சீனாவிலிருந்து வெளியேறுங்கள் | அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு! -

சீனாவிலிருந்து வெளியேறுங்கள் | அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு!

தீர்வை அதிகரிப்பு, சந்தையில் வீழ்ச்சி

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தீர்வையை மேலும் அதிகரிக்கப் போவதாக ட்ரம்ப் தன் கீச்சல் செய்தியில் அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.

அக்டோபர் 1 இலிருந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 25% தீர்வையை 30% மாக அதிகரிக்கப் போகிறேன் என்று ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அத்தோடு சீனாவில் இருந்து தமது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அங்கிருந்து புறப்படும்படியும் அமெரிக்கவிலேயே அவற்றை உற்பத்தி செய்யும்படியும் ட்ரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.

அமெரிக்க பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது என்பதால் அதன் தாக்கத்தைச் சமாளிக்க வட்டி வீதத்தைக் குறைக்கும்படி ட்ரம்ப் மத்திய றிசேர்வ் வங்கியின் தலைவர் ஜெறோம் பவலைக் கேட்டிருந்தார். பவல் இக் கோரிக்கைக்கு இணங்கவில்லை. சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலுள்ள வர்த்தகப் பிணக்கினாலேயே உலக பொருளாதாரம் சரிவைக் காண்கிறது என்பது பவலின் வாதம். இதனால் பவலை ‘எதிரி’ யாக்கிவிட்டார் ட்ரம்ப். ட்ரம்பின் சமூக வலைத்தளக் கீச்சல்களால் சந்தை அல்லற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இவ் வர்த்தகப் பிணக்குகளால் அதிகம் அடிபட்டுப் போவது தொழில்நுட்ப நிறுவனங்கள் தான். அவற்றின் பங்குச் சந்தைகள் தான் பெரு வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை உடனடியாக வெளியேற்மாறு பணிப்பதற்கு ட்ரம்ப் பிற்கு சட்டம் இடம் கொடுக்காது. ஆனாலும் வரி விதிப்பு, இறக்குமதித் தடை விதிப்பு போன்றவற்றால் நிறுவனங்களின் தொண்டைகளை நசுக்குவதன் மூலம் ட்ரம்ப் தான் நினைப்பதைச் சாதிக்கலாம். மத்திய அரசு தன் கொள்வனவுகளை இந் நிறுவனங்களிலுருந்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளலாம். போயிங், அப்பிள், ஜெனெரல் மோட்டர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் வணிக ரீதியில் சீனாவில் தளங்களைக் கொண்டவை. பல நிறுவனங்கள் அவற்றின் சில நடவடிக்கைகளை ஏற்கெனவே இடம் மாற்ற ஆரம்பித்து விட்டன. சில பெரிய நிறுவனங்கள் மத்திய அரசுடன் வழக்காடத் தயாராக உள்ளன.

இந்தப் பிணக்குகளுக்குள் உலக பொருளாதாரம் சிக்கிச் சீரழியத் தயாராகி விட்டது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *