சீனாவில் பணி மற்றும் கல்வி நிமித்தம் காரணமாகத் தங்கியிருக்கும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களால் முறைகேடாக நடத்தப்படுவதும், வாடகை வீடுகளிலிருந்து அகற்றப்படுவதும் பரவலாக நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது.
இது குறித்துப் பல ஆபிரிக்க நாடுகளின் அரசாங்கங்கள் சீன அரசுக்குத் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக, சீனாவின் தென் மாகாணமான குவான்சூவில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர் முறைகேடாக நடத்தப்பட்டும், பொதுமக்களால் மிரட்டப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டுமுள்ளனரெனவும் இவி விடயத்தில் சீனா உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனப் பல ஆபிரிக்க நாடுகள் சீனாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன.
குவாங்சூ மாகாணத்தில் வதியும் பல ஆபிரிக்கர்கள் அவர்கள் வதியும் தொடர் மாடிக் குடியிருப்புகளில் இருந்து உரிமையாளர்களால் வெளியேற்றப்படுவதும், பலர் பல தடவைகள் வைரஸ் தொற்றுக்காய்ப் பரிசோதிக்கப்பட்டிருந்தும் அப் பரிசோதனைகள் பற்றிய முடிவுகள் எதுவும் வழங்கப்பட்டமல் மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம் முறைப்பாடுகள் பற்றிய செய்திகள் உள்ளூர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்துள்ளன.
வூஹான் நகரில் கோவிட்-19 நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிலிருந்து, பேஜிங் அரசு, வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் நோயை மீண்டும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகச் செயற்பட்டு வருகிறது. இதன் நிமித்தம், எல்லைக் கட்டுப்பாடுகளை விஸ்தரித்தும், வெளிநாட்டுக்காரரைக் கண்காணிக்கும் செயற்பாடுகளை அதிகரித்தும் வருகின்றது. இன் நடவடிக்கைகளை இனவாத ரீதியில் பார்க்கக்கூடாது என அரசு கூறுகிறது.
இரண்டாவது தடவையாக வந்த நோய்த் தொற்றுக்கு குவான்சூவில் வதியும் ஆபிரிக்கர்களே காரணம் என்ற தகவலும் சீனர்களிடையே பரப்பபபட்டுள்ளதும் இச் சம்பவங்களுக்குக் காரணமாகலாமெனவும் கருதப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட 114 புதிய தொற்றுக்களில், 16 பேர் குவான்சூவிலுள்ள ஆபிரிக்கர்கள் எனச் சீனத் தரப்புக் கூறுகிறது.
பல ஆபிரிக்க நாடுகளின் தூதுவர்கள் இணைந்து, இது குறித்து முக்கிய சீன பிரதானியான வாங் யிக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளனர். ஓட்டல்களிலிருந்து நடு ராத்திரியில் தம் மக்கள் எழுப்பப்பட்டு வெளியேற்றப்படுவது பற்றியும், கடவுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்படுவது பற்றியும், விசா அனுமதி மீளப்பெறுவது பற்றிய மிரட்டல்கள் பற்றியும், கைது செய்யப்படுவதோ அல்லது நாடுகடத்தப்படுவது பற்றியும், பல சம்பவங்களைப் பற்றி அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இருப்பினும் சீன அரசு எதற்கும் செவி சாய்ப்பதாயில்லை. இன்று (ஞாயிறு) நடைபெற்ற ஊடகவியலாலர் மாநாட்டில், “தேசிய எல்லைகளைக் கடந்து வரும் அத்தனை பேரும், இனம், பால், தேசியம் என்பவற்றைக் கடந்து, குவாங்சூ வின் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பணிந்துபோகத்தான் வேண்டும்” என அறிவித்திருக்கிறது.
சீனாவின் பட்டுத் தெருத் திட்டத்தின்கீழ், பல்வேறு ஆபிரிக்க நாடுகளிலும் சீன அரசு பல உட்கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. பல்லாயிரக் கணக்கான சீனப் பணியாளர்கள் அந் நாடுகளில் பணி நிமித்தம் தங்கியிருக்கிறார்கள். சீனாவில் நடைபெறும் ஆபிரிக்கர்கள் மீதான குறிவைப்பு சீனப்பணியாளர் மீது எதிர்நடவடிக்கைகளை உருவாக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டென ஆபிரிக்கத் தூதுவர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.