“சீனாவின் நகரக் கழிவுகள் எமது நிலங்களை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது” – விஜித ஹேரத்

சீனாவின் நகரக் கழிவுகளை கனிம உரமெனக்கூறி (organic fertilizer) சில நேர்மையற்ற வியாபாரிகள் இறக்குமதி செய்ய முற்படுகிறார்கள் என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“சீனா தனது நகரக் கழிவுகளின் மீது யூரியாவைத் தெளித்துவிட்டு அவை கனிம உரமெனக்கூறிப் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இவ்வுரத்தை இலங்கைக்கும் இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிடுகிறது. எமது நிலங்களைஇக் கழிவுகளினால் மாசுபடுத்த நாம் அனுமதிக்கமுடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

கனிம உரங்களை அறிமுகப்படுத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபணையும் கிடையாது என்றும் இரசாயன உரத்தைத் தடைசெய்வதற்கு முன்னர் மாற்றீடாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கனிம உரங்களை வழங்க வல்ல பொறிமுறையொன்றை எமது விவசாயிகளுக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும் எனவும் ஹேரத் தெரிவித்தார்.

“எம்மிடம் அப்படியான பொறிமுறை இருக்கிறது. தேயிலை உற்பத்தி இன்று மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூருக்குத் தமது மரக்கறிவகைகளை ஏற்றுமதி செய்துவந்த விவசாயிகள் தற்போது தமது சந்தையை இழக்கும் நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் கனிம உரப் பாவனை குறித்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் எந்தவித ஆய்வையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.

கனிம உரங்களைப் பற்றி அறிய அரசாங்கம் 46 அங்கத்தவர்களைக் கொண்ட செயலணி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இதில் இருப்பவர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் நேர்மையற்ற வியாபாரிகள். அவர்களுக்காக ஒரு புதிய மாஃபியா வியாபார முன்னணியை அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்கிறது. விவசாயிகளைப் பாதிக்காது உள்ளூரில் கனிம உரங்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என விஜித ஹேரத் மெளும் தெரிவித்துள்ளார்.