Sri Lanka

சீனாவுக்கு கனிம மண் ஏற்றுமதி

சீனாவுக்கு 60,000 தொன் கனிம மண் (இல்மனைட்) ஏற்றுமதி செய்வதற்கு தயாராவதாக லங்கா கனிம மணல் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்காக் இரண்டு கப்பல்கள் விரைவில் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடயுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இல்மனைட் மணலில் ரைற்றேனியம் என்ற கனிமம் இருக்கிறது. அதி வெட்பநிலையைத் தாங்கக்கூடிய உலோகங்களைச் செய்வதற்கு இக்கனிமம் பாவிக்கப்படுகிறது. இவ்வுலோகத்தின் கடினத்தன்மை காரணமாக விமானம், ஏவுகணை, விண்கலம் போன்றவற்றின் தயாரிப்பில் இவ்வுலோகம் பாவிக்கப்படுகிறது.

இதே போன்று சென்ற வாரம் அமைச்சர் ரமேஷ் பத்திரானாவின் மேற்பார்வையில் 30,000 தொன் சேர்கோன் (zircon) கனிமம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் காணப்படும் மண் பல்வகையான கனிமங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நவீன தொழில்நுட்பத்திற்கு அவசியமான றேர் ஏர்த் கனிமங்களின் பாவனை தற்போது உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகிறது. சீனா தனது பொருளாதாரக் காலனி நாடுகளிலிருந்து இக்கனிமங்களை நேரடியாக வாங்கியோ அல்லது மறைமுக வழிகளிலோ பெற்றுக் கொள்கிறது. சில வருடங்களின் முன் மட்டக்களப்புக்கு அருகாமையில் நீண்டகால தரித்து நின்ற சீனக் கப்பலொன்று கடல் மண் ஏற்றுவதற்காக நின்றது எனக் கூறப்பட்டது. இதே போன்று சிங்கராஜா வனத்தை அண்டிய ஆற்று மண்ணை சீனப் படகுகள் இலவசமாகத் தூர்வாரிக் கொடுத்தன எனவும் செய்திகள் வந்தன. மலைகளிலிருந்து அருவிகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும் இம்மண்ணில் பல கனிமங்கள் இருக்கின்றன.