சீனாவைப் புகழ்ந்து பேசி வருகிறது.

“ஜனவரி 23 ம் திகதி சீன அரசினால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் ஜனவரி 2ம் திகதியே மேற்கொள்ளப்பட்டிருந்தால் தற்போதைய தொற்றுக்களின் 95% தடுக்கப்பட்டிருக்கும்” என்கிறார் செளதாம்ப்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அண்ட்றூ ரேற்றம்.